29 டிசம்பர், 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களாக 110 பேருக்கு நிரந்தர நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதார துறை ஊழியர்கள் 110 பேருக்கு இன்று (29ம் திகதி) நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றன.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று காலை 10.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கவுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான விடுதி ஒன்றையும் நாமல் ராஜபக்ஷ எம்.பி இன்று ஆரம்பித்து வைக்கின்றார்.

வட மாகாண சுகாதார அமைச்சினால் ஆறு மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் தினகரனுக்குக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் தொண்டர் அமைப்பில் ஊழியராக கடமையாற்றிய 110 பேருக்கே இந்த நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இதுவரை காலமும் தொண்டர் அடிப்படையில் சேவை செய்தவர்களுக்கு மாதாந்தம் சுமார் எட்டாயிரம் ரூபாவை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட் டத்திலுள்ள கிளிநொச்சி, முழங்காவில், அக்கராயன், உருத்திரபுரம், பூநகரி, பளை, தர்மபுரம் மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்பது வைத்திய சாலைகள் தற்பொழுது முழுமையாக இயங்கி வருகின்றதாக குறிப்பிட்ட ஆளுநர், கிளிநொச்சி, கந்தாவளை, பூநகரி, பளை ஆகிய பகுதிகளில் ஆறு மருத்துவ நிறுவனங்களும், சுமார் 52ற்கும் மேற்பட்ட கிளினிக்களும் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.

வட பகுதி மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை மேலும் மேம் படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒரே தடவையில் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் எம்.பி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாகாண சுகாதார மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக