4 செப்டம்பர், 2010

தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும்: நிருபமா ராவ்

இடம்பெயர்ந்தவர்கள் மறுவாழ்வு விடயத்திற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டியது அவசியம் என இந்தியா வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தின் போது அரசாங்கத்தரப்பினதும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது இந்த கருத்தை வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அப்பால் சென்று, நாட்டை தசாப்த காலங்களாக சிவில் முரண்பாடுகளுக்குள் தள்ளி இழுபட்டுச் செல்கின்ற இனவிவகாரங்களுக்கு தீர்வுகாண்பதற்கான அரசியல் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என இன்று மாலை செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது குறிப்பிட்ட நிருபமா ராவ், தனது விஜயத்தின் போது சந்தித்துக் கலந்துரையாடிய அரசாங்கத்தினதும் மக்களதும் பல்வேறு பிரதிநிதிகளிடமும் இது தொடர்பில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட ராவ், அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு விடயங்களில் அவதானம் செலுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் நீண்ட கால நோக்கில் சிறுபான்மையினரின் சில தேவைகளை மனதில் நிறுத்தி அரசியல் தீர்;வு தொடர்பான விடயங்களையும் உள்வாங்கிச் செயற்படுவது அவசியமானது. எனக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகாரச்செயலாளார் இலங்கை ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அரசியல் தீர்வு தேவை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தொடர்ச்சியாக தெரிவித்தார். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். அவரது பார்வை இவ்விடயத்தில் உள்ளது இவ்விடயத்தில் அவர் மிகுந்த அக்கறையுடனிருக்கின்றார்.

பொருளாதார விடயங்களுக்கு அதிகமானதாகவும் அபிவிருத்தி விடயங்களுக்கு மேலானதாகவும் அப்பால் சென்று அதிகமாக செயற்படவேண்டிய அவசியமுள்ளது. அரசாங்கத்திலுள்ள அனைவரும் நாம் இவ்விடயத்தை எப்படிப்பார்க்கின்றோம் என்பதை உணர்ந்துகொண்டுள்ளனர் இந்தியா இவ்விடயத்தை எவ்வாறு அணுகுகின்றது எங்கனம் நோக்குகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள் என நான் கருதுகின்றேன், எனக் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக