15 நவம்பர், 2010

தேசத்துக்கு நிழல்: தேசிய மரநடுகைத் திட்டம் 11 இலட்சம் மரக்கன்றுகள் 11 நிமிடங்களில் இன்று நடுகை மு.ப 10.07 மணிக்கு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு ‘தேசத்துக்கு நிழல்’ எனும் தேசிய மரம் நடுகைத் திட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள அரசாங்கத் திணைக்களங்கள், பாடசாலைகள், உள்ளூராட்சி சபைகள் உட்பட அனைத்து இடங்களிலும் 11 நிமிடங்களில் 11 இலட்சம் மரங்கள் நடப்படவுள்ளன. இன்று முற்பகல் 10.07 மணியிலிருந்து 10.18 மணி வரையிலான 11 நிமிடங்களிலேயே 11 இலட்சம் மரங்களும் நடப்படவுள்ளன.

எனினும், இத் தேசிய திட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் இன்று 20 இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையான மரம் நடுகைத் திட்டங்களைப் போலல்லாது ‘தேசத்துக்கு நிழல்’ எனும் இந்தத் தேசிய மரம் நடுகைத் திட்டத்தைக் கின்னஸ் சாதனையாகப் பதிவு செய்வதற்கும் சுற்றாடல் வளத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அலுவலகங்களில் மாத்திரமன்றி வீடுகளிலும் குறைந்தது ஒரு மரத்தையாவது நடுவதற்கு முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தையொட்டிய பல தேசிய நிகழ்வுகள் இன்று தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம் பெற இருக்கின்றன.

அர சாங்கத் தகவல் திணைக்களம் சுதந்திரம் என்ற பெயரில் புதிய கலாசாரத்தின் அடிப்படையிலான கண்காட்சியொன்றை சுதந்திர சதுக்கத்தில் நடத்தவுள்ளது. 17 முதல் 20 ஆம் திகதி வரை நடை பெறவுள்ள இந்தக் கண்காட்சி பி. ப. 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

இக் கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு மக்கள் தொடர் பாடல் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்வின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். சிறந்ததொரு கலாசாரத்திற்கான முன்மாதிரி என்ற தொனிப் பொருளில் நடை பெறும் ‘சுதந்திரம்’ கண்காட்சியில் புதுவகையிலான களியாட்டங்களைக் கண்டுகளிக்கவும் அனுபவிக்கவும் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக