11 நவம்பர், 2009

11.11.2009 தாயகக்குரல்27

ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால் பொது வேலைத்திட்டம் ஒன்றின்கீழ் பொது வேட்பாளர் ஒருவரை எதிரணி சார்பில் ஏகமனதாக நிறுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். ஆனால் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் இணங்கவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.

இதுவரைகாலமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதுபற்றி செய்திகள் வெளியிட்டு வந்தன. குறிப்பாக பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் அடிபட்டு வந்தன.
இப்போது சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் ஒப்புதல் பெறப்படவேண்டும் என்று ரணில் தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை சரத் பொன்சேகாவை பொது வேட்பளராக நியமிப்பதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா,

எதிர்கட்சி பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணிக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படி இருந்தும் சரத் போன்சேகாவை பொது வேட்பாளராக நியமிக்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டால் தானும் ஆதரிப்பதாக ரணில் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பதை ரணில் தட்டிக் கழிக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்பை ஆதரிப்பதான ஒரு தோற்றத்தையும் ரணில் ஏற்படுத்தியுள்ளார்.

சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதென்றால் அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவேண்டும். இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெறும்போது அதை ஜனாதிபதி அங்கீகரிக்கவேண்டும். எனவே அவர் ஓய்வு பெறுவதை ஜனாதிபதியால் காலதாமதப்படுத்தவும் முடியும்.
இதன் அடிப்படையிலேயே எதிரணி வேட்பாளர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ரணில், சரத் பொன்சேகா தேர்தல் களமிறங்குவதற்கான தமது சம்மதத்தை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ளவராக தம்மை மாற்றிக்கொள்ளும் விதத்தில் படைத்துறைச் சேவையிலிருந்து வெளிவரவேண்டும் என்றும் தெரிவித்திருக்கலாம்.

சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக அறிவிக்க அவர் சில வாக்குறுதிகளை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்றும் ரணில் தெரிவிக்கிறார். அவை:-
சரத் பொன்சேகா ஜனாதிபதியாகி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறவே ஒழிப்பதாக அறிவிக்கவேண்டும்.
ஜனாதிபதியானதும் காபந்து அரசை அமைத்து அதன் பிரதமராக தன்னை (ரணிலை) நியமிக்கவேண்டும்..
அவசரகாலச் சட்டத்தை நீக்கி 17வது திருத்தத்தை முழு அளவில் அமுல்படுத்தவேண்டும்.

குறுகிய காலத்துள் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு முழு அதிகாரத்துடன் தோற்றுவிக்கப்படும் பாராளுமன்றம் அமைதி, சமாதானம், தீர்வு ஆகியவை எட்டப்படுவதை உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்ற நிபந்தனைகளை ரணில் விதித்துள்ளார்.
எதிர்கட்சி கூட்டணியின் முக்கிய கோட்பாடு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என கூறுகின்றனர். 1978 ஆகஸ்ட் மாதம் ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டுவந்தது. அந்த அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்காவும் அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 17 வருடங்கள் ஜனாதிபதி ஆட்சி முறையை அனுபவித்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அதை ஒழிக்கவேண்டும்; என்ற பொது கோட்பாட்டின் அடிப்படையில் எதிர்கட்சிக் கூட்டணியை அமைத்துள்ளது. நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணியாக உள்ள இனப்பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைக்காத ஐக்கிய தேசியக் கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் சரத் பொன்சேகாவிடம் உறுதிமொழி கேட்கிறார்.

ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என ரணில் விக்கிரமசிங்கா கூறும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதி சட்டதரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.சொக்ஸி ஜனாதிபதி முறை தொடரவேண்டும் என்றும் அந்த பதவிக்கான அதிகாரங்களை மீள்பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவதே உசிதமானது என்றும் தெரிவிக்கிறார். 1978ல் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதில் கே.என்.சொக்ஸிக்கும் முக்கிய பங்குண்டு.
ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் பின்னர் ஏனைய பிரச்சினைகளை பாராளுமன்றம்தான் தீர்க்கவேண்டும். ஆனால் யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசியலமைப்பில் மாற்றங் கொண்டு வரவேண்டும். அரசியலமைப்பின்படி ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கத்தவர் பலம் வேண்டும்.

பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடனேயே ஜே.ஆர். ஜெயவர்த்தன புதிய அரசியலமைப்பில் விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார். தொகுதிவாரியாக நடைபெறும் தேர்தலில் ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கலாம். இப்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையால் தனித்து எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது. நடந்து முடிந்த எட்டு மாகாணசபை தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் பலத்தையாவது பெறுமா என்பது சந்தேகமே.
தொகுதிவாரியான தேர்தல் முறையால்தான் 1970ல் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 1972ல் புதிய அரசியல் யாப்பின்மூலம் இலங்கை குடியரசானது.

1977ல் ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டாவது பெரும்பான்மை பெற்று எதிர்கட்சியானது. இந்த பெரும்பான்மை மூலமே 1978ல் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் யாப்பை மாற்றி ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவந்தது.
எனவே எதிர்கட்சி கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி பாராளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் மாத்திரமே ரணில் தெரிவித்துள்ள நிபந்தனைகள் நிறைவேறமுடியும். இது சாத்தியமாகுமா? இதுவே சரத் பொன்சேகா முன் நிற்கும் கேள்வியாகும். மக்கள் முன் நிற்கும் கேள்வியும் இதுவேயாகும்
மேலும் இங்கே தொடர்க...
கப்பலிலுள்ள இலங்கையர்களில் எண்மர் இந்தோனேசியாவில்
தரையிறங்க இணக்கம்-







இந்தோனேசியக் கடற்பிராந்தியத்தில் தரித்துள்ள கப்பல் தங்கியிருக்கும் 78 இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளையும் பிலிப்பைன்ஸின் இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு செல்வது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் குடியேறிகளை பிலிப்பைன்ஸக்கோ அல்லது நத்தல் தீவுக்கோ அழைத்துச்செல்வது அவுஸ்திரேலிய அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவருகிறது. சட்டவிரோத குடியேறிகளைக் கொண்ட ஓசியானிக் வைகிங் கப்பல் இந்தோனேசிய கடற்பிராந்தியத்தில் தரித்து நிற்பதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடைகின்றது. ஏற்கனவே இந்த காலஅவகாசம் நவம்பர் 06ம் திகதியாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அவுஸ்திரேலியாவின் தீர்மானங்களுக்காக காலஅவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே இவ்விடயம் தொடர்பில் சிங்கப்பூரிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் மார்டி நிழலோகாவோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியவில் தரித்துநிற்கும் கப்பலில் உள்ளோரில் எட்டுப்பேர் இந்தோனேசியாவில் தரையிறங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர பாதுகாப்புச்சேவை பணிப்பாளர் சுஜத்மிகு இதனைத் கூறியுள்ளார். இக்கப்பலிலுள்ள ஏனைய இலங்கையர்களும், யாவா தீவின் மெரக் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மற்றொரு கப்பலிலுள்ள 255இலங்கையர்களும் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா செல்வதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
அகதிகளுக்கு நியூசிலாந்து உதவவேண்டும் என கோரிக்கை


78 இலங்கை அகதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலை ஏற்க நியூசிலாந்து அரசாங்கம் மறுத்துள்ள நிலையில்,ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் உதவவேண்டும் என அந்நாட்டின் அகதிகளுக்கான பேரவையின் தலைவர் நாகலிங்கம் இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு இராசலிங்கம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கான பாதுகாப்பை நியூசிலாந்து அரசாங்கத்துக்கு வழங்க முடியும் என்றும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அகதிகள் தொடர்பாக முறையான கொள்கையை நியூசிலாந்து பேணி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியா இதற்கு தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
எதிர்க்கட்சிப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே : ஐ.தே.க.தெரிவிப்பு


பொது வேட்பாளர் மிகவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது எதிர்க்கட்சியே என்பதை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துவதாகவும் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது எதிர்க்கட்சி வேட்பாளர்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் தெரிவு செய்யுமளவுக்கு புதிய கலாசாரம் உருவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இவ்வாறு அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தித் தேர்தலில் இவர் போட்டியிடலாம், இவரால் போட்டியிட முடியாது என்றெல்லாம் கருத்து தெரிவிப்பது, ஜனநாயகம் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள தெளிவினைப் பறைசாற்றுவதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் எந்தத் தேர்தலை நடத்தினாலும் தாம் வெற்றி பெறுவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், எவ்வாறான குளறுபடிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டாலும் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

பொலிஸ் மாஅதிபரை பொதுமக்கள் வெள்ளிக்கிழமைகளில் சந்திக்கலாம்

வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க புதிய பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தீர்மானித்துள்ளார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண உள்ளதாக பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

பொதுமக்களை காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை சந்திக்கவே தான் முன்னர் தீர்மா னித்ததாகவும் முஸ்லிம்கள் வெள்ளி க்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக செல்வதால் ஒரு மணி நேரத்தினால் இதனை நீடித்ததாக வும் பொலிஸ் மாஅதிபர் தெரிவி த்தார். தேவை ஏற்பட்டால் 2.30 மணிக்குப் பின்னரும் தான் பொது மக்களை சந்திக்க தயாராகவுள்ளதா கவும் அவர் கூறினார்.


மேலும் இங்கே தொடர்க...

காணாமற்போனோர் தொடர்பான விசாரணை:

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாவது இடைக்கால அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென குழுவின் தலைவரான மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மஹாநாம திலகரட்ன தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் விசாரணைகள் இன்னமும் நிறைவுபெறவில்லையெனக் கூறிய அவர், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளை மேலதிகமாக கோரியிருப்பதாகவும் கூறினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்றுக் காலை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே முன்னாள் நீதிபதி இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலை, கந்தளாய் பகுதிகளில் காணாமற்போனோர் தொடர்பான 134 முறைப்பாடுகள் குறித்து அங்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நேற்று இந்தச் செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.

திருகோணமலையில் மேலும் 40 பேர் முறைப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மேலதிகத் தகவல்களை எமக்கு வழங்கினார்கள்.


மேலும் இங்கே தொடர்க...

10 நவம்பர், 2009

சரத் பொன்சேகாவின் இராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படும்?





தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், சரத் பொன்சேகா இராஜிநாமா கடிதத்தை வழங்கினால் அதற்கான மறுமொழியை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடும்போது பேசுகையில், தனது உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்காக, தமது சீருடையை அகற்றிக்கொள்வதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
தமிழ் தேசிய கூட்டமைப்பு-ஜனநாயக தமிழ் தேசிய முன்ணி இன்று சந்திப்பு








தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனநாயக தமிழ் தேசிய முன்ணிக்குமிடையில் இன்று முதற் தடவையாக கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் உட்பட சில பொதுவான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு இவ்விடயங்களில் ஒருமித்து செயல்பட வேண்டியதன் அவசியததை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையானது திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் அமைய வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பும் ஒருமித்த கருத்ததாக கொண்டிருந்தன.

இச் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ ,பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவோ எதுவும் பேசப்படவில்லை என தெரிய வருகின்றது.

மேலும் எதிர் காலத்தில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு மித்து செயல்படுவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்ட போதிலும் எதிர்காலத்தில் இது தொடர்பாக தொடர்ந்து பேசுவது என்றும் இரு தரப்பினருக்குமிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
மேலும் இங்கே தொடர்க...
இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் திட்டமில்லை : ஐரோப்பிய ஒன்றியம்



இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கும் திட்டமெதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தடைகள் விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியான செய்திகளில் உண்மையில்லை.

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. குறித்த சலுகைத் திட்டம் மறுக்கப்பட்ட போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு தடைகள் விதிக்கப்பபட மாட்டாது.

பயணத் தடைகள் விதிக்கப்பட வேண்டுமாயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு விரும்புகின்றது.

சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் உத்தியோகபூர்வ பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
கண்ணிவெடிகளை அகற்றியதும் மீள்குடியேற்றம் : 'ஜனஹமுவ' நிகழ்வில் ஜனாதிபதி



"நிவாரணக் கிராமங்களில் இன்னமும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரே இருக்கின்றனர். இவர்களின் உயிருக்கு நானே பொறுப்பு. எனவே கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்களை மீள்குடியேற்ற முடியும்" என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்தார்.

'ஜனஹமுவ' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்நாட்டை மக்கள் என்னிடம் கையளித்தபோது, நாடு இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இதனை ஐக்கியப்படுத்துவது மக்களினது எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.

புலிப் பயங்கரவாதிகளின் இராணுவக் கட்டமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எதிர்காலப் பரம்பரைக்கேற்ற வகையில் நாட்டை உருவாக்கியுள்ளோம். எமது நடவடிக்கைகள் தேர்தலை நோக்காகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் அபிவிருத்தியைக் குறியாகக் கொண்டது.

கிழக்கின் உதயம் தோன்றியுள்ள அதேவேளை, வடக்கின் வசந்தம் தொடர்பிலான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் தெளிவாக அறிவித்திருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் மட்டுமல்ல, வேறு எந்த அமைப்பும் எமக்கு எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. அதேபோல், உழைக்கும் வர்க்கத்தினரின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கூறவும் இல்லை.

சரத் குறித்துக் கூற எதுவுமில்லை

சரத் பொன்சேகா குறித்து எதுவும் கூறுவதற்கில்லை. அவர் இராணுவத்தின் உயர் அதிகாரியாவார். அதுமட்டுமே எனக்குத் தெரியும்.

எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டிருப்பதாக பல கதைகள் கூறப்பட்டன. முழு உலகிலுமே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், எமது நாட்டின் சிறந்த முகாமைத்துவம் காரணமாக உலக சவால்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாது செயற்பட முடிந்தது.

நான் பிரான்ஸில் இருந்தோ அல்லது இங்கிலாந்தில் இருந்தோ வரவில்லை. ஆகவே, எனக்கு இங்குள்ள நிலைமைகளை நன்கறிய முடியும். யுத்தத்தை வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையை மாற்றியமைத்து, அதனை நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

அரசாங்கம் என்கின்ற வகையில், எந்தவொரு போராட்டத்திற்கும் முகம் கொடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். தற்போது ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் தேவை கருதிய குழுவொன்றினாலேயே இயக்கப்படுகின்றது.

யுத்த காலத்தின் போது நாம் கிளிநொச்சியை நெருங்கிய சந்தர்ப்பத்தில், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் இதுபோன்ற அழுத்தங்கள், நெருக்குதல்கள் எமக்கு வந்தன. இதனை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். ஊழியர்கள் மட்டுமல்லாது, அனைவருமே தமது தாய்நாடு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

மே மாதம் 19ஆம் திகதி தான் யுத்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் சுமார் 3 லட்சம் வரையிலான மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகை தந்தனர். யுத்த காலத்தில் பெருமளவிலான மக்கள் இங்கு வருகை தரக் கூடும் என அறிந்திருந்தமையால், சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கான தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், ஒரேயடியாக 3 லட்சம் மக்கள் வருகை தந்தமையால் அவர்களுக்கான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று. அதனையும் நாம் செய்தோம்.

பிரபாகரனின் பெற்றோர்

இது குறித்து பலவிதமாகப் பேசப்படலாம். இவ்வாறு வருகை தந்தவர்களோடு, பயங்கரவாதிகளும் ஊடுருவினர். இவர்களில் தான் பிரபாகரனின் பெற்றோரும் தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகளும் அடங்கியிருந்தனர்.

அரசாங்கத்தை நம்பி வந்த மக்களை அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை இப்போது நாம் மேற்கொண்டு வருகிறோம். இற்றை வரையில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம்.

மீட்கப்பட்ட பிரதேசங்களில் கண்ணிவெடிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, கண்ணிவெடிகளுக்குள் மக்களை தள்ளிவிட முடியாது. மீண்டும் ஒரு பயங்கரவாத நிலைமை உருவாவதற்கு இடமளிக்கவும் முடியாது.

அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தங்குமிட வசதிகள், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உள்நாட்டின் அழுத்தம் காரணமாகவோ அல்லது சர்வதேச நெருக்குதல் காரணமாகவோ நாம் இதனை மேற்கொள்ளவில்லை" என்றார்.

இந்தச் சந்திப்பில், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்த்தன, சம்பிக்க ரணவக்க, அதாவுல்லா, முரளிதரன் மற்றும் விமல் வீரவன்ஸ எம்.பி., பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, திறைசேயின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...