17 நவம்பர், 2010

பதவியேற்புக்கு 500 கோடி ரூபா செலவிடும் அரசு ஏன் சம்பள அதிகரிப்பை வழங்கமுடியாது?: ரணில்

யுத்தம் முடிவடைந்துள்ள போதும் பாதுகாப்புக்கான செலவினங்கள் 1,400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப்பிரமாண நிகழ்வுக்காக சுமார் 500 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இவ்வாறான செலவினங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்தால் ஏன் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.

யுத்தம் முடியும் வரை பொறுத்திருங்கள். சம்பள உயர்வு உட்பட பல்வேறு நிவாரணங்கள் பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். தற்போது யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பான அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பு ஐ.தே.க. தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. அதன் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது,

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலையிலேயே அரசாங்கம் வீணான செலவுகளை செய்து வருகிறது.

இரண்டு வருடத்திற்கு முன்னர் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபாய் சம்பள உயர்வினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதனையும் வழங்கவில்லை. அன்று இருந்த பொருட்களின் விலையல்ல இன்றுள்ளது. எனவே இன்று அதை விட அதிகமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அதாவது அரச ஊழியர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டும். அதற்கு சமனாக தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டும். இதன் முதற்கட்டமாக 4500 சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதுடன் எஞ்சிய நிலுவைத் தொகையுடன் ஒரு வருடத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

திஸ்ஸ அத்தநாயக

பாராளுமன்றத்தில் கூச்சலிடும் அமைச்சர் ஒருவருக்கான மாதாந்த வீட்டு வாடகை ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படாதுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியினுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நல்ல பதவிகள் கொடுக்கப்படுகிறது. அவர்களின் நண்பர்களுக்காக சூதாட்ட சட்டமூலத்தையும் நிறைவேற்றியுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை செய்து வருபவர்கள் மக்களுக்கான சம்பள உயர்வினையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று சிறிகொத்தாவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக, எம்.பி.க்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக