14 அக்டோபர், 2010

திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மேல் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த கைதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். திக்வல்ல சியம்பலாப்பே பகுதியைச் சேர்ந்த 62 வயதான கருணாரட்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாது: சிவாஜிலிங்கம்

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்ம் தெரிவித்தார்.

இன்று நிவித்திகல குக்குலகல பிரதேசத்துக்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த எம்.கே சிவாஜிலிங்கம்,

"நான் இன்று நிவித்திகல குக்குலகல பிரதேச மக்களை நேரில் சென்று சந்திதேன். இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இம் மக்கள் இங்கு தொடர்ந்து தங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை 10 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறியுள்ளதாகவும் தற்போதும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெருபான்மை இனத்தவரால் தாக்கப்பட்டுள்ளதோடு உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டதாகவும், எந்த ஒரு தமிழ் அமைச்சரும் வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்" என மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத்துப் பகிர்வு


யாழ். திரும்பியுள்ள சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் என்ற கருப்பொருளிலான பகிரங்க கருத்துப் பகிர்வு நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்துப் பகிர்வு நிகழ்வை யாழ். ஆய்வறிவாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் கருத்துரை வழங்க அனுமதிக்கப்படுவரென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சவூதி அரேபியாவுக்கு இலங்கையரை அனுப்புவதில் எவ்விதத் தடையுமில்லை


சவூதி அரேபியாவுக்கு இலங்கையர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதில் எவ்வித தடையுமில்லை. இரு அரசாங்கங்களுக்குமிடையில் அவ்வாறு எத்தகைய உத்தியோகபூர்வ முடிவு களுமில்லையென வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக முகாமையாளர் டி. பி. வீரசேகர தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சிலர்

மேற்கொண்டுவரும் பிரசாரங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்ட அவர் சவூதிக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

வருடாந்தம் இலங்கையிலிருந்து 60,000ற்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப் பிற்காக சவூதி அரேபியாவுக்கு பணியகத்தால் அனுப்பப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பல்வேறு தொழில் துறைகளில் பணிபுரிகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கும் சவூதி அரேபிய ஆட்திரட்டல் குழுவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்று தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாக அறிய முடிகின்றது. அது குறிப்பிடத்தக்க பிரச்சினையொன்றல்ல. இலங்கையர்களை வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கு இது எவ்விதத்திலும் எமக்கு தடையாக அமையாது.

இரு அரசாங்கங்களுக்கிடையில் அத்தகைய எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானங்களும் இல்லாத நிலையில் நாம் அதனைக் கவனத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது பற்றி ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு


எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு செயற் குழுவின் அமர்விற்குத் தலைமை தாங்கி கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரத்னசிறி விக்கிரமநாயக்க, ராஜித சேனாரத்ன, தினேஷ் குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, காமினி லொகுகே ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள் உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:-

தேசிய நெல் உற்பத்தி உள்ளிட்ட சகல விவசாய உற்பத்தி மேம்படுத்தலின் போதும் சர்வதேச சந்தைவாய்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சில காலம் கைவிடப்பட்ட நிலையிலிருந்த விவசாய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வசதிகளைச் செய்துள் ளது.

இதன்மூலம் விவசாயிகளுக்குத் தெளிவூட்டி நிரந்தரமான அபிவிருத்திக்கு விவசாயத்துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதும் முக்கியமாகும்.

முதலீட்டு சபையின் வரி மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து தோசைக்கடைகள் மற்றும் சனீஸ் ரெஸ்டூரன்களைக் கட்டியெழுப்பிய யுகத்தை நினைவுபடுத்திய ஜனாதிபதி, இனிமேலும் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி, முட்டை உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள் ளார்.
மேலும் இங்கே தொடர்க...

குத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் மஞ்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்து




இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 72 வருடங்களின் பின்னர் குத்துச்சண்டையில் முதலாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்றது.

56 கிலோகிராம் எடைப் பிரிவில் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கைக்கான முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.20 அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் சீன் மெக் கோல்ரீக் என்பவருடன் மோதினார். இந்தப் போட்டியில் 16-14 புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டினார்.

கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சு வன்னியாராச்சி (வயது 30)க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உடனடியாக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஊடாக ஜனாதிபதி உடனடியாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இப்போட்டிக்காக புதுடில்லி சென்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் சீ. பி. ரத்னாயக்கவும் மஞ்சுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பொதுநலவாய போட்டிகளில் 56 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை பெற்ற இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் 1933 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 56 கிலோ எடைப்பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

அதன்பின்னர் 1950 ஆம் ஆண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஞ்சுவுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தபோது

மஞ்சு வன்னியாராச்சி ஜனாதிபதியுடன் உரையாடினார். அதன் பின்னர் கருத்து தெரிவித்த மஞ்சு வன்னியாராச்சி விளையாட்டுத்துறைக்காக ஜனாதிபதி காட்டும் அக்கறை, ஆர்வம் தொடர்பாக தான் மிகவும் மகிழ்வதாக தெரிவித்தார்.

1995, 1996, 2004, 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் மஞ்சு வன்னியாராட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

13 அக்டோபர், 2010

மீள்குடியேற்ற பகுதியில் மற்றொரு வயோதிபர் யானை தாக்கி பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் தனது உயிரை காட்டு யானைக்கு பலி கொடுத்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற 70 வயது விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார்.

இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் : பிரபாவுக்கு மனோ மீண்டும் காலக்கெடு

எமது கட்சயில் இருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை.

இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திருத்தி கொள்வதற்கு பிரபா கணேசன் எம்பிக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானதாகும்.

இந்நிலையில் எமது கட்சியின் நிலைப்பாடுகளை உதாசீனம் செய்து தன்னிச்சையாக ஒழுங்கை மீறுபவர்கள் மீது உறுதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கட்சியை உதாசீனம் செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தொடர்பில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடம் கிடையாது.

இந்நிலையில் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முடிவின்படி கட்சி அங்கத்துவத்திலிருந்து ஏன் நீக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டு பிரபா கணேசனுக்கு இன்று கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஷிராந்தி ராஜபக்ஷ - மலேஷிய ராணி நேற்று சந்திப்பு

இலங்கை முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று மலேஷிய ராணி டுவான்கு நுர் ஸஹிரனை நேற்று மாலை சந்தித்தார். கோலாலம்பூர் இஸ்தானா நெகாரா ராஜ மாளிகையில் இச்சந்திப்பு நிகழ்ந்தது.

ஷிராந்தி ராஜபக்ஷ முதல் பெண்மணிகள் கலந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ள மலேஷியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் இலங்கையர் கைது : கனேடியத் தமிழர் பேரவை கவலை

தாய்லாந்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட 155 இலங்கையரின் நிலை தொடர்பாக கனேடியத் தமிழர் பேரவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

இவர்கள் அனைவரும் அகதிளுக்கான சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்புத் தேவைப்படும் அகதிகள் என்றே நம்பப்படுகின்றது. மீண்டும் தங்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படின் அவர்கள் அங்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாகக் கூடும். இதே அச்சம் அவர்களுக்கும் உள்ளது.

இது ஐக்கிய நாடுகள் சபையின் வதைகளுக்கு எதிரான சட்டத்தின் பிரகாரம் கனடாவுக்கு உள்ள கடப்பாட்டை மீறுவதாக உள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்ததிலிருந்து பாதுகாப்புத் தேடி தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புகலிடம் கோரிய ஒரு நாடாக தாய்லாந்து இருந்து வந்தது. இவர்களில் கூடுதலான தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கைது தொடர்பான விபரங்கள் சரிவர வெளிவராத நிலையில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் கனேடியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு, தாய்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

"பன்னாட்டுப் பாதுகாப்பை வேண்டி நிற்கும் உண்மையான அகதிகளின் கைது தொடர்பான செய்தி எங்களுக்கு மிகவும் கவலை தருவதாக உள்ளது. இந்தக் கைதில் கனேடிய அரசாங்கத்தின் பங்கு இருக்குமாயின், நாம் மிகுந்த கவலையடைவோம் என்று குறிப்பிட்டார் கனேடியத் தமிழர் பேரவையின் தேசிய மட்டப் பேச்சாளரான டேவிட் பூபாலபிள்ளை.

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவர்கள் நியாயமாகவும், நீதியாகவும் நடத்தப்படுவதுடன் இலங்கைக்கு அனுப்பப்படுவதன் மூலம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடும் என்பதனால் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்குவதை உறுதி செய்வதற்காக பல்வேறு மனிதாபிமான நிறுவனங்களையும் கனேடியத் தமிழர் பேரவை தொடர்பு கொண்டுள்ளது.

கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள அகதிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் கனேடியத் தமிழர் பேரவை குரல் கொடுத்து வருகிறது.

மேலதிக விபரங்களுக்குஇ 416.240.0078 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இங்கே தொடர்க...