5 ஜூலை, 2010

ஐ.நா.அமைப்பு வாகனங்கள் வன்னி செல்ல அனுமதி மறுப்பு

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்குச் செல்லும் ஐ.நா. அமைப்புக்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்ற ஐநா அமைப்புக்கள் அந்தப் பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று வருவதற்கான அனுமதி முன்னர் வழங்கப்பட்டிருந்தது.

வன்னிப் பிரதேசத்தில் பணியாற்றுவதற்கென குறிப்பிட்ட சில ஐநாவின் அமைப்புக்களுக்கே அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது.

அவ்வாறான அமைப்புக்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது நிறுவன வாகனங்களில் வன்னிப் பிரதேசத்திற்குச் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அனுமதி கடந்த திங்கட்கிழமை முதல் மறுக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ஓமந்தை சோதனைச்சாவடியைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான அனுமதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரி விண்ணப்பித்த போதிலும், அந்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவை அண்மையில் நியமித்தது தொடர்பில் ஐநாவுக்கும் இலங்கை அரசுக்கும் எற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாகவே வன்னிப்பிரசேத்தினுள் ஐநா அமைப்பு வாகனங்கள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருப்பதாகப் பலரும் சந்தேகிக்கின்றனர்.

இத்தகைய தடை காரணமாக வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேறி வருகின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் பெரும் பணியாற்றி வருகின்ற ஐநா அமைப்பின் ஐஓஎம் போன்ற நிறுவனங்களின் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் வெளியிடப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக