2 ஆகஸ்ட், 2010

இராணுவமயமாகும் வடக்கு: சாடுகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

நலன்புரி நிலையங்களில் உள்ள தமிழ் மக்களை தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்துவதில் அரசு தாமதமேற்படுத்துகின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரனும் , எம்.ஏ.சுமந்திரனும் மேற்படி தெரிவித்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் அங்கு கூறுகையில்,

“மீள்குடியேற்றம் என்ற பெயரில் அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பெருமளவிலான நிலங்களில் இராணுத்தினரை குடியமர்த்தியுள்ளனர். முல்லைதீவில் உள்ள இராணுவ முகாம் முன்னர் 3 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்டது. தற்போது 30 ஏக்கராக இது விஸ்தீரணமடைந்துள்ளது.

வடக்கில் இராணுவத்தினரை நிரந்தரமாக வைக்கப்போவதாகவும் அவர்களது குடும்பங்களையும் அங்கு குடியமர்த்தி அவர்களுக்கான விவசாய நிலங்களையும் காணிகளையும் வழங்கப்போவதாக இராணுவத் தளபதி கண்டியில் மகாநாயக்க தேரரிடம் கூறியுள்ளார்.

வடக்கில் கடமைபுரியும் இராணுவத்தினரையும் அவர்களது குடும்பத்தினரையும் குடியமர்த்துவது வடக்கில் இனவிகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலும் முஸ்லிம் மக்களது காணிகள் பறிபோகின்றது. இவையனைத்தும் அரசாங்கத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழேயே நடைபெறுகிறது.

திருமுருகண்டி, சாந்தபுரம், பொன்னகர், இந்துபுரம் போன்ற கிராமங்களி'ல் மக்கள் மீள் குடியேறமுடியாமல் பாதுகாப்பு அமைச்சு அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. அப்பாவி மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். இதில் அரசு காலதாமதம் ஏற்படுத்திவருகின்றது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக