30 ஜூன், 2010

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய `திடீர்' தாக்குதலில் 150 தலீபான்கள் பலி



ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்த பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ஆப்கானிஸ்தானிய ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் 150 தீவிரவாதிகள் பலியானார்கள்.

பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவந்தவர்கள்

பாகிஸ்தானில் தெற்கு வசிரீஸ்தான் பகுதியில் அந்த நாட்டு ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதால், தலீபான் தீவிரவாதிகள் பெரும் அளவில் அங்கு இருந்து தப்பி அருகில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள குனார் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு உள்ள மார்வாரா மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தலீபான் தீவிரவாதிகள் முகாமிட்டு இருந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், அமெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்துவது என்று தீர்மானித்தனர்.

விமானத்தில் 700 வீரர்கள்

ராணுவ வீரர்கள் நள்ளிரவில் ஹெலிகாப்டர்களில் அழைத்துவரப்பட்டு குனார் மாநில மலைப்பகுதிகளில் இறக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் இறக்கப்பட்டனர். பொழுது விடிவதற்கு முன்பே அவர்கள் அங்கு முகாமிட்டு இருந்த தலீபான்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள்.

தலீபான்களும் உஷாராகி பதிலடி கொடுத்தனர். இந்த சண்டை மிகப்பயங்கரமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய தாக்குதல், மறுநாள் காலையில் தான் முடிந்தது. இதில் 150 தலீபான்கள் பலியானார்கள். அவர்களில் பலர் பாகிஸ்தான் தலீபான்கள் ஆவார்கள். மெரிக்க ஆப்கானிஸ்தான் ராணுவ தரப்பில் 2 பேர் பலியானார்கள்.

துணைக்கவர்னர் உதவியுடன்

இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இந்த பகுதியின் துணைக்கவர்னர் தீவிரவாத இயக்கத்தில் கமாண்டராக இருந்தவர். இதனால் அவருக்கு இந்த பகுதியை பற்றி நன்கு தெரியும். இதனால் அவர் உதவியுடன் தான் ராணுவம் தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்தது. என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக