20 அக்டோபர், 2009

20.10.09வடக்கைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு : பொலிஸ் மா அதிபர்



யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர், பொலிஸ் சேவையில் கடமையாற்றுவதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்ததாக அரச இணணயத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

"யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.

வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படும்" என்றார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார ஆகியோர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக