6 ஜூலை, 2010

ஐநா அலுவலகம் முன்னாலிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கலைப்பு

ஐ.நா அலுவலகம் முன்பாக, இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரைப் பொலிசார் பலவந்தமாகக் கலைத்து வருவதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐநா அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

அதேவேளை, ஐநா அலுவலகத்திலிருந்து பொலிஸாரின் பாதுகாப்புடன் உத்தியோகத்தர்கள் வெளியேறிச் சென்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தூக்கிட்ட நிலையில் பெண்ணின் சடலம் வாழைச்சேனையில் மீட்பு



வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

36 வயது மதிக்கத்தக்க இச்சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ரி. சுவர்ணராஜா சடலத்தைப் பார்வையிட்டு மரணத்தில் சந்தேகமிருப்பதால் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவட்டுள்ளார்.

பொலிசார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலைப் புலிகள் ஆதரவு: ஜெயலலிதா விளக்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பை தாம் துணிச்சலுடன் எதிர்ப்பதாகவும், முதல்வர் கருணாநிதி அப்படி எதிர்க்கவில்லை எனவும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


முதல்வர் கருணாநிதியும் போர்க் குற்றவாளிதான் என குற்றஞ்சாட்டி வெளியிட்ட எனது அறிக்கையை அவர் கண்டித்திருப்பதை நான் வரவேற்கிறேன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் கருணாநிதி.

“தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்ற மற்றொரு தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்தும் என் மீது கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று நான் தெரிவித்தது உண்மை தான். நடைமுறையில் உலகம் சந்தித்த ஒவ்வொரு போரிலும் நடைபெற்றது இதுதான். ஆனால் கருணாநிதி, வேண்டுமென்றே போரின் போது பொதுமக்கள் கொல்லப்படுவதையும், போர் முடிந்துவிட்டது என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட பின்னர் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.

என்னை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார். 1980-களிலிருந்து எம்ஜிஆரும், நானும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு


ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தமிழ் மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், முன்னாள் பிரதமரையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பு தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது என்பது வெளிப்படையானது.

அந்த தருணத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை. ஆனால், வெள்ளைக் கொடிகளை அசைத்து, ராணுவத்தின் முன்பு சரணடைந்த விடுதலைப் புலிகளை வேண்டுமென்றே கொன்றதை நான் கண்டிக்கிறேன்.

போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்குக் குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழர்களை கொன்று குவித்ததற்குக் காரணமானவர்களுடன் விருந்தில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மகளையும், மூத்த திமுக கட்சியினரையும், கூட்டணியினரையும் அனுப்பி வைத்து அவர்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களுடன் இந்தியா திரும்பி வந்ததற்குக் காரணமான முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்து, ஜெர்மனியில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு

இங்கிலாந்து, ஜெர்மனியில்    ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு
இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஈரான் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தனது அணுசக்தி கொள்கையில் ஈரான் பலமாக உள்ளது.

அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, ஈரான் மீது ஒருதலைபட்சமான சட்டத்தை இயற்றியுள்ளது. அதாவது ஈரானுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிடம் இருந்து ஈரான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் அரசு விமானங்களும், தனியார் விமானங்களும் சென்று வருகின்றன.

இதனால் அங்கு வாழும் ஈரானியர்கள் தங்கள் நாட்டுக்கு சென்றுவர வசதியாக இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையாதலால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் ஈரானுக்கு வருகின்றனர். எனவே பெருமளவில் ஈரான் பயணிகள் விமானங்கள் விடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த விமானங்களுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பெட்ரோல் நிரப்ப மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைக்கு பிறகுதான் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ஈரான் விமான பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு ஈரானுடன் வர்த்தக ரீதியான தொடர்பு வைத் துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார குற்றம் இழைத்து விட்டது.

அதன் விளைவை அந்நாடு விரைவில் சந்திக்கும் என ஈரானை சேர்ந்த எம்.பி. பெர்வேஷ் சோரோரி தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்றைய ஐநா கூட்டத்தொடரில் எலிசபெத் மகாராணியார் உரை

பிரித்தானியவின் எலிசபெத் மகாராணியார் இன்று மாலை, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். 50 வருடங்களின் பின்னர் ஐநா கூட்டத் தொடரில் இவர் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1957 ஆம் வருடம் இடம்பெற்ற ஐ.நா. கூட்டத்தொடரில் இவர் முதன்முறையாக உரையாற்றினார்.

இன்றைய கூட்டத் தொடரில் ஐ.நாவின் 16 தலைமை உறுப்பினர்கள் முன்னிலையில் இவர் உரையாற்றுகின்றார்.

எலிசபெத் மகாராணியார், இராச்சியம், பேர்பூடா, எந்திகுவா, அவுஸ்திரேலியா, பஹமஸ், பார்படொஸ், பிரேசில், கனடா, ஜமெய்க்கா, நியூசிலாந்து, பப்புவாநியூகினியா, செய்ன்ட்கிட்ஸ், நேவிஸ் சென்லுசியா, சென் வின்செண்ட், ஜெனடின்ஸ், சொலமன் தீவு மற்றும் துவாலு ஆகிய பிராந்தியங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியுடனான ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. நிபுணர் குழு நியமனம்-ஜெனரல் சரத்பொன்சேகா

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதிக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே மூவர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்ட த்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன.

இதில் தவறு இழைக்கப்படவில்லை என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் எம்.பி. யுமான ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். அரசாங்கம் தவறிழைக்காவிடின் ஐ.நா. நிபுணர் குழுவுக்கு ஏன் பயப்பட வேண்டும். அதில் இருந்து ஏன் ஒளிந்திருக்க வேண்டும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டால் மருமகன் சரணடைவார். மக்களுக்கு பின் சென்று கொண்டிருந்த சி.ஐ.டி. யினர் தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினரை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இராணுவ முன்னெடுப்புக்கள் சர்வதேச சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்பட்டன. இதில் தவறு இழைக்கப்படவில்லை. அதற்கு நான் பொறுப்பு கூறுவேன். ஜனாதிபதி 2009 ஆம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நா. வின் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. தவறுகளை இழைத்திருக்காவிடின் ஒளிந்திருக்க ஏன் நீங்கள் முயலுகின்றீர்கள்.

நாட்டில் 30 வீதமானவரே 2000 டொலரை வருமானமாக பெறுகின்றனர். சம்பளத்தை பொறுத்தமட்டில் இராணுவ அதிகாரிகளே கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். சரியாக வேலை செய்தாலும் மரண அச்சுறுத்தல் அல்லது இடமாற்றம் வழங்கப்படுகின்றது. மக்கள் அரசாங்கத்தின் பால் அச்சம் கொண்டுள்ளனர். சட்டத்தரணிகள் எழுந்து நிற்கின்றனர். சட்டத்தை பாதுகாக்கின்றனர். யுத்தத்திற்கு பின்னர் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இனங் காணவும் இல்லை.இராணுவ வீரர்கள் தமக்கு சுமையாக இருக்கின்றனர் என அரசாங்கம் கருதுகின்றது. தற்போது இராணுவத்தினர் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு பின்னர் அவர்களின் நலன்கள் பேணப்படுவதில்லை. அரசியல் தலையீட்டினால் பொலிஸ் சேவை இன்று சீர்குலைந்துள்ளது. அரசாங்கத்திற்கு சார்பானவர்களே வடக்கு கிழக்கில் சேவைக்கு அமர்த்தப்படுகின்றனர். அங்கு சேவையில் இருப்பவர்கள் இரண்டாம் தரமாகவே கணிக்கப்படுகின்றனர்.

தாய் நாட்டிற்கு பங்கம் ஏற்படாத வகையில் செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாரில்லை. முன்னர் பெற்றுக் கொண்ட ஆயுதங்களுக்கான கடனையே அரசாங்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. நாட்டில் சட்டம் பாதுகாக்க வேண்டும் சட்டம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கீழே இருக்கின்றது. அவர் முட்டாள்தனமான செயலையும் செய்வார். நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றப்படுமானால் எனது மருமகன் பொலிஸில் சரணடைவார். அவர் வயதுக்கு வந்தவர். அவரை சரணடையுமாறு நான் கூற வேண்டியதில்லை.அரசியல்வாதிகள் சட்டத்திற்குள் தலையீடுகளை செய்யக் கூடாது. பஞ்சாயுதகாரனும் பந்தம் பிடிப்பவர்களும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். மிரானில் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு அனுப்பியது யார்? என்பதை கண்டறிய வேண்டும். உள்நாட்டு முரண்பாடு சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வயது வரை நான் சேவையில் இருந்திருக்கலாம். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் ஓய்வு பெற்றேன். வெளிநாட்டுக்கு செல்லும் இராணுவ வீரனுக்கு 200 டொலர்களே வழங்கப்படும். எனினும் ஜனாதிபதியின் மகனுக்கு 5000 டொலர்கள் வழங்கப்பட்டது எவ்வாறு? அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலேயே சி.ஐ.டி. யினர் ஈடுபட்டனர். எனினும் இன்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பின்னாலும் சபாநாயகர் பின்னாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பின்னாலும் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பந்தம் பிடிப்பதற்கு அன்று ஒருவரே இருந்தார் இன்று அப்பணியை பலரும் செய்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையருக்கான விசா தடையை நீக்க வேண்டும்:சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் சட்டவிரோத அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என நியூயோர்க்கைத் தளமாக கொண்ட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய இயக்குனர் இலேன் பேர்சன் இன்று இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இலங்கை ஆப்கானிஸ்தான் அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக அந்த நாடுகள் தற்போதும் எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களுக்கு துன்பத்தை விளைவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக விசேடமாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வீசா தடைக்காலப்பகுதி எதிர்வரும் 8ம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கான புதிய பிரதமராக ஜுலியா கில்லார்ட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குறிய நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என தாம் எதிர்பார்ப்பதாக இலேன் பேர்சன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிககளுக்கு எதிரான தடையை நீக்குவதன் மூலம் மனித உரிமைகளை பேணும் சிறந்த நாடு அவுஸ்திரேலியா என்பதை அவர் வெளிப்படுத்துவார் என நம்புவதாகவும் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

நாடுகடந்த அரசை ஒழிக்க அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்:ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நாம் வரவேற்கின்றோம். அந்த பேச்சுவார்த்தை இந்தியாவிற்குச் செல்வதற்கு முன்னதான பேச்சாக மட்டும் அமைந்து விடக் கூடாது. நாடு கடந்த அரசாங்கத்தை இல்லாதொழிக்க அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பேச்சில் அடிப்படை இணக்கப்பாடு எட்டப்படுமாயின் நாமும் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்பதுடன், இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்குள் ளேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதியின் கீழ் 62 வீதமான செலவிற்கான அமைச்சுக்களும் நிதி நிறுவனங்களும் இருக்கின்றன. அப்படியாயின் இங்கிருக்கின்ற அமைச்சர்கள் தகுதியானவர்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு தகுதி இல்லையா?

நிதியமைச்சில் நிதி, நிதிச் சலுகை மற்றும் திட்டம் தேவை இவையெல்லாம் இருக்கின்றதா? ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஆலோசர்களும் காரியாலயங்களும் ஏராளம். அமைச்சர்களுக்கு அமைச்சுகளுக்கு பொறுப்பு கூற முடியாதா? ஆலோசகர்களை இரவில் முக்கிய ஹோட்டல்களில் கண்டுகொள்ளலாம். 50 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரை கொண்டு வருவதாக அறிவித்தனர். எனினும் அதற்கென ஓர் அமைச்சு இல்லை.

