26 ஜனவரி, 2011

சரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்தரவிடவில்லை

சட்டரீதியாக பொறுப்பேற்று பராமரிக்குமாறே இராணுவத்துக்கு அறிவுறுத்தல்

வெள்ளைக் கொடி விவகார வழக்கில் பாதுகாப்பு செயலாளர் சாட்சியம்

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்களைக் கொன்றுவிடுமாறு தாம் உத்தரவிட்டதாக ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் வெளியாகி யிருந்த சரத் பொன்சேகாவின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (25) வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சாட்சியமளி க்கும் போது தெரிவித்தார்.

சரணடையவரும் புலிகளின் தலைவர்களையும் ஏனைய உறுப் பினர்களையும் சட்டத்தின் பிரகாரம் பொறுப்பேற்று, அவர்களை நன்றாகப் பராமரிக்குமாறு இராணு வத்திற்கு அறிவுறுத்தல் வழங்க ப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்தின் 11 ஆயிரத்து 968 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களுள் ஐயாயிரம் பேர் புனர்வாழ்வு அளிக் கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள் ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி ‘சண்டே லீடர்’ பத்திரிகை யின் பிரதம ஆசிரியர் திருமதி பெட்ரிக்கா ஜான்ஸணுக்கு வழங்கிய பேட்டியில், இனவாதத்தைத் தூண்டும் கருத்துக்களை வழங்கி யமை மற்றும் அதனூடாக அரசாங் கத்தின் மீது மக்கள் மத்தியில் எதிர் ப்பலையை உருவாக்க முயற்சிப்பதற்காக வெள்ளைக் கொடி கதையைக் கூறியமை குறித்து சட்ட மா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சரத் பொன் சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. இங்கு மேலும் சாட்சிய மளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, புலிகளின் தலைவர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த துடன் அவர்கள் இன்னமும் பாது காப்பாக உள்ளதாகவும் கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான சரத் பொன்சேகாவின் பேட்டியினால் கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுமார் 10 இலட்சம் புலம் பெயர் தமிழர்க ளின் எதிர்ப்பு இலங்கை அரசுக்கும், தமக்கும் ஏற்பட்டதாகவும் பாது காப்புச் செயலாளர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பால்மாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு விலையேற்றத்தை தவிர்க்க நடவடிக்கை


பால் மா விலையேற்றத்தைத் தவிர்ப் பதற்காக பால்மாவுக்கான இறக்குமதி வரியை 22.00 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிலோவுக்கு 50 ரூபாவாக இருக்கின்ற இறக்குமதி வரி ரூபா 28.00 வரை குறைக்கப்பட விருக்கின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று 26 ஆம் திகதி அல்லது நாளை 27 ஆம் திகதி திறைசேரி வெளியிடும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.

ரூமி மர்ஷணுக் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை பால் மா விலையை அதிகரிக்க இடமளிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

உலக சந்தையில் பால் விலை அதிகரித்துள்ளதால் பால் மா இறக்குமதி நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ள நிலைமையை முன்வைத்து பால் மா விலையின் இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தி லிருந்து இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்ப ட்டுள்ளது.

மூன்று கட்டங்களைக் கொண்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அனல் மின் நிலையத் திட்டத்தின் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை நேற்று நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே சேவியர் மேற்கண்டவாறு கூறினார்.

நுரைசோலை அனல்மின் நிலையத்தின் முதற் கட்டத்தின் மூலம் முன்னூறு மெகாவோற் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட அவர். இத்திட்டத்தின் மூன்று கட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தொளாயிரம் மெகாவோற் மின்சாரத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

சீனாவின் கடனுதவியுடன் இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தியை ஆரம்பித்தால் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதனால் மின் உற்பத்திக்கு ஏற்படும் பெருந்தொகையான செலவினத்தை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட சேவியர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் கூறினார்.

அத்துடன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு இருபது ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் விவசாயத்திற்கு மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அநுராதபுரம் சிறைக்கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது கைதி, அதிகாரி மோதல் குறித்து விசாரணை நடத்த மூவர் குழு நியமனம்

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய உண்ணாவிரத போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் நேற்று அநுராதபுரத்திற்கு சென்று கைதிகளுடனும் அங்குள்ள அதிகாரிகளுடனும் நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்தே இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அங்கு சுமுகநிலை நிலவுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அநுராதபுர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ரவீந்திரன் தலைமையில் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றும் அமைச்சரினால் நியமிக் கப்பட்டுள்ளதாக சதீஷ்குமுண்ர் மேலும் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் நடத்திய உண்ணாவிரதம் மற்றும் மோதல் தொடர்பில் ஆராயும் பொருட்டு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஷ்குமார், சிறைச் சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினர் அநுராத புரத்திற்கு நேற்று நேரில் சென்று நிலை மைகளை ஆராய்ந்தனர்.

கைதிகளுடனும், அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திய உயர் மட்டக் குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களையும் சந்தித்து பேசியுள்ளனர்.

உணவு மற்றும் சுகாதார வசதிகள் உட்பட தங்களுக்கு தேவையான வற்றை செய்து தருமாறு கைதிகள் அமைச்சர் தலைமையிலான குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களது குறைபாடுகளை கேட்டறிந்த அமைச்சர் அவற்றை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக அமைச்சின் ஆலோசகர் தெரிவித்தார்.

மோதல் சம்பவம் தொடர்பான விசா ரணைகளை உரிய முறையில் நடத்தி ஒருவார காலத்திற்குள் தமக்கு அறக்கையாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், விசாரணைக்காக நியமித்துள்ள குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் மாலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் எட்டுப் பேர் அடங்குகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகவும் கொலை தொடர்பாகவும் விரிவான விசாரணை களை நடத்தவென பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரியவின் ஆலோ சனையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலேயே இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முல்லை மாவட்டத்தில் துரிதம் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக் குடியமர்ந்துள்ளனர் அரச அதிபர்


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் 22,909 குடும்பங்களைச் சேர்ந்த 68,409 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டு ள்ளதாக அரச அதிபர் மேலும் தெரிவித்து ள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய ஐந்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இந்த மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மீளக்குடியமரத் திரும்பியுள்ள மக்களின் குடியேற்றத் துக்கான வீடுகள் அரச, அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்க ளின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன.

இதனைவிட, முல்லைத்தீவு மாவட்ட த்தில் மீளக்குடியேறி வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டு மான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் வீதிகள், பாலங்கள் புனரமைப்பு, உரக் களஞ்சியங்கள் அமை ப்பு மற்றும் பாடசாலைகள் புனரமைப்பு போன்ற வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருவ தாகவும் முல்லைத்தீவு, மாவட்ட அரசாங்க அதிபர் ஏ. பத்திநாதன் மேலும் தெரிவித்தார்.

இதேவதிளை, இன்னும் மீள்குடியேற்றத் துக்கு உட்படாது எஞ்சியுள்ளோரையும் மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

25 ஜனவரி, 2011

தாய்லாந்துக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் கைது




இலங்கையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்த முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சந்தேக நபரிடமிருந்து 15 கிலோ கிராம் கொகேன் போதைப்பொருளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...

போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர் இருவர் சென்னையில் கைது



சென்னையில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல இருந்த இலங்கையர்கள் இருவர் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 30) மற்றும் வவுனியாவைச் சேர்ந்த சுதேசிகரன் (வயது 23) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவிலிருந்து 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம்




இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இந்தியாவிலிருந்து புதிதாக 100 பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனையின் பிரகாரமே இந்த பஸ்களை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் பந்துசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனையின் கீழ் 100 பஸ்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஸ் ஒன்றின் பெறுமதி 40 இலட்சமாகும். இதற்கான செலவு இலங்கை போக்குவரத்துச் சபையினால் ஈடுசெய்யப்படும் என்பதுடன், இந்த பஸ்கள் தூரப்பிரதேசங்களுக்கான சேவைகளில் ஈடுபடுத்தப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் 26 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஏப்ரல் வரையிலும் நீடிப்பு

கலைக்கப்பட்ட 301 சபைகளுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் வடக்கில் 26 உள்ளூராட்சி மன்றங்களில் பதவிக்காலத்தை ஏப்ரல் வரையிலும் நீடிப்பதற்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வடக்கில் 26 பிரதேச சபைகளின் பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர், வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தெற்கு, வடமாராட்சி தென் மேல், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென் மேல், நெடுந்தீவு, வேலணை, வலிகாமம், ஊர்காவற்றுறை, மன்னார், மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி, வவுனியா தெற்கு தமிழ், வவுனியா தெற்கு சிங்கள, வவுனியா வடக்கு, வெங்கல்செட்டிக்குளம், கராச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கடற்றுறைப்பற்று, மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பிரதேச சபைகளின் பதவிக்காலமே 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அடங்கலாக நாட்டில் 335 மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 267 சபைகளின் ஆட்சிகாலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு கலைக்கப்பட்டன. அத்துடன் ஏற்கனவே ஆட்சிக்காலம் முடிவடைந்திருந்த நிலையில் தேர்தல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த 34 சபைகளுக்கான தேர்தலும் இம்முறை நடைபெறவுள்ளது.

இதன்படி 301 சபைகளுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள அதேவேளை மீதமாகவுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பின்னர் இடம்பெறும். இவற்றுள் கிரிக்கெட் சுற்றுப்போட்டி காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

அதேநேரம் நாட்டிலுள்ள 18 மாநகரசபைகள் தேர்தலுக்காக கலைக்கப்படவில்லை என்பதுடன் வடக்கில் 26 மன்றங்களுக்கான பதவிக்காலம் ஏப்ரல் மாதம் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அமெரிக்காவின் கடமை: ஹெல உறுமய

"இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் போர்க் குற்றங்கள் அனைத்தும் சட்டத்திற்கு முரணானவை. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்கவேண்டியது அமெரிக்க அரசாங்கத்தின் கடமையாகும். மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமாயின் உயிர்களை பணயம் வைத்து போராட்டங்களை முன்னெடுப்போம்'' என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

புலிகள் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையோ அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையோ ஏன் சர்வதேச சமூகம் கண்டுகொள்வதில்லை எனவும் அக்கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தலைவருமான எல்லாவல மேதானந்த தேரர் கூறுகையில்,

குற்றச்சாட்டுக்களை எல்லோராலும் முன்வைக்க முடியும். ஆனால் அதன் உண்மை தன்மையும், சாட்சியங்களுமே முக்கியமானவையாகும். எனவே இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையிலான குறிப்பிட்ட சில நாடுகள் முன்வைக்கும் போர்க் குற்றங்களானது உண்மைக்கு புறம்பானதும் சட்டத்திற்கு முரணானதுமாகும். முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதங்கள் காணப்படும்போது அதனை இல்லாதொழிக்கும் உரிமை அந்நாட்டு அரச தலைவருக்கே உண்டு. இதுவே சர்வதேச சட்டமும் ஆகும்.

அவ்வாறாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை இல்லாதொழித்தமை எவ்வாறு மனித உரிமை மீறலாகவோ போர்க்குற்றமாகவோ கருத முடியும். எனவே வேறு ஒரு உள்நோக்கத்திற்காகவே சர்வதேசம் இலங்கை மீது வீண் பழிகளை சுமத்தி வருகின்றது.

எனவே, குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிய வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு கிடையாது. அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டு அரசாங்கத்தின் கடமையாகும். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்களை அந்த அந்த நாட்டு அரசாங்கங்கள் கைது செய்ய வேண்டும் எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...