10 நவம்பர், 2010

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் மீட்பு: சந்திரசிறி



புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

புலிகளால் கைவிடப்பட்ட 189 கொள்கலன்கள் வட பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர் சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான இந்த கொள்கலன்கள் வட மாகாணத்திலுள்ள விவசாய அமைப்புக்களுக்கும் கூட்டுறவுச் சங்களுக்கும் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆளுநர் நேற்று செவ்வாய்க்கிழமை கொள்கலன்களை கையளித்தார்;. இந்நிகழ்வு கிளிநொச்சி புள்ளியம் பொக்கனையிலுள்ள அரிசி ஆலை களஞ்சியத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழிலாண்மை அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவாநந்தா மற்றும் பாராளுமன்ற குழுவின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

வட மாகாணத்திலுள்ள பெருமளவிலான களஞ்சியங்கள் யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ளன. தற்போது பெரும் போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை களஞ்சியப்படுத்தும் வகையில் இந்த கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் மூலம் வட மாகாணத்தை சேர்ந்த விவசாயிகளும் மக்களும் பயனடைவர் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தாதிமார் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவில்லை: ஹெக்டர் வீரசிங்க

தமது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் எவ்வித பொறுப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இன்று நடைபெறவிருந்த தாதிமார் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடாளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் நடாதத்துவதாக தாதிமார் சங்கம் தெரிவித்திருந்தது. எனினும் போராட்டத்தில் ஈடுபடாமல் வழமைபோன்று பணிகளில் ஈடுபடுவதாகவும் அவ்வாறு ஒரு போராட்டத்தில் ஈடுபட இருந்தமை பொய்யான தகவல் எனவும் தெரவித்தார்.

இதேவேளை நடாளாவிய அனைத்து தேசிய வைத்தியசாலைகளிலும் தாதிமார் தமது பணிகளில் ஈடுபடுவதாகவும் கடமைக்குச் சமூகம்தராத தாதிமார் கடமையிலிருந்து விலகியதாகவே கருதப்படுவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எட்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்ற விசேட குழு

ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றுவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஒரே பாடசாலையில் 8 வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்காக கல்வியமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 9700 பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களது சேவைக் காலம் குறித்து ஆராய்ந்து அவர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மாகம்புர துறைமுகம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாதம் 18ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி துறைமுகத்தை திறந்து வைப்பார். மாகம்புர துறைமுகத்தை திறந்து வைக்கும் வைபவத்தினை மக்கள் கண்டுகளிக்கலாம்.

இத்தினத்தில் ஜெட்லய்னர் கப்பல் மற்றும் இரு கப்பல்கள் மாகம்புர துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை கடற்படைக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்:அமைச்சுத் தகவல்

இலங்கை கடற்படைக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய கடற் பாதுகாப்பு படைப் பிரதி இயக்குனர் வி.எஸ்.ஆர்.மூர்த்தி மற்றும் இலங்கை கடற்படைப் பாதுகாப்பு இயக்குனர் ஜெனரல் ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய ஆகியோர் நேற்று படைத் தலைமையகத்தில் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரியர் எட்மிரல் தயா தர்மபிரிய இச்சந்திப்பு குறித்து தெரிவிக்கையில்,

"இருநாட்டு கடற் பாதுகாப்பு படைகளுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பவுள்ளோம். இந்தியா இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், மீன்பிடி மற்றும் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறல் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடினோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து: ஐ.தே.க

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம். எனவே அவரின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும். சிறைச்சாலையிலிருந்து பொன்சேகாவை நீதிமன்றம் கொண்டு செல்கையிலும் நீதிமன்ற வளாகத்திலும் சிறைச்சாலைக்குள்ளும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதமானது பாரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன்போது சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக்கூறுவது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையில் அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றது. இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சிறைச்சாலையை சோதனையிட சென்றிருந்தால் ஏன் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை? சிறைச்சாலை அதிகாரிகள் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டதா? ஆனால் பொலிஸார் சோதனையிட செல்வது சிறைக் கைதிகளுக்கு தெரிந்துவிட்டது. இது எவ்வாறு என்று கேள்வியெழுப்புகின்றோம்.

ஆனால் நாங்கள் ஒரு விடயத்தை வலியுறுத்துகின்றோம். அதாவது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளார். அவர் தங்கியுள்ள கூடத்துககு நானும் சென்றிருந்தேன். அங்கு அவருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. ஒரு அதிகாரி இருக்கின்றார். 60 பொலிஸார் சென்ற வேளையிலேயே பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ள நிலையில் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு கூறுவது? என அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் இந்திய அரசு உரிய நடவடிக்கை: சோனியா காந்தி

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது என்றும் அவர்கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு கடந்த அக்டோபர் 8 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கடிதத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியாகாந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் அந்தக் கடித்தில் மேலும் பிரஸ்தாபித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். அரசாங்க அதிபரின் சாட்சியம் அதிர்ச்சியுடன் வேதனையை தருகிறது: எஸ்.சிறிதரன்

2009 தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அரச அதிபர் இமெல்டா சுகுமாரினால் 2009 மே மாதம் 18 ஆம் திகதிவரையில் அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எவ்வாறு நேரில் கண்டதைப் போல் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளிக்க முடியும். இவ்வாறு பொய்களைக் கூறுகின்ற அரச அதிகாரிகளினால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யான எஸ்.சிறிதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர காலச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதார். சிறிதரன் எம்.பி இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

யாழ் குடாநாடாடில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதாகவும் அதில் தற்போதைக்கு மக்கள் மீளக்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர்களும் இராணுவ அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ். குடாநாட்டில் அதியுர் பாதுகாப்பு வலயம் என்ற எந்தவொரு இடமும் இல்லையென கூறுகின்றார்.

அண்மையில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த அவர் பொய்களை தாராளமாகவே கூறியுள்ளார். முல்லைத்தீவை விட்டு தான் 2009 தை மாதம் வெளியேறிவிட்டதாக ஆணைக்குழு முன்னிலையில் காட்சியமளித்த அரசு அதிபர் அதன் பின்னர் மே 18 ஆம் திகதிவரையிலான சம்பவங்கள் தொடர்பிலும் நேரில் கண்டதைப்போல் சாட்சியமளித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தில் வன்னியில் பொது மக்களை புலிகள் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

தை மாதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவங்களை எப்படி நேரில் கண்டவரைப்போல் சாட்சியளிக்க முடியும்.

இவரது சாட்சியம் எமக்கு அதிர்ச்சியை மட்டுமல்லாது வேதனையையும் தருகின்றது. இவர் இவ்வாறு பொய் கூறுவது யாருக்காக. இவரைப்போன்ற அரச அதிகாரிகளால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவுக்கு ஒபாமா ஆதரவு: அமெரிக்கா வரவேற்பு




:

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கிடைக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளதை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்க அரசியலில் செல்வாக்குமிக்கத் தலைவர்கள் ஒபாமாவின் அறிவிப்பை வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

""ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கிடைக்க அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீரமைப்பு அவசியம். அந்த அமைப்பு 21-ம் ஆண்டின் உண்மை நிலவரத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள மரியாதை குறித்து கேள்வி எழுப்ப முடியாது'' என்று செனட் வெளியுறவுக் குழுவின் தலைவர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

""ஒபாமாவின் அறிவிப்பு சர்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு அல்லாமல் சர்வதேச அளவில் பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளும் நெருக்கமாகச் செயல்படுகின்றன என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது'' என்று மற்றொரு செனட் உறுப்பினர் ராபர்ட் மெனென்டஸ் கூறியுள்ளார். ""உலக அளவில் அதிகமான மக்கள் தொகையை உள்ளடக்கிய 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார ரீதியிலும் துரித வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆசியப் பிராந்தியத்தின் அமைதிக்கும்,ஸ்திரத்தன்மைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர அந்தஸ்தை பெற இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உண்டு'' என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மத்திய பகுதியில் தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி


மத்திய பகுதியில் தேயிலை தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி அதிகரிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய தூதர் கூறினார். அந்த பகுதிகளுக்கு 2 நாள் பயணமாக சென்ற இலங்கைக்கான இந்தியதூதர் அசோக் ஏ கனத்தா, அங்கு வீடுகள் கட்டுவதற்கும், மருத்துவ வசதி மேம்படுத்தவும், போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவும் டில்லி உதவும் என்றும் கூறினார். அந்த பகுதியில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் கூறினர். இதனிடையே இலங்கையில் உள்ள கலாசாரம் மற்றும் கல்வி நிறுவனத்திற்கு 20 பேருந்துகளை இந்திய தூதர் வழங்கினார். மேலும் மத்திய பகுதியில் சுற்றுலாத்துறை கல்வி மற்றும் விவசாயத்துறையை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து இந்திய தூதர் ஆலோசனை நடத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...