7 டிசம்பர், 2010

விக்ரமபாகு கருணாரத்ன மீது விமான நிலையத்தில் தாக்குதல்

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இன்று பிற்பகல் விமான நிலையத்தில் பொதுமக்கள் சிலரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் வருகைக்காக காத்திருந்த சுமார் 40 பேர் இவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவரது ஆதரவாளர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர் பாதுகாப்பாக வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் இன்று கைது

விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்ஞே இன்று பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு பெண்களை அவர்களின் விருப்பமின்றி பாலியல்வல்லுறவிற்கு ஈடுபடுத்தினார் என்ற குற்றஞ்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இக்குற்றஞ்சாட்டுக்களை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய நேரப்படி இவர் இன்று காலை 9.30 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைய சென்றிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இவர் வெஸ்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளார்.

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஜூலியன், இது தன்னை முடக்குவதற்கான சதியெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இருந்து வெடிகுண்டு ஒன்றினை இராணவத்தினர் இன்று மீட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் சிற்றுண்டிச்சாலைக்குப் பின்புறமாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது குண்டு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

நீண்ட காலமாக அங்கு வைக்கப்பட்ட குண்டே மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

லக்ஸர் இ-தொய்பாவின் இலங்கை முயற்சிகள் குறித்து விக்கிலீக்ஸ் தகவல்

இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தளங்களை அமைப்பதற்கான உதவி நிலையமொன்றை கொழும்பில் எற்படுத்துவதற்கு லக்ஸர் இ-தொய்பா இயக்கம் முயற்சித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்ட லக்ஸர் இ-தொய்பா அங்கத்தவர்களின் உதவியுடன் தென்னிந்தியாவில் இரு அணிகளை நிலைப்படுத்துவதற்கு லக்ஸர் தலைவர்களில் ஒருவரான ஷபீக் கபா கடுமையாக முயற்சி செய்ததாக அக்கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மின்சாரசபை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மின்பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டப்பணம் மூலம் 12.5 மில்லியன் ரூபாய் மின்சாரசபைக்கு கிடைத்துள்ளது.

இதனால் மின்சாரசபைக்கு நாளொன்றுக்கு 6 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறான மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்டப்பணத் தொகையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை திடீர்சோதனைப் பிரிவின், 1987 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்கள் 17 ஆயிரம் பேர்: எஸ்.எம்.கிருஷ்ணா


இலங்கையில் முகாம்களில் இன்னும் 17 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.

''இலங்கைப் பயணம் மேற்கொண்டபோது எழுதிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் கலந்தாலோசித்தேன். முகாம்களில் தங்கியுள்ள 17 ஆயிரம் பேரும் இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.

முகாம்களில் உள்ளவர்களை மறுகுடியமர்த்தவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா போதுமான நிதியுதவி அளித்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

வடபகுதியில் ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ஆயிரம் வீடுகள் கட்டும் பணியையும் ஆரம்பித்து வைத்தேன். அத்துடன் வடபகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 500 டிரக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தையும் திறந்து வைத்தேன்.

இலங்கையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தமிழர்கள் மற்றும் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் முறையான பேச்சு வார்த்தையை துவக்கும்படி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளேன்.

மீன்பிடிக்கும் உரிமை தொடர்பாக, 2008ம் ஆண்டு இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசிடம் வலியுறுத்தினேன்" என கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தோட்டப் பெண்களின் தாய்ப்பாலில் விஷம்- ஆய்வில் தகவல்

பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வின் படி ஊவா மாகாண ஹல்துமுல்ல பிரதேசத்திலுள்ள பெண் தோட்டத் தொழிலாளர்களது தாய்ப்பாலில் கொடிய விஷங்களில் ஒன்றான ‘பெறகொட்' இரசாயனம் கலந்திருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை சுற்றாடல் மற்றும் மண்ணியல் ஆய்வாளரான கலாநிதி பி.ஐ.யாப்பா தெரிவித்தார்.

சர்வதேச இரசாயன பீடைகொள்ளி எதிர்ப்பு தினம் தொடர்பாக கண்டி அனிவத்தையிலுள்ள ‘கெண்டியன் ரிக் ரீட்' சுற்றுலா விடுதியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆராய்ச்சி அதிகாரியும், பேராதனைப் பல்கலைக்கழக விவசாய கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளருமான கலாநிதி யாப்பா மேலும் தெரிவிக்கையில்,

‘பெறகொட்' என்ற இரசாயனப் பதார்த்தம் கொடிய நஞ்சாகும். இதனை உட்கொண்டால் மரணமே இறுதி விளைவு. அதனைத் தயாரிக்கும் நாடுகளே அதன் பாவனைக்குத் தடைவிதித்துள்ளது. பிரபல தயரரிப்பு நிறுவனமான ‘சின்ஜென்டா’ நிறுவனத்தின் தலைமையகம் சுவீஸ் நாட்டில் உள்ளது. அங்கு ‘பெறகொட்' பீடைகொள்ளி பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

1964ன் பின் இலங்கையில் இரசாயனக் களைகொள்ளிகள், பீடைகொள்ளிகள், இரசாயனப் பசளை, இரசாயனக் கிருமிநாசினிகள் என்பன பாவனைக்கு வந்தன. இதன் விளைவாக இரசாயனங்கள் மிகக் குறைந்த அளவில் தொடர்ச்சியாக எமது உடம்பில் சேகரிக்கப்பட்டு புற்று நோய், சிறுநீரக நோய், பாக்கின்சன் என்ற நரம்பு நோய், கண் வியாதி, தோல்வியாதி போன்ற பல நோய்களுக்குக் காரணமாக உள்ளது. வருடம் தோறும் 5ஆயிரம் பேர் ‘பெறகொட்' இரசாயனம் உணவில் சேர்வதன் காரணமாக இறக்கின்றனர்.

‘பெறகொட்' மண்ணுடன் சேர்ந்தால் அது அழியமாட்டாது. மண்ணின் அகத்துறுஞ்சும் தன்மை, வடிதிறன் என்பன குறைகின்றது. இதனால் மண் பாதிப்படைகிறது.

எதிர்காலத்தில் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கையில் மூன்று வருட இடைவெளியில் இதன் பாவனையை முற்றாக ஒழிப்பதாகக் கூறிய போதும் புதுப் பெயர்களில் அவை விதைந்துரைக்கப்பட்டு திறந்த சந்தைக்கு வந்துள்ளது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

லெப்டொப் தருவதாகக்கூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்

லெப்டொப் வாங்கித் தருவதாககூறி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கராஜ் சொந்தக்காரர் சிறுமியொருவருக்கு லெப்டொப் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நபர் இதுபோன்ற ஆசைவார்த்தைகளைக் கூறி பல சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சாரசபை ஊழியர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்


கண்டி மின்சாரசபை கட்டிடத்தின் கூரை மீதேறிப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர் பீச்சுதல்; என்பன மேற்கொள்ளப் பட்டன. இதனால் பதட்ட நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை உடன் நிரந்தர சேவையில் இணைக்கும் படி கோரிக்கை விடுத்து இலங்கை மின்சார சபையின் கண்டி பிரதான காரியாலய கூரை மீது ஊழியர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இரவு 7.30 மணி அளவில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர் விசுறுதல்; என்பன மேற்கொள்ளப் பட்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இலங்கை மின்சார சபையின் மத்திய மாகாணம் முழுதும் ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் சேவை செய்யும் ஊழியர்கள் சுமார் 400 பேர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இரவு 7.00 மணி அளவில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தை கை விடுமாறு வேண்டிய போதும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாததன் காரணத்தால் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி உரையாற்றாமை பிரிட்டனுக்கே அவமானம்: அமைச்சர் கெஹெலிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அமெரிக்காவில் ஆரம்பித்தது இன்று வரையிலும் நகர்ந்துகொண்டிருக்கின்றது. அந்த காலத்தில் சர்வதேசம் செய்ததை கரு எம்.பி. இன்று செய்கின்றார் என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார்.

ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி உரையாற்றாமை எங்களுக்கு அல்ல ஐந்து நட்சத்திர ஜனநாயகம் இருப்பதாக கூறப்படும் பிரித்தானியாவுக்கு அவமானம், வெட்கமாகும் என்று அவர் சொன்னார்.

பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அமெரிக்காவிற்கு சென்றிருந்த வேளையில் "வெள்ளைக் கொடி' தொடர்பில் பிரச்சினை எழுந்தது. இன்று வரையிலும் யுத்தக் குற்றச் சாட்டு நகர்கின்றது.

இறுதி யுத்தத்தின் போது 47 பேரைக் காப்பாற்றி நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. அது நடந்ததா? என்பது பிரச்சினையாகும்.

ஐந்து நட்சத்திர ஜனநாயகம் இருக்கின்ற நாட்டில் பிரச்சினையில்லை, சந்தேகமும் இல்லை என்பதனால் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு சென்றார். அவர் அங்கு உரையாற்றாமை எங்களுக்கு அவமானமோ வெட்கமோ இல்லை.

புலிகள் இயக்கத்தை பல நாடுகள் தடை செய்துள்ள போதிலும் பிரித்தானியாவில் புலிக்கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் யாருக்கு அவமானம் எங்களுக்கா? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...