??? நாடுகளின் தகுதியானவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு தகுதியான சுற்றுலாத்துறை அமைச்சுக்கு தகுதியானவர் இல்லையா? அப்படியாயின் சரத் அமுனுகமவை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமியுங்கள்.

பி.பி. ஜயசுந்தர 4 அமைச்சுக்களுக்கு செயலாளராக இருக்கின்றார். ஒன்பது அமைச்சுகளும் 63 வீதமான நிதியை கையாளும் நிறுவனங்களும் ஜனாதிபதியின் கீழ் இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமைச்சரவை இல்லை அமைச்சரவையின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. நகரங்களை கட்டியெழுப்புவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தேவையா? அப்படியாயின் அமைச்சர்கள் திருடர்கள் என நினைக்கின்றார்களோ என்பதை நீங்களே கண்டறியவேண்டும். பொது நலவாய பாராளுமன்ற சங்கத்தின் கூட்டத்திற்கு இருவரின் பெயரை நாம் குறிப்பிட்டோம். சரத் பொன்சேகாவை அங்கு அனுப்புவதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கினார்.

பாராளுமன்றத்தின் அனுமதி மட்டுமன்றி நீதிமன்றத்தின் அனுமதியும் தேவை என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் இங்கு நடைபெற்ற குழுக்கூட்டத்தில் அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. "ஹராரே' பிரகடனத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். கஞ்சா தொடர்பில் பிரகடனத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2005 முதல் 2008 வரையிலும் கணக்காய்வாளர் அதிபதியின் கணக்காய்வு அறிக்கை இன்று வரையிலும் முன் வைக்கப்படவில்லை. ஆராய்வுக் குழுவொன்று பாராளுமன்றத்தில் இல்லை.

அரசியலமைப்பு மக்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். அது குடும்ப அரசியலமைப்பாக இருக்கக் கூடாது என்பதுடன் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் தினேஸ்குணவர்தனவின் குழுக்களின் அறிக்கையில் 90 வீதத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம்



இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது.

யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் பாரிய அவலங்களைச் சந்திப்பதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் பெண்கள், யுவதிகள் பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்குவதாகவும் ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்தினால் நிதி

வடக்கு, கிழக்கில் உள்ள வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்க நிதிக்கு புறம்பாக வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளின் ஆரம்ப கட்டம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தொகுதியில் நேற்று (05) நடைபெற்ற இஸ்லாமிய மத அலுவல்கள் தொடர்பான செயற்குழு கூட்டத்தில் பங்குபற்றியபோதே பிரதமர் தி.மு. ஜயரட்ன இவ்வாறு கூறினார்.

புத்த சாசன மற்றும் மத அலுவல்களுக் கான அமைச்சர் என்ற வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வணக்கத் தலங் களையும் சீராக பராமரிக்கும் வேலைத் திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை அறி முகப்படுத்த தான் தீர்மானித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் நிலவும் பிரச்சினைகளுடன் இஸ்லாமிய பள்ளவாசல்களில் ஒலிபெருக் கிகளின் பாவனை தொடர்பாக நிலையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் களின் போது தமது கணவர்மாரை இழந்த முஸ்லிம் விதாவைகளுக்காக பாது காப்பு திட்டமொன்றை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் செயற்குழுவின் அதி காரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறான திட்டத்தின் மூலம் அப்பிரதேசத்தில் நிலவும் சமூக பிரச்சினைகள் பலவற்றை குறைக்க முடியமென்றும் பிரதமர் மேலும் கூறினார்.

இஸ்லாமிய மத அலுவல்கள் தொடர்பாக செயற்குழு கூட்டத்துக்கு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, புத்த சாசன மற்றும் மத அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் எம்.கே. டி.எஸ். குணவர்தன, சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.
மேலும் இங்கே தொடர்க...