1 அக்டோபர், 2010

மீண்டும் ராணுவ ஆட்சி வரும்:பாக்., தளபதி கயானி எச்சரிக்கை

மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. "அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்' என, அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி எச்சரித்துள்ளதால், இது தொடர்பாக வதந்திகள் அதிகரித்துள்ளன.பாகிஸ்தானில் கடந்த திங்களன்று அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசூப் ரசா கிலானி மற்றும் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கயானி, "பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்' என, கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.கயானியின் இந்தப் பேச்சால், பாகிஸ்தான் ராணுவ ஆட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது என, பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தத் தகவலை பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துள்ளனர். "பாகிஸ்தானின் 63 ஆண்டு கால வரலாற்றில், பெரும்பாலான ஆண்டுகள் ராணுவ ஆட்சியே இருந்துள்ளது. புதிதாக ராணுவ ஆட்சி உருவானால், அது நிலைமையை மோசமாக்குமே அன்றி, நல்லதாக இருக்காது' என்றும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான முஷாரப், "தங்கள் நாட்டில் ராணுவ புரட்சி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என, எச்சரித்துள்ளார். "அணு ஆயுத சக்தி படைத்த நாடான பாகிஸ்தானில் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. பயங்கரவாதத்தையும், பொருளாதார வீழ்ச்சியையும் கட்டுப்படுத்த தற்போதைய அரசு போராடிக் கொண்டிருக்கிறது. அதனால், ராணுவத்திற்கு அரசியல் சட்ட ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக