14 செப்டம்பர், 2010

திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைப்போம் : ரணில்



ஜனநாயகத்துக்கு விரோதமான 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டிருப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவருடன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, சிரேஷ்ட தலைவர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோசப் மைக்கல் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ரூவான் ஜயவர்த்தன, நிரோசன் பெரேரா ஆகியோரும் பங்கேற்றனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர்,

"18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் நாம் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். இன்று நடப்பது ஆரம்பக்கட்ட கூட்டமே.

18ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

18ஆவது அரசியல் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாத நிறைவில், 'எமக்கு ஜனநாயகம் வேண்டும்' என்ற செய்தியை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

18ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியல் யாப்புக்கும் முரணானது. அதிகாரத்தைக் குவித்து வைத்து நீண்டகாலம் ஆட்சி செய்யப் போவதாக கூறிய எத்தனையோ பேர், குறுகிய காலத்தில் வீழ்ச்சி கண்ட வரலாறுகள் நிறையவே உண்டு.

ஐக்கியத் தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு யோசனைகள் தற்போது செயற்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக இதுதொடர்பில் நடடிவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு



இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது. குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையின தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத்தோட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதே வேளை குறித்த தோட்டத்தின் மேற்பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற கைக்கலப்புச் சம்பவமொன்றில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தைத்தொடர்ந்தும் தமிழர்களின் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதனையடுத்து தோட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியக் கடல் எல்லையை கண்காணிக்கிறோம்: இலங்கைக் கடற்படை தளபதி தகவல்

வடக்கு இலங்கையில் உள்ளவர்களும் (தமிழ் மீனவர்கள்), இந்திய மீனவர்களும் (தமிழக மீனவர்கள்) ரகசியமாக தகவல் தொடர்பு எதையும் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தடுக்கத் தீவிரமாகக் கண்காணிப்பது அவசியமாக இருக்கிறது என்று இலங்கைக் கடற்படை துணைத் தளபதி வைஸ்-அட்மிரல் டி.எஸ்.ஜி. சமரசிங்க கூறுகிறார்.

தமிழ்ப் போராளிகளுடனான போரில் கற்ற பாடங்கள் குறித்து சமரசத்துக்கான கமிஷனிடம் தகவல்களைத் தெரிவித்தபோது இதை அவர் வலியுறுத்தினார்.

"விடுதலைப் புலிகளை அழித்திருந்தாலும் அவர்கள் மீண்டும் புதிய வடிவிலோ, பெயரிலோ மீண்டும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை மறுக்க முடியாது. ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வது மிக எளிதாக இருந்ததில்லை.

கடல்பரப்பில் அவர்கள் மிகுந்த சாகசக்காரர்களாக இருந்தார்கள். கடல் பரப்பையும் அதில் மீன்பிடிக்க வரும் ஆயிரக்கணக்கான படகுகளையும் கண்காணிப்பது எந்த நாட்டு கடற்படைக்கும் சவாலான வேலை.

வடக்கு இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள், இந்தியாவின் (தமிழ்நாட்டு) மீனவர்களோடு எளிதில் தொடர்பு கொண்டுவிடுவார்கள். அவர்களுடைய பேச்சும் பரிமாற்றமும் கடலில் மீன்பிடித்தலோடு இருக்கும்வரை நமக்கு ஆபத்து இல்லை. ஆனால் கடந்தகால அனுபவங்களை நாம் மறக்கக்கூடாது.

விடுதலைப் புலிகள் தங்களுக்கு வேண்டிய எரிபொருள், உணவு தானியங்கள், மருந்து - மாத்திரைகள், ஆயுதம் தயாரிப்பதற்கான கருவிகள், வெடிமருந்துகள், வெளிநாடுகளில் ஆயுதத் தரகர்களிடமிருந்து வாங்கிய நவீன ஆயுதங்கள் ஆகியவற்றைக் கடல் வழியாகத்தான் கடத்தி வந்தார்கள். எனவே கடல் போரில் அவர்களை வெல்வது மிகுந்த சவாலாக இருந்தது.

2002-2004 காலத்தில் இலங்கை ராணுவத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட காலத்தில்கூட விடுதலைப் புலிகள் இந்தக் கடல் வழியைத் தங்களுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதை நிறுத்தவே இல்லை. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வது அவசியம் என்று கருதுகிறேன்.

2003 பிப்ரவரி 6-ம் தேதி இந்திய நாட்டுப் படகு ஒன்று இலங்கையின் கடல் பரப்பில் வந்து கொண்டிருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று அறிய விரும்பினோம். விடுதலைப் புலிகளுக்காகத்தான் அதில் ஆயுதங்கள் கடத்தி வரப்படுகின்றன என்பதையும் ஊகித்துவிட்டோம். அப்போது இலங்கை கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டு நபர் ஒருவரை இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு படகில் அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவரையே அந்த இந்தியப் படகில் ஏறி என்னஇருக்கிறது என்று பார்க்குமாறு கூறினோம். அப்போது அவர் அதில் ஏறி ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனே அந்தப் படகில் இருந்தவர்கள் அவரை மிரட்டி கடலில் குதிக்க வைத்தனர். நாங்கள் அவரை உயிருடன் காப்பாற்றினோம் என்றாலும், எந்தவித தடயமும் எங்களுக்குக் கிடைக்காமல் இருக்க அந்தப் படகையே வெடி வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.

இப்போது வாரந்தோறும் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் 500-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இலங்கைக் கடல் பகுதிக்குள் வருகின்றன. அவை அங்கே இருப்பதை விடுதலைப் புலிகளோ அவர்களுடைய புதிய அவதாரமோ தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

2007 டிசம்பர் 26-ம் தேதி 14 பேருடன் இலங்கைக் கடற்படையின் அதிவிரைவு கண்காணிப்புப் படகு கடல் பரப்பில் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு கடல்புலி படையைச் சேர்ந்த தற்கொலைப் படை வீரர் அந்தப் படகின் அடியில் வந்து தன்னுடைய உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கி அந்தப் படகையே வெடிக்கவைத்து தகர்த்தார். படகில் இருந்த 14 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

அதனால்தான் இப்போது இந்தியக் கடல் எல்லையை வெகு கவனமாகத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். அப்படியும் சட்டவிரோதமான காரியங்கள் எங்கள் கண்ணிலும் சிக்காமல் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இலங்கையின் கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதால் இனி எதிர்காலத்தில் அடிக்கடி மோதல்கள் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. சட்டவிரோதமாக மீன் பிடிப்பதில் இந்திய மீனவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதால் அவர்களைக் கண்காணிப்பதும் பிடிப்பதும் பெரிய சவாலாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார் சமரசிங்கே.
மேலும் இங்கே தொடர்க...

வெனிசுலா விமான விபத்து: இருவர் சாவு





கராகஸ், செப்.13: வெனிசுலாவில் திங்கள்கிழமை 51 பேருடன் சென்ற விமானம் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது. மற்ற பயணிகள் என்ன ஆனார்கள் என்பது உள்ளிட்ட இந்த விபத்து குறித்து உடனடியாக முழுமையான தகவல் ஏதும் இல்லை.

மகர்கரிதா தீவில் இருந்து விமானம் சென்றுள்ளது. இதில் 47 பயணிகள், 4 விமான ஊழியர்கள் சென்றுள்ளனர். விமானம் பியூர்டோ ஆர்தேஸ் விமான நிலையத்தில் இறங்குவதாக இருந்தது.

ஆனால் விமானம் இறங்குவதற்கு முன்னதாகவே மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ கார்செஸ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்றுகாலை



நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவும் ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்றுகாலை உயர்நீதிமன்ற முன்றலில் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகவும் அந்தப் பதவிக்குத் தானே பொருத்தமானவர் என அறிவிக்குமாறும் கூறி சரத் பொன்சேகா உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்றுகாலை நடைபெற்றது.

சரத் பொன்சேகா நீதிமன்றத்துக்கு வருகை தந்தவேளை, அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் அங்கு இருந்துள்ளார். அவ்வேளையில் இருவரும் நலம் விசாரித்து கைகுலுக்கிக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கனடா சென்றோரில் முதன்முறையாக ஒரு தாயார் 3 குழந்தைகளுடன் விடுவிப்பு

எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்துள்ள 492 இலங்கையர்களில் முதன்முறையாக தமிழ் தாயார் ஒருவரும் அவரது 3 குழந்தைகளும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட அப் பெண்மணி யார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேற்படி கப்பலில் பயணம் செய்தவர்களில் பலர் தங்களை உறுதி செய்யும் வகையில், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற ஆதாரங்களைத் தம்முடன் வைத்திருக்கின்றனர்.

எனினும் அவற்றின் நம்பகத்தன்மையை தம்மால் உறுதி செய்யமுடியவில்லையென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரி ரொன் யமாயுச்சி தெரிவிக்கின்றார்.

இக்கப்பல் கடந்த மாதம் 12 ஆம் திகதி கனடாவைச் சென்றடைந்தது.

இக்கப்பல் பயணமானது விடுதலைபுலி உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வரும் மனித கடத்தல் நடவடிக்கையாக இருக்கலாமென கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டொவ்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் - இலங்கை

உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் அரசாங்கதினால் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா தேவையற்றதும், பொறுப்பற்றதுமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்க தனது சொந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் எனவும், இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களை அரசாங்கம் கவனத்திற் கொள்ளாது எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க வெளியிட்ட கருத்தின் மூலம் அரசாங்கத்தை மட்டுமன்றி நாட்டின் அதிஉயர் சட்ட பீடமான உச்ச நீதிமன்றத்தையும் இழிவுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டதெனவும், அமெரிக்காவின் விமர்சனம் கண்டிக்கப்பட வேண்டியதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தங்களை எவரும் விமர்சிக்க முடியாது எனவும் அதற்கான உரிமையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் ஜனநயாகத்தை உதாசீனம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளதென அமெரிக்கா அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை வருத்தமளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதென இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் இன்று பார்வதியம்மாவை பார்வையிட்ட பழ நெடுமாறனின் விசேட பிரதிநிதி

வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை உலகத் தமிழர் பேரவையின் செயலாளரான இராமசாமி பத்மநாபன் இன்று காலையில் சென்று பார்வையிட்டார்.

இவர் பேரவையின் தலைவரான பழ.நெடுமாறனின் விசேட பிரதியாகவே இவர் வந்திருந்தார். அவர் பார்வதி அம்மாளைப் பார்வையிட்டு நலத்தை அறிந்து கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

புலம் பெயர் தமிழர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்:பிரதமர்



இலங்கையில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ள போதிலும் 18 நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தேவஹந்தியே தம்மாராம தேரரை வரவேற்பதற்காக பத்தரமுல்ல ஸ்ரீ சுதர்மாராம புராண விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும் 18 நாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் இலங்கையைப் பிரித்துத் தனியான ராஜ்யமொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

18 பேராசிரியர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தலைவர் வரும் வரை தரையிறங்க மாட்டேன்

கொழும்பு ஹோட்டன் பிளேசில் அமைந்துள்ள சுமார் 50 அடி உயரமான விளம்பர தூண் ஒன்றில் ஏறிய நபர் ஒருவர், தன்னை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கும் வரை தரையிறங்க மாட்டேன் என இன்று காலை முதல் அச்சுறுத்தி வருகிறார். உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை தரையிறக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நபரைப் பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...