11 அக்டோபர், 2010

பொன்சேகா விடுதலை : கட்டுகஸ்தோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி கண்டி கட்டுகஸ்தோட்டை நகரில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

கண்டி மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கட்சியின் ஹரிஸ்பத்துவ கிளையினர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எச்.ஏ.ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஷாபி, எஸ்.எம்.பீ.டி. அல்விஸ், பூஜாப்பிட்டிய பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எம்.கலீல் உட்படப் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென்ற பல்வேறு விதமான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆர்ப்பாட்டத்தினால் கண்டி மாத்தளை வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் இன்று கறுப்புப் பட்டி போராட்டமும் கண்டனக் கூட்டமும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனை மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தலைநகரில் இன்று பாரிய கறுப்புப்பட்டி போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கொழும்பு ஹைட்பார்க் மை தானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும் இந்த கறுப்புப்பட்டி போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தில் கறுப்பு நிற உடையில் கலந்து கொள்ளுமாறு சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இந்த நாடே அறிந்துள்ளது. பல வழிகளிலும் பழிவாங்கப்பட்டுள்ள யுத்த வீரரான சரத் பொன்சேகாவை விடுதலை செய்து கொள்வதும் அவரது உரிமைகளைப் பாதுகாகத்துக் கொடுக்க வேண்டியதும் மக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

பொன்சேகாவுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதிலும் நாம் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் எமது போராட்டங்களையும் மக்கள் சக்தியையும் அரசாங்கம் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இடையூறுகளை ஏற்படுத்தி அடக்கி ஒடுக்கப் பார்க்கின்றது. அரசாங்கத்தின் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் ஜே.வி.பி. அடிபணிந்து போய் விடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடு முழுவதிலும் நாம் பொன்சேகாவுக்கு ஆதரவாக மக்கள் மகஜரை தயாரித்து வருகின்றோம். இதுவரையில் அந்த மகஜரில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சிகளும் மாற்றுத்தரப்புக்களும் பொன்சேகாவுக்காக குரல் கொடுத்து வருவதையும் அவரது சிறைத் தண்டனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதையும் காண்கின்றோம். இது உண்மையில் வரவேற்கக்கூடியது.

இருப்பினும் சில கட்சிகள் பொன்சேகாவையும் பாதுகாத்து ஜனாதிபதியையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. இது இயலாத காரியமாகும். எம்மைப் பொறுத்தவரையில் பொன்சேகா மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்ததாக மக்கள் சக்தியுடன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இன்று திங்கட்கிழமை மாலை 3.30க்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கறுப்பு போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த கறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வருமாறு சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சூப்பர் ஸ்டாரின் குப்பை படம்! பிரபல வில்லன் நடிகர் தாக்கு!!







கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் குப்பை படங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று பிரபல வில்லன் நடிகர் திலகன் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டரில் கலக்கிய திலகன் சமீப காலமாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரை நடிக்க விடாமல் மலையாள நடிகர் சங்கம் மற்றும் முன்னணி நடிகர்கள் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி :

நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே? உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும்.

அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது சொல்கிறேன்... கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.

மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.

கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். என்னை "அம்மாவில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள். சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள். நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன்.

ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு திலகன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு 9000 கோடி ரூபா செலவீடு

அம்பாறை மாவட்டத்தின் கடந்த ஐந்து வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 9,000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது.

மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற போதே இச் செலவினங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிதியின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, கல்வி, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் துறைகளில் 53,000 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ஏ.எல்.எம். அதாஉல்லா, ரிசாட் பதியுதீன், பி. தயாரட்ன, மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அபிவிருத்தி தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகப் பிரிவுகளும் 503 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளன. இந்த சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக 2016ம் ஆண்டை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து வருட அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் விவசாயத்திற்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. 2936 கோடி ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 34,486 விவசாயிகள் நன்மையடைந்துள்ளனர்.

2005ம் ஆண்டில் தேசிய நெல் உற்பத்தியில் 15.38 வீதத்தை அம்பாறை மாவட்டம் பெற்றுள்ளதுடன் 2010ம் ஆண்டில் அது 22.70 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் 2890 கோடி ரூபாவை அரசாங்கம் உரமானியத்திற்காக செலவிட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்ட மக்கள் முகம்கொடுத்த குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2552 கோடி ரூபா செலவில் 600 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மாவட்டத்தின் சமுர்த்தி அபி விருத்தி, கிராமிய பாதைகள் திட்டத்திற்கென தேவைப்படுகின்ற 120 மில்லியன் ரூபாயை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் இன்று உயர்மட்ட மாநாடு; ஆளுநர் தலைமை; அரச அதிபர்கள் பங்கேற்பு

வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்த மாநாட்டின் போது விரிவாக ஆராயப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ்பிள்ளை ஆகியோர் மாவட்டங்களில் முன்னெடுக்கப் பட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான பூரண அறிக்கைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அ’புரம் - வவுனியா ரயில் சேவை வழமைக்கு திரும்பியது






ரயில் பாதை திருத்த வேலைகள் காரணமாக கடந்த இரு தினங்களாக தடைப்பட்டிருந்த அநுராதபுரம் வவுனியா ரயில் சேவைகள் நேற்றிரவு முதல் வழமைக்குத் திரும்புயுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அநுராதபுரம்- வவுனியா பிரதான ரயில் பாதையில் சாவியபுரம் மிஹிந்தலை பகுதிகளில் மேற்படி பாதை சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென கடந்த 8ம் திகதி முதல் அநுராதபுரம் –வவுனியாவுக்கிடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இதற்கிணங்க கொழும்பு வவுனியா ரயில் சேவைகள் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப் பட்டிருந்தன.

