27 நவம்பர், 2010

இலங்கை - இந்திய நட்புறவு எக்காலத்திலும் பாதிப்படையாது எஸ். எம். கிருஷ்ணா

வட பகுதியில் இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

மீள்குடியமர்த்துவதில் சில பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என நம்புகிறோம். இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸணும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் கைச்சாத்திட்ட பின்னர் கூட்டுச் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்,

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் இலங்கைக்கு வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக இந்தியா 50,000 வீடுகளை அமைத்துக்கொடுக்கவுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக காணப்படும் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தமானது இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தொடர்புகளை மேலும் வலுவாக்கும். இக்கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தின் ஊடாக மீன்பிடி வர்த்தகம், முதலீடுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவுகள் வலுப்படும்.

அது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலும், ஹம்பாந்தோட்டையிலும் அமைக்கப்படும் இந்தியத் துணைத் தூதரகங்கள் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் சிறந்த தளமாக அமையும். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு ஏற்படும்.

இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நான் கலந்துரையாடியுள்ளேன். இரு நாட்டுப் பிரநிதிகளும் விரைவில் கூடி இவ்விடயம் குறித்து ஆராய இணங்கியுள்ளோம்.

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பெரும் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. வீடமைப்பு, புகையிரதப் பாதை அமைப்பு, கண்ணிவெடி அகற்றல், வடக்கின் விவசாய அபிவிருத்தி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணம், கே. கே. எஸ். துறைமுக அபிவிருத்தி, யாழ். பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவானது வேறெந்தவொரு நாட்டிலும் தங்கியில்லை. ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்பது இலங்கையைப் பொறுத்தது. இலங்கை எந்தவொரு நாட்டுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிரேஷ்ட அமைச்சர்கள் சகல அமைச்சரவை கூட்டங்களிலும் பங்குகொள்ள முடியும்

சிரேஷ்ட அமைச்சர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மட்டுமே அமைச்சரவைக்கு சமுகமளிக்க முடியும் என்று எதிர்க்கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவர்கள் சகல அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி சார்பாக வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் ஆரம்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க; சிரேஷ்ட அமைச்சர்கள் குறித்து கருத்து தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசியல் யாப்பில் உள்ள நியதிகளின் அடிப்படையிலே சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். ஐ.தே.க ஆட்சியிலும் இவ்வாறான அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, ஐ. தே. கட்சி யில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் யாப்பின் எந்த சரத்தின் படி இவர்கள் நியமிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஜோன் அமரதுங்க எம்.பி. அதுவும் தவறான செயற்பாடுதான் என்று குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம்




வடக்கு ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கிற்கான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மூன்று கட்டங் களாக இடம்பெறவுள்ளன. மடு முதல் தலைமன்னார் வரையும் மதவாச்சியிலி ருந்து மடு வரையும் மற்றும் ஓமந்தையில் இருந்து பலாலி வரையும் பூர்த்தி செய் யப்படவுள்ளன.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த வர்களுக்கான 50,000 வீடமைப்புச் செயற் திட்டத்திற்காக ஆவணங்களை நிதியமை ச்சின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர மற்றும் இந்திய எக்சிம்

வங்கியின் முகாமையாளர் ஆகியோர் பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக இடம் பெற்றதுடன், இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தற்போது துரித முன்னேற்றம் கண்டுள்ள இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் பணி தொடர்பாகவும் ஜனாதிபதி இதன் போது இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த நட்புறவுகள் பேணப்படுவதாகவும், தற்போது காணப்படும் சூழ்நிலையானது அதனை மேலும் பலப்படுத்த உதவுமெனவும் இந்திய அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

பயங்கரவாதம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள், அந்தப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இரண்டு தரப்பினரும் திருப்தியடைந்துள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்திய கொன்சியுலர் ஜெனரல் காரியாலயங்கள் இரண்டு முறையே இன்றும் நாளையும் திறக்கப்படுவதுடன், வடக்குப் புகையிரப் பாதையின் நிர்மாணம் தொடர்பான ஞாபகார்த்த பலகை நாளை திரை நீக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் வீடமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வும் நாளை அரியாலையில் இடம்பெற உள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எல். எம். கிருஷ்ணா, இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் ஆகியோர் இந்தியா சார்பிலும், வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், மின்சாரம் மற்றும் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, நிதியமைச்சின் செயலர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர ஆகியோர் இலங்கை சார்பாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நேற்று பிரதமர் டி. எம். ஜயரட்ணவையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கையில் வட பகுதி மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பது பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

இச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சின் செயலர் நிரூபமா ராவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: மக்களின் வாழ்வாதாரம் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்த் தலைவர்கள் முடிவு


வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் முடிவடையும் தருவாயிலேயே உள்ளன.

ஒரு வருடத்துக்குள் இந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு கிடைத்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதுடன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியுடனும் எதிர் காலத்தில் மிகப் பெரிய சேவையை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியது.

