9 டிசம்பர், 2010

அவசர கால சட்டம் 130 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 130 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 145 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஜே. வி. பி. யும் ஐ. தே. க. வும் எதிராக வாக்களித்தன.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாதத்துடன் அவசர காலச் சட்ட பிரேரணை மீதான விவாதமும் ஒன்றாக நடைபெற்றன.

பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டம் மீதான பிரேரணையை சமர்ப்பித்து பேசினார். எதிர்க்கட்சி பிரதம கொறடா ஜோன் அமரதுங்க விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

போர்க்குற்றம் தொடர்பாக கரு ஜயசூரியவின் பேட்டி சபையில் சர்ச்சை; கூச்சல் குழப்பம்: சபை 10 நிமிடம் ஒத்திவைப்பு






போர்க்குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.தே.க எம்.பி. கரு ஜயசூரிய ஆங்கில பத்திரிகையொன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் நேற்றும் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்களுக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

கரு ஜயசூரிய எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பற்றி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விசேட விளக்கமொன்றை சபா நாயகரின் அனுமதியுடன் சபையில் தெரிவித்தார். இந்த விளக்கத்தின்போது தனது பெயர் குறிப்பிடப்பட்டதால் தானும் விளக்கமளிக்க வேண்டியவனாக இருக்கின்றேன் எனக் கூறி சபாநாயகரிடம் அனுமதி கோரினார்.

இச்சமயத்திற் கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயலத் ஜயவர்தன எம்.பி. மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் தாக்குதல் முயற்சியின் அடிப்படையிலேயே கரு ஜயசூரிய எம்.பி. இக்கருத்தை வெளியிட்டுள்ளார் எனக் கூறியதுடன் அரசின் மீது அவதூறுகளை சுமத்தினார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர். கூச்சலுக்கு மத்தியில் கரு ஜயசூரிய எம்.பி.யும் தனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரியபடி எழுந்து நின்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.

உறுப்பினர்களை ஆசனங்களில் அமருமா றும், அமைதியாக இருக்குமாறும் பலமுறை சபாநாயகர் அறிவுறுத்தல் வழங்கினார். சபையில் தொடர்ந்தும் குழப்பநிலை ஏற்பட்டதால் சபையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். காலை 10.35 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் காலை 10.55 க்கு ஆரம்பமானது. கரு ஜயசூரிய எம்.பி. தனது விளக்கத்தை அளிப்பதற்காக எழுந்து நின்றார். அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் எழுந்து நின்று கூச்சலிட்டவாறே இருந்தார்.

மிக முக்கியமான விடயங்கள் இன்றைய விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் பலமுறை மேர்வின் சில்வாவை அமைதியாக இருக்குமாறு பணித்தார். அவர் தொடர்ந்தும் எழுந்து நின்றவாறு பேசிக்கொண்டிருந்தார். நீங்கள் அமரவில்லையா நான் இன்று முழு நாளும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டுச் சென்று விடுவேன் என சபாநாயகர் கூறினார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் மேர்வின் சில்வாவை அமரச் செய்தனர். இதன் பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின. கரு ஜயசூரிய தனது விளக்கத்தை தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2,500 மெ. தொ. கோழி இறைச்சி, 50 மில். முட்டைகள் உடன் இறக்குமதி





பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் தட்டுப்பாடின்றி கிடைக்கும் விதத்தில் 2500 மெற்றிக் தொன் கோழி இறைச்சியும் 50 மில்லியன் முட்டைகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என கூட்டுறவு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாகவோ குறைவாகவோ விற்கப்படமாட்டாது. சந்தையில் கோழி இறைச்சியின் கட்டுப்பாட்டு விலையாக 350 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று பாராளுமன்ற த்தில் கேட்ட வாய் மொழி மூல விடை க்கான கேள்வியொன் றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித் தார்.

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான கோழி இறைச்சியை சந்தையில் 350 ரூபாவுக்கு விற்கப்படும். பண்டிகை காலத்தில் இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்ற காரணத்தினால் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்தார்.

இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு 11,000 மெற்றிக் தொன் கோழி இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 8750 மெற்றிக் தொன் இறைச்சி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை. பண்டிகை காலமொன்று வரும்போது இவ்வாறு விலை அதிகரிப்பது இயற்கையே. எனினும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படாத விதத்தில் கட்டுப்பாட்டு விலையை விட குறைவாக விற்பதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் உள்ளூரில் தயாரிக்கப்படுகின்ற சொசேஜஸ் வகைகளுக்கான கோழி இறைச்சியும் இறக்குமதி செய்யப்படுகின்றன. சோசேஜஸ் வகைக்காக மனித பாவனைக்கு உகந்ததென அங்கீகரிக்கப்பட்ட கோழி உள்ளுறுப்புகள் இறக்குமதி செய்யப் படுகின்றன.

இவை கோழி இறைச்சி என்றே குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், சீனா,ஜேர்மன் போன்ற நாடுகளிலிருந்து சொசேஜஸ் உற்பத்தி நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்கின்றன. 2006 ஆம் ஆண்டு 3,90,322 கிலோ இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் மேலும் தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. இதனைத் தொடர்ந்து கேள்வி நேரம் ஆரம்பமானபோதே தயாசிறி ஜயசேகர இக்கேள்வியை கேட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி, களுத்துறை, காலி, மாத்தளை, கேகாலை: மலைசார்ந்த பிரதேசங்களில் மண்சரிவு அபாயம்; எச்சரிக்கை


அடை மழை பெய்து வருவதால் மலை சார்ந்த பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப் பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

இதன் காரணத்தினால் கண்டி, களுத்துறை, மாத்தளை, காலி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் மலை சார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, கடந்த இரு வாரங்களில் கண்டி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 61 மண் சரிவுகள் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார். இது இவ்வாறிருக்க, கண்டி மாவட்டத்தில் 90 வீடுகளும், கேகாலை மாவட்டத்தில் 40 வீடுகளும், மாத்தளை மாவட்டத்தில் ஒரு வீடுமென 131 வீடுகள் மண்சரிவு ஆபத்து மிக்க பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தில் ஓரளவு மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் 30 வீடுகளும் அமைந்துள்ளன.

இவ்வீடுகளில் வாழ்பவர்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிபாரிசுகளை அந்தந்த பிரதேச செயலகங் களுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை விரிவுபடுத்த திட்டம்

தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றனர். சர்வதேச ஒத்துழைப்புடன் உள்நாட்டில் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பும் முயற்சியை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தேசிய பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதமும் இடம் பெற்றது.

பிரதமர் மேலும் கூறியதாவது:- தனது முதலாவது பதவிக் காலத்தில் யுத்தத்தை வெற்றி கொண்ட ஜனாதிபதி தற்பொழுது தனது இரண்டாவது பதவிக் காலத்தில் பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்ளும் சவாலை ஏற்றுள்ளார்.

5 துறைகளில் நாட்டை அபிவிருத்தி செய்ய மஹிந்த சிந்தனை திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முடிவு கட்டியுள்ள நிலையில் பிரதான நாடுகள் இலங்கை குறித்து கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன. இதனூடாக நமது நாட்டுக்கு நன்மையான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை பொறுக்காத தேசத்துரோக சக்திகள் உலகின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ளன. கடந்த மாதத்தில் புலிகளின் சர்வதேச மட்ட செயற்பாடுகள் அதிகரித்திருந்தது. ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தை தடுக்க புலி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புலிகளின் செயற்பாடு அரிகரித்து வருகிற போதும் சில மேலைத்தேய நாடுகள் இன்னும் தமது போக்கை மாற்றிக் கொள்ளாதுள்ளன. அவை இலங்கை தொடர்பில் குரோதத்துடன் நடந்து கொள்கின்றன. அத்தகைய நாடுகளுடன் பேச அவற்றின் போக்கை மாற்ற வேண்டியுள்ளது.

புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படாத போதும் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. 50 ற்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் மீண்டும் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்து வதில்லை என உறுதியாக கூறியுள்ளனர்.

இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளதாக செனல் – 4 தொலைக் காட்சி மீண்டும் குற்றஞ்சாட்டி யுள்ளது. இந்த குற்றச்சாட்டினால் சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதால், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கு, கொழும்பு நகரப் பகுதியில் புலிகளும், ஆயுதங்களும் தொடர்ந்து பிடிபடுவது தொடர்ந்து இடம்பெறுகிறது.

வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கையினுள் தமது செயற்பாடுகளை பரப்ப திட்டமிட்டு வருவது அவர்களின் செயற்பாடுகள் மூலம் தெளிவாகிறது. அதனால், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டில் புலிகள் இயக்கத்தை மீள கட்டியெழுப்பு வதைத் தடுக்க உடனடியாக செயற்பட வேண்டியுள்ளது.

வவுனியாவிலுள்ள இடம் பெயர்ந்தோருக் கான முகாம்களில் இருந்து கைதான 4 புலி பயங்கரவாதிகளிடமிருந்து பெற்ற தகவல்களின்படி, கிளிநொச்சியில் அமைக் கப்பட்டிருந்த வதை முகாமில் சுட்டுக் கொலை செய்து எரிக்கப்பட்ட 60 படை யினரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

தலைமறைவாக உள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களை மீள இணைத்து செயற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கவும், நிதி உதவி வழங்கி ஆயுத போராட்டங்களில் ஈடுபடுத்தவும் வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் முயல்வது தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கில் வசிக்கும் தமிழ் மக்கள் மிகவும் நல்லவர்கள். நான் பல தடவை அங்கு சென்று வந்துள்ளேன். அவர்களுடன் உரையாடியுள்ளேன். உதவிகளும் வழங்கியிருக்கிறேன். தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றியது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச ரீதியிலும் புகழ் பெறும் வகையில் மஹிந்த சிந்தனையே அரசாங்கத்தின் கொள்கை






தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் புகழ்பெறக் கூடிய வகையில் மாணவர்கள் தமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே தமது பேரவா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.

நேற்றைய தினம் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற 2011 ம் ஆண்டிற்கான பாட நூல் பகிர்ந்தளிக்கும் தேசிய நிகழ்வில் கொழும்பிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தின் மூலம் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியதுடன் அவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்;

பிள்ளைகளே! நீங்கள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் பாடசாலை நூல்கள் உங்களுக்கான பெரும் வரப்பிரசாதமாகும். உலகிலேயே கொள்ளையிட முடியாத சொத்து அறிவும் கல்வியும் மட்டுமே. ஆதலால் நீங்கள் சிறப்பாகக் கற்க வேண்டும்.

எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உங்கள் புகழ் ஓங்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் பெற் றோர்களை மறந்துவிடக் கூடாது. உங்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்க ளையும் மறக்கக் கூடாது.

அதே போன்று தாய் நாட்டையும் மறந்து விடக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை மனதிற் கொள்ளுங்கள். உங் கள் அனைவருக்கும் சுபீட்சமான எதிர் காலம் உருவாகட்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புலம் பெயர்ந்தோரை பலிக்கடாவாக்குகிறது பிரிட்டிடி; அரசு






பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் புலம்பெயர் தமிழர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறார்க ளென்பது, ஜனாதிபதிக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மூலம் புலனாகுவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கான முழுப் பொறுப்பையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்க வேண்டுமென்றும் பிரதியமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டிருந்தால், ஜனாதிபதி உரையாற்றித் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்க முடியுமென்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘ரூபவாஹினி’ தொலைக்காட்சி சேவையின் நடப்பு விவகாரப் பிரிவினரால் தயாரித்து வழங்கப்படும் ‘சதுரங்கம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்து ள்ளார். அவர் மேலும் கூறு கையில்,

‘ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் முற்றிலும் தனியாருக்குச் சொந்தமானது அல்ல. 40% -50% அரசு மானியத்தில் இயங்குகிறது. எனவே, ஆர்ப்பாட்டம், நடந்துவிட்டது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கூறிச் சமாளிக்க முடியாது. இது தாக்கத்தை மட்டுமல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.

ஏகாதிபத்திய அரசுகள் காலா காலமாக எவ்வாறு பிரச்சினைகளை உருவாக்கினார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆகவே, ஆளுங்கட்சி எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து பார்க்கவேண்டும்.

மேற்கத்திய சமூகம் தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் இந்தத் தருணத்தில், ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். வன்முறைகளில் மீண்டும் ஈடுபட முடியாது. மேற்கத்தைய சமூகம் தமிழ் மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரிட்டன் சென்றபோது புலம்பெயர் சமூகத்தினரைச் சந்திக்கச் செய்திருக்கலாம். ஜனாதிபதி வெளிப்படையான மனதுடன் செயற்படுபவர். பிரிட்டிஷ் அரசின் அனுமதி இல்லாமல் வன்முறையில் ஈடுபட முடியாது. இதனை அரசு நினைத்தால் தடுத்திருக்கலாம்.

நாட்டின் தலைவர் வரும்போது அவமதிப்பதை ஏற்க முடியாது. வெளிநாட்டிலிருந்து எவராது பிரமுகர், அமைச்சர் வந்தால், அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்று விருந்தளிப்பவர் ஜனாதிபதி. அப்படியான ஒருவர் வந்தபோது பிரிட்டிஷ் அரசு பொறுப்பேற்றிருக்க வேண்டும். இலங்கை வாழ் மக்கள் இனியாவது ஒன்றுபட்டுச் செயற்படுவார்களென்று வேண்டுகோள் விடுக்கின்றேன். இலங்கை வாழ் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகப் புலம்பெயர் தமிழர்கள் செயற்படுகிறார்கள் என்று கூறுவே முடியாது.

தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவாகி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்கள். அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவோ வேறு யாராகவோ இருக்கலாம். அவர்களுக்குத் தான் அந்தக் கடப்பாடு உண்டு. புலம்பெயர்ந்த சிலர் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். நாடு கடந்த அரசு, பிரதமர் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதனால், பாதிப்பும் தாக்கமும் இலங்கை வாழ் தமிழர்களுக்குத் தான்.

இலங்கை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தில் தங்கியிருக்க வேண்டுமென அந்த நாடுகள் எதிர்பார்க்கின்றன. எனினும், இலங்கை தனித்துவமான தந்திரோபாய பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்கின்றது. இலங்கை பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், புலம்பெயர்ந்தவர்களை மேற்குலகம் தூண்டிவிடுகின்றது.

தேர்தல் நலனுக்காக எமது மக்களைத் திசை திருப்புவதற்கு அனுதாபப்படுகிறார்கள். போர்க்குற்றம் வீடியோ எனக் காண்பித்து மக்களைத் தூண்டி விடுகிறார்கள். பிரிட்டனில் தங்கியிருக்க வேண்டிய தேவை கிடையாது. இராஜதந்திர நட்பு ரீதியில் மட்டுமே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

இங்குள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சரியான தகவல்களை பிரிட்டனுக்கு வழங்கவில்லை. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கென 68% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கில் பாரபட்சமற்ற அபிவிருத்தி இடம்பெற்று வருகிறது. இதனை பிரிட்டிஷ் தூதுவர் எடுத்துக் கூறவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது சாதகமான மாற்றமொன்றை அறிவித்திருக்கிறது. இவ்வாறான தமிழ் அரசியல் கட்சிகளின் மாற்றத்தை புலம்பெயர் தமிழர்கள் பின்பற்றவேண்டும்.

எதிர்க் கட்சி தவறான பிரசாரத்தை வெளிநாடுகளில் மேற்கொள்ளக்கூடாது. இதற்குத் தமிழ் மக்கள் ஆளாகிவிடக்கூடாது. ஐ.தே. கட்சி தமிழ் மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பாராளுமன்ற விவாதங்களில் உரையாற்றுகிறது. தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதைப்போல் காட்டிக்கொள்கிறது.

