30 ஜூன், 2010

சரத் அமுனுகம இருமணி நேரம் உரை; சபையில் ஐ. தே. க. கூச்சல்; குழப்பம்




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் சமர்ப்பிக்கப்பட்டது.

பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

இவ்வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நலனோம்பு திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சபையில் உரையாற்றத் தொடங்கியதும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் கூச்சல், குழப்பம், எழுப்பி இடையூறு செய்தனர்.

இருப்பினும் பதில் நிதியமைச்சர் எதிரணியினரின் இடையூறுகளைப் பொருட்படுத்தாது மக்கள் நலனோம்புத் திட்டங்களை சபையில் சமர்ப்பித்தார். பாராளுமன்றம், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 2.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகரின் அறிவிப்போடு பதில் நிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம பிற்பகல் 2.03 மணிக்கு சபையினுள் வரவு - செலவுத் திட்ட யோசனையுடன் வருகை தந்தார். அமைச்சரின் வருகையோடு ஆளும் கட்சி எம்.பிக்கள் தங்கள் மேசைகள் மீது தட்டி ஆரவாரம் தெரிவித்தனர்.

அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை பிற்பகல் 2.07 மணியளவில் ஆரம்பித்தார். வரவு - செலவு திட்ட உரையை அமைச்சர் நிகழ்த்தத் தொடங்கியதும் சபையில் பூரண அமைதி நிலவியது.

இருப்பினும், அரசின் மக்கள் நலனோம்பு திட்டங்களை அமைச்சர் அறிவிக்கத் தொடங்கிய சமயம் எதிரணியிலுள்ள ஐ. தே. க. எம்.பிக்கள் கூச்சல், குழப்பம் செய்து இடையூறு செய்தனர். குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டன. என்றாலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.

அமைச்சர் அமுனுகம இவ்வரவு - செலவுத் திட்ட உரையை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நிகழ்த்தினார்.

அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சர் உரையாற்றிய சமயம் சபாநாயகர் கலறியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் என்பவற்றின் தலைவர்கள், பணிப்பாளர்கள் எனப் பெருந்தொகையானோர் வருகை தந்திருந்தனர். அமைச்சர் வரவு - செலவுத் திட்ட உரையை மாலை 4.07 மணியளவில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து சபை அமர்வு இன்று 9.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக