17 அக்டோபர், 2009

இலங்கையின் மனித உரிமை நிலை திருப்தியாக இல்லை : ஐரோப்பிய ஒன்றியம்



இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்குவதற்கான சாத்தியங்கள் வெகு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் செய்தியில்,

"சர்வதேச மனித உரிமை சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் இலங்கை செயற்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளதென ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை இலங்கை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்து வந்த யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடவுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான அடிப்படை நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் அதனை பொருளாதாரத் தடையாக கருத முடியாது எனவும், உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் சகல நாடுகளும் இந்த சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அடக்குமுறைகள், சித்திரவதைகள், தொழில் சட்டங்கள் மீறப்பட்டமை போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிட்டால் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவு ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என குறிப்பிடப்படுகிறது" என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக