25 டிசம்பர், 2010

அணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரிக்கை






சியோல் : "தென்கொரியா எல்லை மீறும் பட்சத்தில், அதன்மீது புனிதப் போர் தொடுப்போம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம்' என, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக, போச்சியான் என்ற இடத்தில் தென்கொரியா போர் ஒத்திகைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், சிறுரக ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ ஹெலிகாப்டர்கள், குண்டுவீசி தாக்கும் போர் விமானங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மலைகள் சூழ்ந்த போச்சியான் பகுதியில், தென்கொரிய ராணுவம் மேற்கொண்டுள்ள போர் ஒத்திகையால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. முதலில் இதுகுறித்து மவுனம் சாதித்த வடகொரியா, நேற்று இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் சுன் இதுபற்றி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனிதப் போர் தொடுப்பதற்கு, வடகொரியா முழுமையாக தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம். தென்கொரியாவின் போர் ஒத்திகை ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கை. தென்கொரியாவும், அமெரிக்காவும் வடகொரியாவுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளன. மிகவும் சிறிதளவு கூட எல்லையை தாண்டும் பட்சத்தில், எதிரி பயங்கரப் பேரழிவை சந்திக்க நேரிடும். தென்கொரியாவும், அமெரிக்காவும் போரை துவக்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும். இவ்வாறு சுன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிடம் ஆறு அணுகுண்டுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுத பிரயோகம் குறித்த வடகொரியாவின் மிரட்டல், பல நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சீனா சமாதானம்: இந்நிலையில், வடகொரியாவின் நட்பு நாடான சீனா, இருதரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளது. சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜியாங் யு நேற்று விடுத்த அறிக்கையில், "இப்போதைய சூழல் மிகவும் சிக்கலாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. அமைதியாக இருக்கும்படியும், போர் ஒத்திகையை கைவிடும்படியும் இருதரப்பையும் கேட்டு கொண்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா கண்டனம்: இதற்கிடையில் வடகொரியாவின் "புனிதப் போர்' அறிவிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகொரியாவின் மிரட்டலுக்கு அடிப்படையில் எவ்வித காரணமும் இல்லை. அணு ஆயுதத்தைப் பிரயோகம் செய்வதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்களை இதற்கு முன்பும் கேட்டிருக்கிறோம். ஆனால் இம்முறை, ஏவுகணை பரிசோதனை, அணுகுண்டு பரிசோதனை, தென்கொரியாவின் இயான்பியாங் தீவின் மீது குண்டு வீசுதல் போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்த, வடகொரியா தான் இந்த வார்த்தைகளை கூறியுள்ளது. தனது செயல்களுக்கு வடகொரியா பெருமை கொள்ள முடியாது. இவ்வாறு க்ரவுலி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக