27 மே, 2010

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்


*
பள்ளிமுனை நீர்விநியோகம்
*
வவுனியா - கிளிநொச்சி, சுன்னாகம் மின் விநியோகம்
*
மன்னார், கிளிநொச்சி வைத்தியசாலைகள் புனரமைப்பு


மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மின்சாரம்

வட மாகாணத்தில் தேசிய மின்சார கட்டமைப்பை மேம்படுத்தி, வட பகுதி மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 69.4 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பல்வேறு மின்சார அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம். எம். சி. பேர்டினன்டோ தெரிவித்தார். வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரை 132 கிலோ வோல்ட் மின் இணைப்புக்களை ஆரம்பிக்கும் திட்டத்திற்கென ஜப்பான் அரசாங்கம் 33.6 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், கிளிநொச்சி முதல் சுன்னாகம் வரை 132 கிலோ வோல்ட் ‘கிரிட்’ உப நிலையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 32.9 மில். அமெரிக்க டொலர்களையும் கடனுதவியாக வழங்குகின்றது.

நீர் விநியோகம், நீர்ப்பாசனம்

மன்னார், பள்ளிமுனை பிரதேச மக்களின் நலன் கருதி 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிமுனை நீர் விநியோக திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர், இதன்மூலம் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன என்றார். அத்துடன் வவுனியா மன்னார் மக்களின் நலன் கருதி உலர் வளப் பகுதியில் நீர் விநியோக திட்டத்திற்கான அடிக்கல்லும் இன்று நாட்டப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சுகாதாரம்

மன்னார், கிளிநொச்சி மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் நோக்கில் இரு வைத்தியசாலைகளின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென வட மாகாண சபையினால் சுமார் 130 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள துடன், நெகோர்ட் அமைப்பின் ஊடாக புனர்நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. 80 மில்லியன் ரூபா செலவில் மன்னார் வைத்தியசாலையின் முன்று மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரு மாடிகளில் சத்திரசிகிச்சை வார்ட்கள் இரண்டும், கீழ் மாடியில் சத்திரசிகிச்சை கூடமும் அமைக்கப்பட்டு ள்ளது. சகல வசதிகளுடன் குளிரூட்டப்பட்டு ள்ளது.

சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி வைத்தியசாலையின் பல பகுதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட இரு வார்ட்களும், அவசர சேவை பிரிவும், சத்திரசிகிச்சை வார்ட்டும் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேலும் குறிப் பிட்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவங்களில் அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரணவக்க, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர, ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் ஹருஹிகோ, குருரோடா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குனிஓ தக்கஹாஷி, ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி அக்கிரா ஷிமூரா, மாவட்ட செயலாளர்கள் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...

போர் நடந்த இடங்களில் அமைதி : மந்திரி பெரிஸ் தகவல்





இலங்கையில் 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதியில், 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என, வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் தெரிவித்துள்ளார். போர் நடந்த இடங்களில் அமைதி தற்போது தவழ்வதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து பேசுகிறார்.

இலங்கை அமைச்சர் பெரிஸ், நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக சண்டை நடந்த பகுதிகளில், 2 லட்சத்து 97 ஆயிரம் மக்களை மீண்டும் குடியமர்த்தியுள்ளோம். தற்போது இலங்கையில் புதிய சூழல் நிலவுகிறது. இலங்கையில் பயங்கரவாதம் முறியடித்த பிறகு, அளப்பரிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.

புலிகளுடனான போர் முடிந்த பிறகு, வேறெந்த பயங்கரவாத நடவடிக்கையும் நடக்கவில்லை. மக்களின் மனநிலை மாறிவிட்டது. கடும் போர் நடந்த பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போது நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. திரிகோணமலை, கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகள், ஓட்டல்கள் போன்றவை செயல்படத் துவங்கியுள்ளன. இலங்கையில் புலிகளுடனான உச்சகட்டப் போர் நடந்த போது, போர் குற்றங்கள் நடந்ததாக ஒரு சில அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. இவ்வாறு பெரிஸ் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

விமானத்தில் குண்டு புரளி : முஷாரப் பயணம் பாதிப்பு

வாஷிங்டன் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் பயணித்த விமானத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியதால், விமானத்திலிருந்து அவர் கீழே இறக்கப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், 2008ல் பதவி விலகினார். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தங்கியுள்ள முஷாரப் மீது பாகிஸ்தான் அரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. நாடு திரும்பினால் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதால், முஷாரப் வெளிநாடுகளில் தங்கியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் நியூஜெர்சியிலிருந்து லண்டன் புறப்பட்ட விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அப்புறப்படுத்தப்ட்டனர். இந்த விமானத்தில் இருந்த முஷாரப், நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்ற தகவலையடுத்து, பயணிகள் மீண்டும் இந்த விமானத்தில் ஏற்றப்பட்டு லண்டன் சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

26 மே, 2010

போருக்கு பின்னர் கிளிநொச்சி

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் மக்கள் சந்திப்பு

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் மக்கள் சந்திப்பு


மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் மூலம், கிளிநொச்சி போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நகரங்கள் புத்துயிர் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்கள் மீள்குடியேற்றப் பகுதிகளையும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள சில இடங்களையும் பார்வையிட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்து வேறாக இருக்கின்றது.

மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி உட்பட பல பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடுகள், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் என்பனவும், சிவில் நிர்வாக நடவடிக்கைகளும் சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

எனினும் வன்னிப்பிரதேசத்திற்கு முதன் முறையாக நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்று திரும்பியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள் காடடர்ந்துள்ள தமது கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகளின்றி இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குடும்பம்
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பம்-கூடாரமே குடில்
மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு குடும்பம்
மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் இன்னும் அக்கறையோடு செயற்பட்டிருக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

யுத்தம் முடிந்து ஒரு வருடமாகிவிட்ட போதிலும், இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை தரக்கூடிய மாற்றங்கள் இன்னும் எற்படவில்லை எனக்கூறும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமது மக்களின் வாழ்க்கையில் அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படத்தக்க வகையில் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறார் போராளிகள் அனைவரும் விடுவிப்பு






பெற்றோருடன் முன்னாள் சிறார் போராளிகள் -ஆவணப்படம்
இலங்கையில் சென்ற ஆண்டு போர் முடிந்த போது பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சிறார் போராளிகள் அனைவரும் தற்போது அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்த முன்னாள் சிறார் போராளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களும் மூடப்பட்டுவிட்டதாக ஐ நா நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

போரில் பிடிபட்டவர்கள், சரணடைந்தவர்கள், பிறகு மக்களோடு மக்களாக அகதிகள் முகாம்களுக்கு வந்து பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் என சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகளை இலங்கை அரசு தடுப்பில் வைத்துள்ளது. இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. முறையற்ற இடங்களில் இவர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையான விடயமாக உள்ளது.


அம்பேபுசாவில் உள்ள முகாமில் முன்பு பயிற்சி பெற்ற முன்னாள் சிறார் போராளிகள்
அம்பேபுசாவில் உள்ள முகாமில் முன்பு பயிற்சி பெற்ற முன்னாள் சிறார் போராளிகள்

இதில் 566 பேர் பிடிபடும் போது 17 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக இருந்தனர். இவர்கள் சமூகத்துக்குத் திரும்பத் தேவையான முழுமையான தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஐ நா ஆமோதிக்கிறது

இந்த முன்னாள் போராளிகளின் பயிற்சிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி இவர்கள் கண்டுள்ள முன்னேற்றம் தனக்கு மிகுந்த திருப்தியைத் தருவதாக கூறுகிறார்.

ஐநாவின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, இவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் வேலை தேடுவதற்கும் தேவைப்படும் உதவிகளை தமது அமைப்பு செய்யும் என்று கூறியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட சிறார்களில் 50 பேர் கொழும்பில் ஏற்கனவே அவர்கள் படித்து வந்த பள்ளியிலேயே தமது மேற்படிப்பை தொடரவுள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்படுவதற்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் சில மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் சிலரின் குடும்பத்தினர் இன்னமும் முகாம்களில்தான் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொள்ள இருக்கும் விஜயத்தின் போது, இரு நாடுகளிடையே, அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவார் என்று செய்திகள் கூறுகின்றன.

மன்மோகன் சிங்-மஹிந்த ராஜபக்ஷ
இந்தியப் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி

ஆனால் ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளாக அமலில் இருக்கும் இந்திய இலங்கை சுதந்திர ஒப்பந்தம் இந்தியாவுக்கே சாதகமாக இருப்பதாக இலங்கையில் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இது போன்ற ஒரு புதிய ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடக்கூடாது என்று இலங்கையின் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஜனாதிபதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகளிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் நலன்களுக்கு எதிரான எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்போவதில்லை என்று உறுதியளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய ஒப்பந்தத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும், இலங்கை இந்திய சுதந்திர ஒப்பந்தம் குறித்த விமர்சனங்கள் அவ்வளவு சரியானவை அல்ல என்று இலங்கையின் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தா, கூறுகிறார்.

கடந்த பத்தாண்டு காலமாக அமலில் இருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்த காலத்துக்கு முன்பே கூட இந்தியாவின், இலங்கைக்கான ஏற்றுமதி அதிகமாகவே இருந்து வந்துள்ளது.

இது சரித்திரரீதியாகவே ,பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ள ஒன்று. ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக, இந்தியா மற்றும் இலங்கை வர்த்தகத்தில் , ஏற்றுமதி இறக்குமதிக்கிடையே காணப்படும் இடைவெளி குறைந்துள்ளது என்கிறார்.

புதிதாக கைச்சாத்தாகவுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதர கூட்டுறவு ஒப்பந்தம்,பொருட்களில் நடக்கும் வர்த்தகத்தைத் தாண்டி, சேவைகளுக்கும் கூட்டுறவை விஸ்தரிக்கும்.

இதன் கீழ், இந்தியா மற்றும் இலங்கை இடையே, மருத்துவ, சட்டத்தரணி போன்ற தொழிற் சேவைகள் பரிமாற்றம் சுதந்திரமாக நடக்க முடியும் என்கிறார் சர்வானந்தா.
மேலும் இங்கே தொடர்க...

ஈராக்கில் நகை தொழிலாளர்கள் 14 பேர் சுட்டுக்கொலை அல்கொய்தா தீவிரவாதிகள் அட்டகாசம்


ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில், நகை செய்யும் தொழில் நடக்கும் ஒரு கடைக்குள் தீவிரவாதிகள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவத்தில், நகை தொழிலாளர்கள் 14 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். பின்னர் அங்கிருந்த தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடினார்கள்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று தீவிரவாதிகளை விரட்டினார்கள். போலீசார் சுட்டதில் ஒரு தீவிரவாதி இறந்தான். கொலை-கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதிகள் என்றும், தீவிரவாதிகள் சத்தம் இல்லாமல் சுடும் துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் புதிதாக ஆறு வங்கிகளைத் திறக்கவுள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு





வடமாகாண பொருளாதார வசதி கருதி வடக்கில் புதிதாக ஆறு வங்கிகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி மாங்குளம், கிளிநொச்சி மற்றும் பரந்தன் ஆகிய பகுதிகளில் மூன்று மக்கள் வங்கிக் கிளைகள் திறக்கப்படவுள்ளதுடன்; கிளிநொச்சியில் கொமர்ஷல் மற்றும் செலான் வங்கிக் கிளைகளும் திறக்கப்படவுள்ளன. மேலும் யாழ் நகரில் நேஷன் ட்ரஸ்ட் வங்கிக் கிளை ஒன்று திறக்கப்படவுள்ளது. இதேவேளை எதிர்வரும் மாதங்களில் வடக்கு கிழக்கில் மேலும் பல வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான வழங்க ஈரான் இணக்கம்





இலங்கைக்கு 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனான வழங்க ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் அதனைச் சுத்திகரிப்பதற்கும் ஏற்றவகையிலேயே இந்தக் கடன்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் முன்னர் 30சதவீதமான புரிந்துணர்வு உடன்பாடுகளே காணப்பட்டன. ஆனால் தற்போது முழுமையாக உதவுவதற்கு ஈரான் முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் அளவை 1லட்சம் கொள்கலன்களாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீனாவின் நிர்மாண மற்றும் பொறியியல் நிறுவனம் முன்வந்துள்ளது. அதேவேளை இலங்கைக்குத் தேவையான எரிபொருட்களில் 60சதவீதமானவை ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அத்துடன் ரஸ்யாவிடமிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் வாபஸ்

கடந்த இருநாட்களாக தொடர்ந்த ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் இன்று மாலை வாபஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்:    போக்குவரத்து பாதிப்புஸ் பெறப்பட்டது.

ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டதால் ஊழியர்களின் போராட்டம் தொடர தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

இதனிடையே போராட்டத்தில் தீவிரம் காட்டிய 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியாவின் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...