இச்சந்திப்பின்போது,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

26.11.2010.
கட்சிகளின் அரங்கம் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பு ஏறக்குறைய இரண்டரை மணிநேரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவரது செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்க் கட்சி அரங்கத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிறீரெலோ தலைவர் உதயராஜா, சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலர் ரி.சிறிதரன், குமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, நாளாந்தப் பிரச்சினைகளான இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை என்பன தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துக் கூறினர். சிலவற்றுக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியபோதிலும், பலவற்றுக்கு அப்பிரச்சினைகளைப் கவனிப்பதற்காக தமிழ்க் கட்சிகளின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றை தான் அமைக்கவுள்ளதாகவும், அந்தக் குழுவானது மேற்படி விடயங்களை ஆராய்ந்து தீர்வுகளை அளிக்குமென்றும் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை தமிழ்க் கட்சிகளின் அரங்கின் இச்சந்திப்பு முதலாவது சந்திப்பு என்ற ரீதியில் ஒரு நல்ல ஆரம்பமாக பார்க்கப்படுகிறது என்று அரங்கின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

26 நவம்பர், 2010

2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு மடி கணனிகள் வழங்க நடவடிக்கை

2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் சகல மாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப் படவுள்ளன.

2011 இல் பல்கலைக் கழகம் செல்லும் மாணர்களுக்கு வழங்குவதற்கென சுமார் 25000 மடி கணனிகளைக் கொள்வனவு செய்ய இரண்டு பில்லியன் ரூபா தொகையை அரசு ஒதுக்கியுள்ளது.

எதிர்காலத்தில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் கணனி மயப்படுத்தடவுள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளது.

மத்திய மாகாணத்தில் சில பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் இவ்வாறான மடிகணனிகள் வழங்கப் பட்டுள்ளன. அண்மையில் சீகிரியாவில் ஒரு கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த 270 மாணவர்களுக்கும் மடி கணனிகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்பு

விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் எனக் கூறப் படும் ‘விக்டர் பேஸ்’ இல் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 16 இனம் காணப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு வல்லிபுரம் காட்டில் ‘விக்டர் பேஸ்’ என்ற முகாமை அண்மித்துத் தோண்டப்பட்ட இரு மனித புதைகுழிகளில் இருந்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் கொலை செய்யப்பட்டு புகைக்கப் பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மேற்படி பகுதிகள் இருந்த காலத்தில் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 26 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி சுட்டுக் கொன்று அச்சடலங்களை புதைத்ததாகக் கருதப் படும் இடத்தில் தோண்டிய போது மேற்படி எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 16 சடலங்களை இனம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் குப்பையை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 2171,303 ரூபா செலவு: அரசாங்கம் தகவல்

கொழும்பு மாநகர சபையில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 21 இலட்சத்து 71 ஆயிரத்து 303 ரூபா செலவாகின்றது என அரசாங்கம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி. கொழும்பு மாநகர சபையில் கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் இந்திக்க பண்டக்ஷிர தொடர்ந்து பதிலளிக்கையில்,கொழும்பு மாநகர சபையினக்ஷில் நாளொன்றுக்கு 700 மெற்றிக் தொன் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. அதற்கென நாளொன்றுக்கு 21 இலட்சத்து 71 ஆயிரத்து 303 ரூபக்ஷி 16 சதம் செலவாகின்றது. குப்பைகளை சேகரிப்பதற்காக வீடுகளிலிருந்து கட்டணம் அறவிடப்படமட்டாது என்பதுடன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே ஒருவரி அறவிடப்படுகின்றது.

குப்பைகளை சேகரிப்பதற்கென மூன்று தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் தேசிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும். இதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாநகர சபையினால் குப்பைகளை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் மகரகம நகர சபையினால் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 594 ரூபாவும் மொறட்டுவை மாநகர சபை 29 ஆயிரத்து 239 ரூபாவையும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 81 ரூபாவையும் செலவிடுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வருகை கூட்டு ஆணைக்குழு அமர்விலும் பங்கேற்பார்

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கூட்டணைக்குழுவின் அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எஸ், எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளக்ஷிர். நாளை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் கிருஷ்ணா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கு சந்திக்கவுள்ளார்.

50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சியில் வடக்கு ரயில்வே வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் உயர்மட்டத்தினருடனான சந்திப்புக்களின்போது வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தோட்டத்துறையில் பல்லாயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்



பெருந்தோட்டத்துறையில் தரிசாகக் கைவிடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பாரிய திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா - அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பும் பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

“வரவு - செலவுத் திட்டத்திலுள்ள ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு அல்லது அரசியல் காரணத்திற்காக இந்தத் திட்டத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கக்கூடாது. வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுள்ள இந்த வரவு - செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் போன்று வேறு எந்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்வைக்கப் படவில்லை.

யாழ். குடாநாட்டுக்கு நீர்விநியோகத் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வறுமை இலங்கையில் மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது.

ஆனால் அரசாங்கம் கிராமிய மட்டத்திலிருந்து வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கின்றது. கிராமங்களில் வறுமை ஒழிந்தால் முதலாளிமார் பாதிக்கப்படுவர். அதனால்தான் முதலாளித்துவ வாதிகள் இதனை எதிர்க்கின்றனர்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளால்தான் மஹியங்கனையில் உள்ள வேடுவ இனத் தலைவரும் கைபேசியில் உரையாடுகின்றார்” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...