11 அக்டோபர், 2010

ரூ.4 கோடி பரிசு அறிவிக்கப்பட்டஅல்-குவைதா தலைவர் பலி


பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், அல்- குவைதா அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார்.லிபியா நாட்டைச் சேர்ந்தவர் அதியா அப்த் அல் ரஹ்மான். இவர், அல்-குவைதா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு 4 கோடி ரூபாய் பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வடக்கு வாசீரிஸ்தானில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில், ரஹ்மான் மற்றும் அவருடன் இருந்த மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அல்-குவைதாவைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரான காலித் முகமது அப்பாஸ் அல் ஹராபியும் இதேபோன்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

டி.எம்.வி.பி.க்கு எதிராக சாட்சியம்


இலங்கையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் விசாரணையில் சிலர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மீது தமது சந்தேகங்களை வெளியிடும் வகையில் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி நாள் அமர்வு செங்கலடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றபோது காணாமல் போனவர்கள் தொடர்பாக மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தமது சாட்சியங்களை பதிவு செய்து கொண்டனர்.

சாட்சியமளித்தவர்களில் பலர் காணாமல் போனவர்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினரைத் தொடர்புபடுத்தியிருந்தனர். அடையாளம் தெரியாத ஆட்கள் என்று குறிப்பிட்டு ஒரு சிலர் தமது சாட்சியங்களில் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால் வேறு சில சாட்சிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது சந்தேகங்கம் தெரிவிக்கும் விதமாக வாக்குமூலம் வழங்கினர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சுடரொலியின் தயார் மாரிமுத்து இரத்தினசிகாமனி சாட்சியமளிக்கையில், "விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிய தமது மகனை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் அழைத்துச் சென்றார்கள், அவர்களை விசாரித்தால்தான் காணாமல் போன தமது மகன் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியும்" என்று கூறியிருந்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த எச்.எம். முபீன் 2007 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம் திகதி தனது தொழிலின் நிமித்தம் ஏறாவூரிலிந்து மோட்டார் சைக்கிளில் கறுவாக்கேணிக்கு சென்ற தனது தந்தை தொடர்பாக எவ்வித தகவல்களும் இதுவரை இல்லை என்று தெரிவித்தார்.

"எனது தந்தைக்கு தொழில் ரீதியாக அறிமுகமான தமிழர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா பிரிவினரே தனது தந்தையை கடத்திச் சென்றுள்ளனர்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெருகல் சிறீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவரான இராசையா ஞானகணேசன், " எமது பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வேளை ஆயுத முனையில் விடுதலைப் புலிகளினால் ஆலய பாரம்பரிய நிர்வாக முறை மாற்றி அமைக்கபட்டது" என்று குறிப்பிட்டார்.

மீண்டும் பாரம்பரிய முறையில் ஆலய நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தீவிரவாதிகளை கண்டுபிடிக்க விமான பயணிகளின் காதுகளை “ஸ்கேன்” செய்ய முடிவு





உலகில் தீவிரவாதம் பெருகிவிட்டது. எனவே தீவிரவாதிகளை கண்டு பிடிக்க விமான நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலி பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்வதால் கைரேகை பரிசோதிக்கப்படுகிறது. ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை அறிய உடல் முழுவதும் “எஸ்க்ரே” மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது.

தற்போது புதிய முறையை கடை பிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக மனிதர்களின் காது அமைப்பு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

எனவே விமானத்தில் பயணம் செய்பவர்களின் காதுகளை ஸ்கேன் செய்தால் போதும். அதில் இருந்தே பயணம் செய்பவர் தீவிரவாதியா? அல்லது சாதாரண நபரா? என தெரிந்துவிடும்.

இது சரியான திட்டம் என இங்கிலாந்தில் உள்ள சவுதாம் டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில், முகத்தில் “மேக் அப்” போட்டு உருவத்தை மாற்ற முடியும். மேலும் முக பாவனைகள் மூலமும் தப்பிக்க முடியும்.

ஆனால் மனித உறுப்புகளில் “காது” தனிச்சிறப்பு வாய்ந்தது. அவை ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே காதின் அமைப்பை துள்ளியமாக ஸ்கேன் செய்தாலே போதும். பாஸ்போர்ட்டுடன் வருபவர் ஒரிஜினலா? அல்லது போலியா? என தெரிந்து விடும் என தெரிவித்துள்ளனர். இக்கருத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்கு துறை அமைக்க அனுமதி.

கோட்டைக் கல்லாறு பகுதியில் மீனவர் இறங்கு துறை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை கல்லாறு பகுதி கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கடற்கரை ஓரங்களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு தற்போது வனப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறியமுடிகிறது.

ஆனால் உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெறுவதற்கு முன்னர் அப்பிரதேச மீனவர்கள் அங்கு மீனவர் தங்குமிடங்களை அமைத்து தங்களது தொழில்களை மேற் கொண்டனர்.

ஆனால் தற்போது அங்கு அமைக்கப்பட இருந்த இறங்கு துறையினை அமைப்பதில் பல்வேறு இடர்பாடுகளை தாம் எதிர் நோக்கி வருவதாக அப் பிரதேச மீனவர்கள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து இன்று இது தொடர்பில் முதலமைச்சர் சந்திரகாந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்தாலோசித்து அப் பிரதேசம் உண்மையில் மீனவர்களுக்கான பிரதேசமாக இருப்பதனால் அங்கு இறங்கு துறையினை அமைப்தற்கு மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியது.
மேலும் இங்கே தொடர்க...

கோலாலம்பூரில் ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு வரவேற்பு


இலங்கையின் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ 4 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மலேஷியா சென்றுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெறும் முதல் பெண்மணிகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

கோலாலம்பூர் சென்றடைந்த ஷிராந்தி ராஜபக்ஷவை மலேஷியப் பிரதமரின் பாரியார் டட்டின் பதுகாசேவி ரொசமாப் மன்சோர் வரவேற்றார்.
மேலும் இங்கே தொடர்க...

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு



கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு மக்களுக்கு சாட்சியம் வழங்குவதற்காக கால அவகாசம் வழங்கியிருந்தது. கண்ணீர் மல்க சாட்சியமளிக்க வருகை தந்திருந்த அவர்களைப் பார்க்கும்போது இந்தப் பரிதாப நிலைக்கு யார் காரணம் என்றே வினா எழுப்பத் தோன்றுகிறது.

இறுதிக்கட்ட மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். படையினரால் கைது செய்யப்பட்ட பலரின் நிலை என்னவானது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

இந்தத் தகவலை வெளிப்படையாகச் சொல்லி நேற்றும் நேற்று முன்தினமும் ஆணைக்குழுமுன் நீதிகேட்டு நின்ற பெற்றோர், மனைவிமார் வெளிப்படுத்திய தகவல்கள் அதிர்வலைகளை உண்டுபண்ணுகின்றன.

"2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ஓமந்தை திறந்தவெளி மைதானத்தில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் எனது கணவரும் இருந்தார். ஆனால் அவரைக் கண்ட இறுதி தினம் அதுவாகத்தான் இருக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தயவு செய்து அவரை மீட்டுத் தாருங்கள்"

"இறுதிக்கட்ட மோதலின்போது சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எதுவுமே நடக்கவில்லை என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அது உண்மையா?"

"எனது கணவர் கொழும்பில் வெள்ளைவானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டார். உங்களைப்போன்ற பலரிடம் கண்ணீர்விட்டு முறைப்பாடு செய்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவாவது எனது கணவரைக் காட்டுங்கள்"

இவ்வாறு ஏராளமானோர் கதறியழுது கேட்ட கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அளிக்கும் பதில்தான் என்ன?

கருணா, பிள்ளையான் குழுவினர் எனக் கூறி தங்களது உறவுகளைக் கடத்திச்சென்றோர் குறித்தும் பொதுமக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.

இரகசிய சாட்சியங்கள்

அந்த சாட்சியங்கள் இரகசியமாகப் பதிவுசெய்துகொள்ளப்பட்டன.

இராணுவ சீருடையில் வந்து கடத்தியோர் குறித்து பொலிஸ் நிலையங்களிலும் அரச தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தாலும் இதுவரை அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மூலம் முறையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் சாட்சியமளித்துள்ளார்கள். அந்த நம்பிக்கைக்குப் பதிலாக நியாயமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் ஆணைக்குழுவின் விசாரணை நடைபெற்ற போது இதேபோன்று பெருந்திரளானோர் ஏக்கம் நிறைந்த, கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

குற்றவாளிகள் எனின் தண்டனை வழங்கப்பட வேண்டும். நிரபராதிகள் எனின் விடுவிக்கப்பட வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல் தண்டிக்கப்பட்டோரின் நிலை என்ன? இத்தனை குடும்பங்களின் சுமைகளையும் யார் தாங்கப்போகிறார்கள்?

இந்தக் கண்ணீருக்கு விடை என்ன என்பது போன்ற கேள்விகள் மனதின் மையங்களிலிருந்து எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆணைக்குழு தரும் பதில் மூலம் விரைவில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகாரிகளிடம் மன்னிப்புக் கோர மாட்டேன் : சரத் பொன்சேகா



சர்வாதிகாரிகளிடம் ஒருபோதும் மன்னிப்புக் கோரப் போவதில்லை என ஜனநாயகத் தேசியக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்.

வௌ்ளைக் கொடி வழக்கு தொடர்பில் நீதிமன்றுக்கு இன்று அழைத்து வரப்பட்ட போதே அவர், நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

"நாட்டின் சர்வாதிகாரிகளிடம் நான் எப்போதும் தலை குனியவும் மாட்டேன், மன்னிப்புக் கோரவும் மாட்டேன். வாழ்நாள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்க நேரிட்டாலும் ஒருவருக்கும் அடிபணிந்து போக மாட்டேன்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கைஇ 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைது..!

தாய்லாந்தில் தாய்லாந்து பொலிசாரும் கனேடியன் இன்ரர்போலும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 130ற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்களிள் 60 ஆண்கள் 50 பெண்கள் 7 கர்ப்பணித்தாய்மார்கள் 13 குழந்தைகளும் உள்ளனர் இவர்களுள் விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த இலங்கை அகதிகளும் கப்பலில் கனடாவிற்கு செல்வற்காக வந்திருந்த அகதிகளும் கைதுசெய்யப்பட்டு தாய்லாந்து குடிவரவு திணைக்கள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் உள்ளடங்கியுள்ளனர். இன்றுகாலை 06.30அளவில் தாய்லாந்தின் ஒஞ்சபூன் சபான்மை பொம்சிங் மற்றும் சபான்மை பிக்சி சுற்றுவட்டாரப் பிரதேசங்களை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தாய்லாந்து இராணுவத்தினர் மற்றும் கனேடிய இன்ரர்போல் பொலீசார் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையினை கனேடியன் இன்ரர்போலும் தாய்லாந்து இராணுவத்தினரும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாய்லாந்திலிருந்து கப்பலில் கனடாவுக்கு இலங்கையர்களை அனுப்பிவரும் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்இ இவர்களை அனுப்பிவைக்கும் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் தப்பியோடி விட்டதாகவும் தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தரப்பில் பேசப்படுகின்றது. அத்துடன் இன்றுகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டவேளை தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிவிட்டு 15 இலங்கையர்கள் தப்பியோடி விட்டதாகவும் இதனைத் தொடர்ந்து தாய்லாந்து இராணுவமும் கனேடியன் இன்ரர்போலும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது என்பவற்றின் பின்னணியின் இலங்கை தூதரகமும்இ கனேடியன் இன்டர்போலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்துகொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் அத்துடன் பிரதான முகவர்கள் உதவி முகவர்கள் சந்தேகநபர்கள் ஆகியோரின் பெயர் விபரம் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்திலிருந்து ராம்
மேலும் இங்கே தொடர்க...

தங்கம் கடத்த முயன்ற இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாகப் பெங்களூருக்குத் தங்கம் கடத்த முற்பட்ட யுவதிகள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இவர்கள் நேற்று முன் தினம் சோதனையிடப்பட்டபோதே, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைக் கைது செய்தனர்.

யுவதிகள் இருவரும் தம் உடலில் மறைத்து வைத்திருந்த 475 கிராம் தங்கம் முதலில் கைப்பற்றப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுக்குச் சுங்க அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் இவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களின் நடை, உடை பாவனையில் மீண்டும் சந்தேகம் ஏற்படவே, சுங்க அதிகாரிகள் இவர்களைத் திரும்பவும் சோதனையிட்டதில் மேலும் தங்கம் கைப்பற்றப்பட்டது.

மொத்தமாக இவர்களிடமிருந்து ஒரு கிலோ 173 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 51 லட்சம் ரூபாவாகும் என மதிப்பிடப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட தங்கம் அரசுடைமையாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புனித ஹஜ் : இலங்கையர் 5800 பேருக்கு இம்முறை சவூதி அரசு அனுமதி

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கை முஸ்லிம்கள் 5800 பேருக்கு சவூதி அரேபிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

முதலாவது ஹஜ் குழு எதிர்வரும் 17ஆம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதென இஸ்லாமிய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம். நபவி தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை ஹஜ் விவகாரக் குழ மேற்கொண்டு வருகிறது.

முதலாவது ஹஜ் குழுவில் செல்பவர்களைக் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் ஹஜ் குழுவின் தலைவர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமைக்காகச் செல்லும் ஹாஜிகளின் நலன் கருதி வைத்தியர் குழுக்களும் சவூதி அரேபியா செல்ல உள்ளது. இந்த வைத்தியக் குழுக்கள் மக்கா, மினா, அரபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் தமது சேவைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...