ற்போதைய வளர்ச்சியில் தமிழ் மக்களும் பங்காளர்களாக மாறவேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். எதிர்காலத்தில் சிறந்த அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்து அனுப்புகள் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

8 டிசம்பர், 2010

1,60,000 பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்:மாவை எம்.பி


மீள்குடியேற்றப்படுவதற்கு இன்னும் 23 ஆயிரம் பேரே எஞ்சியிருப்பதாக அரசு கூறியிருக்கின்றபோதிலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தற்காலிக தங்குமிடங்களிலோ அல்லது உறவினர்,நண்பர்களது வீடுகளிலோ தங்கியிருக்கின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

மோசமான காலநிலை மழை வெள்ளம் ஆகியவற்றால் மீள்குடியேற்ற பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மக்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பசியிலும் பட்டினியிலும் அவல நிலைக்குள்ளாகியுள்ளனர். பாதுகாப்பான ஏற்பாடுகள் எதுவும் அங்கு இல்லை. எனவே அரசாங்கம் மீள்குடியேற்ற அமைப்பும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் காலநிலை மாற்றத்தால் முழு நாடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு கிழக்கில் அதிகமாகும். மீள்குடியேற்றப் பிரதேசங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பாரிய அவலம் காணப்படுகிறது.

இந்த நிலைமைகளை நாம் முன்னரே எடுத்துக்கூறியிருந்தோம். வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இவ்வாறான அனர்த்தம் வரும் என்பதையும் எனவே அதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியிருந்தோம்.

இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் வெள்ளத்தினாலும் மழையிலும் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்கள் இன்றி பசி பட்டினியுடன் அவலப்படுகின்றனர். இதனை இங்கு வேதனையுடன் தெரிவிக்கின்றோம், கடந்த 27 ஆம் திகதி வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.ஆனாலும் இவர்களுக்கு தேவையான வசதிவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இவர்களது இழப்புக்கள் குறித்து எந்த விதமான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இங்கிருந்து 26 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இங்கு இன்னும் 21 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்றப்படவிருக்கின்றனர். வடமராட்சி கிழக்குக்கான போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் 23 ஆயிரம் பேரே மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கூறிவருகின்றது. ஆனால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் இன்னும் முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவின் கேப்பாப்பிளவு என்ற இடத்தில் 300 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். ஆனால் இங்கு 7 கிலோ மீற்றர் தூரத்திற்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்படவில்லை. சம்பூரைச் சேர்ந்த சுமார் 6000 குடும்பங்கள் 5 வருடங்களாக அநாதரவாக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றனர். இவர்களும் மோசமான அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்விடயங்களில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தமிழகத்தின் கரையோரப் பிரதேசங்கள் இவ்வாறு இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் அங்குள்ள அரசு உடனடியாக கூடி ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இது இலங்கையிலும் பேணப்படவேண்டும் மழையின் பாதிப்புக்கு உள்ளாகின்ற வன்னி நிலப்பரப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியுடன் கூடி ஆராய்ந்து உடனடி தீர்வுகளையும் நிவாரணங்களையும் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது வடக்கு கிழக்கு கரையோரப் பிரதேசமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது. எனவே இதன் தொடர்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக விசேட ஆணைக்குழுவொன்றினை அமைத்து அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒருபுறத்தில் வசதிவாய்ப்புகள் நிவாரணங்கள் அற்ற நிலையில் இருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் பசி பட்டினி மற்றும் மழை வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்கிறேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விக்கிலீக்ஸ் ஸ்தாபகருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ஞேவிற்கு பிணைவழங்க பிரித்தானிய நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இவரை இம்மாதம் 14 ஆம் திகதிவரை தடுத்துவைக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய நேரப்படி நேற்று காலை 9.00 மணிக்கு கைதுசெய்யப்பட்ட ஜூலியன் அசாஞ்ஞே வெஸ்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் நேற்று நிறுத்தப்பட்டார்.

எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரின் சட்டத்தரணி இது சர்வதேச சதியெனவும் சுவீடன் மீது பிரியோகிக்கப்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே அந் நாட்டு நீதிமன்றம் இவருக்கு பிடியாணை விடுத்துள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு



அடைமழை காரணமாக இரணைமடுக்குளம் நிரம்பியுள்ளது. குளத்தின் பதினொரு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டு நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்பது அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வான்கதவுகளால் நீர் வெளியேறுவதை தென்னிலங்கையிலிருந்து வரும் பெருந்திரளான பொதுமக்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...