4 ஏப்ரல், 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மாத நடுப் பகுதியில் வெளியாகும்

இறுதிப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலகச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் நடுப் பகுதியில் பகிரங்க அறிக்கையாக வெளியிடப்படவுள்ளது. அறிக்கையின் பிரதி பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாத இறுதியிலேயே சமர்ப்பிப்பதற்குத் தயாராகி இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் பான் கீ மூனுடனும் நிபுணர் குழுவினருடனும் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் பின்னர் அறிக்கையைக் கையளிக்கும் திகதி பிற்போடப்பட்டது. எனினும் அந்த அறிக்கை இந்த மாத நடுப்பகுதியில் ஐ.நா. பொதுச் செயலரிடம் உறுதியாகக் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த அறிக்கை பகிரங்க ஆவணமாக அனைத்துத் தரப்பினரும் பெறுவதற்கு வசதியாக வெளியிடப்படவும் உள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையும் அதற்கு ஆதரவான வகையிலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இளவாலையில் குழு மோதல்: பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

இளவாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட சண்டையில் பத்துக்கு மேற்பட்டவாகள் காயங்களுக்கு உள்ளாகியதுடன் பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டதுடன் மற்றுமொரு தனியார் பஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இளவாலை யங் ஹென்றீஸ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டப் போட்டி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று 03 ம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதுடன் தடிகள் பொல்லுகள் கொண்டும் இரு பகுதியினரும் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் முகமாக அயலில் உள்ள இளவாலைப் பொலிஸார் உடனடியாகக் களத்திற்கு வந்து இரு அணிகளினதும் சண்டையை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இந் நிலையில் சண்டையில் ஈடபட்டவர்கள் பொலிஸாரின் வாகனத்தின் மீது கற்களை வீசியதுடன் பொலிஸாரையும் தாக்கியுள்ளார்கள். உடனடியாக பாதுகாப்பைப் பலப்படுத்திய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐவரை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழிலிருந்து மோட்டார் சைக்கிளில் கொழும்புக்கு வந்தவர் மாயம்

இளவாலையில் இருந்து கொழும்புக்குச் செல்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இளவாலையைச் சேர்ந்த இராஜேந்திரமோகன் (வயது 34) என்பவரே காணாமல்போனவராவார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர் அலுவலக வேலைகளுக்காக கொழும்புக்குச் செல்வதாக குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவர் தொடர்பான எந்தத் தகவலும் தமக்குக் கிடைக்கவில்லை என குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

எரிபொருள் விலை அதிகரிப்புக்கேற்றவாறு பஸ் கட்டணங்களும் உயர்வடையும்


அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலைகளுக்கு ஏற்ப பகட்டணங்களும் அதிகரிக்கும். எவ்வாறாயினும் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெற உவிசேட சந்திப்பின் பின்னரே கட்டண அதிகரிப்பு தொடர்பாக உறுதியான நிலைஅறிவிக்க முடியும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண கூறுகையில்,

தனியார் பஸ் கடடணங்களை அதிகரிப்பதில் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த காலங்களில் பாரிய முரண்பாடுகள் தோன்றியது. அதிகரிக்கப்பட வேண்டிய தனியார் பஸ் கட்டணங்கள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் இதனை செய்ய முடியாது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் எரிபொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்தது. பெற்றோல் 10 ரூபாவினாலும், டீசல் 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பஸ் கட்டணங்களிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் இல்லையென்றால் உள்நாட்டு தனியார் துறை போக்குவரத்தை பாதுகாக்க முடியாமல் போய்விடும். எனவே எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை எமது சங்க உறுப்பினர்கள் கூட உள்ளனர். எனவே இந்தச் சந்திப்பின் பின்னர் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை காண்பித்து நாட்டு மக்களின்




இருந்தவற்றை அரசாங்கம் கொள்ளையிட்டுள்ளது சித்திரைப்புத்தாண்டு அண்மித்துள்ள நிலையில் மக்கள் மீது அரசாங்கம் சுமைகளை சுமத்தியுள்ளது. சலுகைகளை வழங்கவேண்டிய காலத்தில் சுமைகளை அரசாங்கம் சுமத்தியுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மக்களுக்கு காண்பித்து மக்களின் சட்டைப் பையில் இருந்தவற்றை அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது. இது வெட்கப்படவேண்டிய விடயமாகும். உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு கிரிக்கெட்டில் லயித்திருந்த போது விலை அதிகரிப்பு அருவருப்பானது



உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நாடே லயித்திருந்த சந்தர்ப்பம் பார்த்து அரசாங்கம் தனது ஏமாற்று அரசியலை மீண்டும் வெளிக்காட்டி விட்டதாக விசனம் தெரிவித்துள்ள ஜே.வி.பி. அரசாங்கத்தின் இந்த அருவருப்பான செயற்பாட்டினை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரித்து அனைத்து வகையிலும் மக்களின் தலைகளில் சுமையை சுமத்திவிட்டமையானது மிகவும் பாரதூரமானது.

எனவே ஏற்றிய விலைகளை அரசு உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கமானது மீண்டும் லிற்ரோ காஸின் விலையை 238 ரூபாவினால் அதிகரித்திருக்கின்றது. அதேபோல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை அதிகரித்திருக்கின்றது. இந்த விலையேற்ற சுமையானது மேலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பினையடுத்து போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்க விருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களின், சேவைகளின் விலைகள் அதிகரிக்க விருக்கின்றன. இவ்வாறு அனைத்துப் பிரச்சினைகளையும் மக்களே முகம் கொடுக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடையும் வரையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காதிருந்ததுடன் நாட்டு மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்து தற்போது உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் தினத்தில் மிகவும் சூட்சுமமாக எரிபொருட்களின் விலைகளை அரசு அதிகரித்திருக்கின்றது. நாட்டு மக்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் லயித்திருந்த சந்தர்ப்பத்திலேயே அரசாங்கம் இவ்வாறு செய்திருக்கின்றது.

சந்தர்ப்பம் பார்த்து அரசாங்கம் இந்த விலை யேற்றத்தை செய்திருப்பதானது கிரிக்கெட் மோகத்திலிருக்கும் மக்கள் இதனை உணர மாட்டார்கள் என்ற நோக்கத்திலேயே ஆகும். இது ஒரு பாரதூரமான ஏமாற்றுத் திட்டமாகும். பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் முன்னதாகவே அறிவிப்பது இந்நாட்டின் சம்பிரதாயமாகவிருந்து வருகின்றது. ஆனால் இன்றைய அரசாங்கம் அந்த சம்பிரதாயத்தை முழுமையாக மீறி விட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாது, பொருட்களின் விலை அதிகரிப்பு சம்பந்தமாக எந்த வகையிலும் அரசு மக்களுக்கு அறிவித்தல் கொடுத்திருக்கவில்லை.

இதனால் சந்தைகளுக்கும் விற்பனை நிலையங்களுக்குச் செல்கின்ற பொதுமக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியவர்களாகி உள்ளனர். மேலும் தமிழ்சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்கள் எஞ்சியிருக்கின்ற நிலையிலே இந்த விலை அதிகரிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இலங்கை தேசத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலாசாரக் கொண்டாட்டமாகவே தமிழ் சிங்களப் புத்தாண்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இம்முறையும் அதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக மேலும் மேலும் மக்களை சிரமத்துக்குள் தள்ளிவிடுவதாகவே காணப்படுகின்றது.

இந்த விலைவாசி அதிகரிப்பின் பின்னணியில் மக்களை மட்டுமல்லாது, அவர்களிடத்திலிருந்து அதிக அதிகமாக வரிகளை சுமத்தி அதிலிருந்து (கொமிஸ்) தரகினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கின்றது என்பது தெளிவாகிறது.தமிழ் சிங்களப் புது வருடத்தை முன்னிட்டு காஸ், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்டி வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் மக்களின் எண்ணங்கள் வேறு திசையில் திளைத்திருந்த சந்தர்ப்பத்தில் அந்த மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடுவதற்கு அரசாங்கம் கைக்கொண்ட விதத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்கத்தின் இந்த செயற்பாடானது அதன் ஏமாற்று அரசியலை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றது. இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

3 ஏப்ரல், 2011

பொலிஸ்-காணி அதிகாரங்கள் குறித்த கூட்டமைப்பின் கோரிக்கைக்கு மறுப்பு

பொலிஸ் அதிகாரங்களையும் காணி அதிகாரங்களையும் வழங்க முடியாது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேசரிவார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்பதாகவும் அவர் கூறினார். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடை யில் பல சுற்றுப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் கடந்த சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் முன்வைத்துள்ளது.

13ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாகவுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அதிகாரங்கள் இரண்டினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும், இதற்கு அரசாங்கம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. காணி அதிகாரங்களும், பொலிஸ் அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கவேண்டிய முக்கிய கட்டமைப்புகளாகும்.

இதுகுறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில்,

தமிழத் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டமாக முன்வைத்து கோரியுள்ள காணி அதிகாரங்களையும், பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க முடியாது. எனினும் பொலிஸ் அதிகாரம் என்பது மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்க வேண்டிய ஒரு அதிகாரக் கட்டமைப்பாகும். பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. அத்தோடு காணி அதிகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதன் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

வட-கிழக்கு மக்களின் காணி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்-அடைக்கலநாதன் எம்.பி

வட கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாகவும் இவ் விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் விடயம் யாதெனில்,வட- கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டுகாலங்களாக வழங்கப்படாமல் இருக்கின்றது.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களின் கீழ் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக வீட்டு மானியம் மற்றும் வீட்டுக்கடன் போன்றவை வழங்கப்படவில்லை.இந்த துக்ககரமான நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்குரிய தீர்வை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை. எனவே இந்த விடயத்தை அவசரமாக பரிசீலனை செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மேற்படி கடிதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் நிதிசேகரிப்பு,ஆயுத கொள்வனவை தடுப்பதற்கு அமெரிக்க முன் நின்றதாம்-"விக்கிலீக்ஸ்' தகவல்



தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு என்பனவற்றை முறியடிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச செயற்பாடுகள் 2006ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டன என "விக்கிலீக்ஸ்' தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை முடிவுக்குவந்து யுத்தம் தொடங்கப்பட்ட காலப்பகுதியிலேயே அமெரிக்கா இத்திட்டத்தை முன்னின்று தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சட்டவிரோத நிதி சேகரிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு ஆகியவற்றை தடுக்கும்முகமாக இரண்டு சர்வதேச தொடர்பாடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்திற்கு இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் இந்த தொடர்பாடல் குழுக்களின் செயற்பா டுகளுக்கு இந்தியாவையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இலங்கை அமெரிக்காவிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. ஸ்தம்பித்துப்போன சமாதானச் செயற்பாடுகள் விடயத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் அமெரிக்கா இருக்கின்ற பக்கத்திலேயே இந்தியாவும் இருப்பதாக அமெரிக்கா நம்பியது. இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என்ற விடுதலைப்புலிகளின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசியல் தீர்வினை முன்வைக்கச் செய்து விடுதலைப்புலிகளின் ஆயுத மற்றும் பண பலத்தை முறியடிப்பது என அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி.ஜே.லண்ஸ்டட் 2006 மே 3 ல் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்துள்ள கேபிளில் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி அனுப்பப்பட்டு எட்டு தினங்களின் பின்னர்தான் விடுதலைப் புலிகள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதே வருடம் ஜூன் மாதத்துக்குப் பின் அனுப்பப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தக் குழுக்கள் பற்றி இந்தியா மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. இந்த சர்வதேசத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும் இலங்கை கோரியுள்ளது. இந்தத் தொடர்பாடல் குழுக்களின் விவரம் மற்றும் அதன் சேர்க்கை பற்றி முதற்தடவையாக 2006 ஆகஸ்ட் 21ல் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பு??ர், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன். அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன. மே மாதம் மூன்றாம் திகதி அனுப்பப்பட்டுள்ள கேபிளின் படி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிக்கும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதலாவது செயலாளர் அமந்தீப் சில் கிங்கிற்கும் இந்த விடயத்தில் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன. அரசியல்தீர்வுகளை முன்வைக்குமாறு இந்தியா இலங்கையை தொடர்ந்து கேட்டுவந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

ஆனால் இந்த விடயத்தில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. ஜூன் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் அரசியல்துறை அதிகாரி தொடர்பாடல் குழுவின் செயற்திட்டத்தை கையளிப்பதற்காக இந்தியா, பங்களாதேஷ், மியன்மார், இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதி தான் இதுபற்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் சரண் உடன் பேசியுள்ளதாகவும், இந்தக் குழுக்களின் நியமனம் அர்த்தமுள்ளது என அவர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அதே தினத்தில் கேபிள் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கத் தூதுவர் டேவிட் மல்பர்ட் ஒப்பமிட்டுள்ளார். இந்திய பிரதிநிதி குமார் நிதி சேகரிப்பைத் தடுக்கும் குழுவில் கனடா சேர்த்துக்கொள்ளப் படவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்னர் அமெரிக்கப் பிரதிநிதியுடன் நடந்த சந்திப்பில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மலேஷியா என்பனவற்றை ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. ஜூன் 20ல் லன்ஸ்டட் கொழும்பிலுள்ள தனது சகா நிரூபமா ராவைச் சந்தித்தார். அமெரிக்க இந்திய கூட்டுத் திட்டங்கள் மற்றும் தொடர்பு கொள்ளல் குழுக்களை உருவாக்கல் என்பன பற்றியதாக இந்தச் சந்திப்பு இருந்தது.

கூட்டுத் திட்டங்கள் குறித்து நிரூபமா உற்சாகத்துடன் காணப்படவில்லை என்று லன்ஸ்டட் ஜூன் 21ல் அறிவித்துள்ளார். ஜூன் 22ல் இந்திய வெளிவிவகார அமைச்சின் அமெரிக்க விவகார இணை செயலாளர் ஜெய் சங்கர் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக அரசியல பிரிவு அதிகாரியைச் சந்தித்துள்ளார். கூட்டுக் கையாளலை விட இந்தியா சமாந்திரமான போக்கில் செல்லவுள்ளதாகவும் இது தாக்கம் மிக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு "விக்கிலீக்ஸ்' வெளியிட்டுள்ள இரகசிய கேபிள் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுஎவ்வாறு இருந்தபோதிலும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே அமெரிக்காவுடன் இலங்கையும் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தொழிற்படத் தொடங்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்





மும்பாயில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை காலை நாடு திரும்பியுள்ளார்.

மும்பையிலிருந்து விசேட விமானம் மூலம் அவர் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...