ரயில் பாதை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்றைய தினம் இரவு ஏழு மணியுடன் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பிய தாக ரயில்வே பிரதி பொது முகாமை யாளர் விஜய சமரசிங்க தெரி வித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.கவும் எல்.ரீ.ரீ.ஈ.யுமே யுத்தநிறுத்த முறிவுக்கு பொறுப்பு ஓட்டமாவடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம்


யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும், எல்.ரீ.ரீ.ஈ.யுமே பொறுப்பு என ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் நேற்று (10.10.2010) நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளித்த சுயாதீன சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் வை.எல். மன்சூர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாத இயக்கமும் செய்து கொண்ட பிழையான ஒப்பந்தமும் அந்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சுதந்திரமும் அப்பாவிப் பொது மக்களையும் உயர் இராணுவ அதிகாரிகளையும் மதகுருமார், புத்தி ஜீவிகளையும் கொன்று குவிப்பதற்கும் கப்பம் அறவிடுவதற்கும் பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதற்கும் உறுதுணையாக இருந்தது.

வாழைச்சேனைக்கு சமையல் வேலைக்காகச் சென்றோர் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். வாழைச்சேனை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலை எரிக்கப்பட்டன. இத்தனைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போதே இவை நடந்தன.

நாட்டின் பாதுகாப்புக்கு விரோதமானதும் முஸ்லிம் சமூகத் தின் புறக்கணிப்புக்கு ஏதுவானது மாக ரணில் விக்கிரமசிங்க தலை மையிலான அரசாங்கத்தினதும் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளினதும் உடன்படிக்கையும், செயற்பாடுக ளும் அடக்கு முறைகளும் இருந் தன. யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் முறையற்ற செயற்பாடு களும் போர் நிறுத்த உடன்படிக்கை செயழிலப்புக்கு காரணமாக அமைந்தன.

கல்குடாத் தொகுதி முஸ்லிம்களுக் கும், தமிழர்களுக்கும் இடையில் பல கசப்பான சம்பவங்கள் ஏற்படு வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாக இருந்தது.”

இவ்வாறு அவர் சாட்சிய மளித்தார்.

கடத்தப்பட்டு காணாமல் போனோர் கடத்தப்பட்டு சிறையி லுள்ளோர் மற்றும் காணிப் பிரச்சினை தொடர் பான அறுநூறு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் முப்பது பேரின் நேரடி வாக்கு மூலங்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எம். பி. பரணகம, கரு கஹவத்த, ரொஹான் பெரேரா, சீ. சண்முகம், மனோகரி இராமநாதன் ஆகியோர் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

இதன்போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப் பற்று மத்திவாழைச்சேனை, கோற ளைப்பற்று வாழைச்சேனை, கோற ளைப்பற்று வடக்கு வாகரை போன்ற பிரதேசங்களில் இருந்து பொது மக்கள் சாட்சியங்களை அளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பலகோடி ரூபா செலவில் முதலீடு; ஆறு முன்னணி நிறுவனங்கள் முன்வருகை ஆளுநர் சந்திரசிறி வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்தித்துப் பேச்சு


வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள ஆறு முன்னணி தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும், முன்னணி தொழிற்சாலைகளின் முக்கிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வட மாகாணத்தில் முதலீடு செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, இணக்கம் காணப்பட்டுள்ளது.

வட பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவுற்று வரும் நிலையில் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டும் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையிலுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை பிரதேசத்தில் சுமார் 100 கோடி ரூபா செலவில் ஒமேகா லைன் என்ற நிறுவனம் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்காக வட மாகாண சபை 10 ஏக்கர் நிலப்பரப்பு காணியை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த மாதமளவில் இந்த தொழிற்சாலையை நிறுவு வதற்கான நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றும் சுட்டிக் காட்டினார்.

ஹைதராமணி நிறுவனம் வவுனி யாவின் நெலுங்குளத்திலும், மாஸ் ஹோல்டிங் நிறுவனம் ஓமந்தை யிலும், ஒரிட் அபரல் நிறுவனம் செட்டிக்குளத்திலும், பிரன்டிக்ஸ் நிறுவனம் வவுனியா அல்லது மன்னாரிலும் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளன.

ட்ரைஸ்டார் நிறுவனம் கிளி நொச்சி நகரில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவு வதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகளை ஆரம்பித் துள்ளது என்றும் ஆளுநர் குறிப் பிட்டார். வட மாகாண அபிவிருத் திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொருளாதார அபி விருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்க மைய இந்த நடவடிக்கை முன்னெ டுக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபை ஊடாக மேற்படி தொழிற்சாலைகள் தமது செயற்பாடுகளை முன்னெடுக் கவுள்ளதாக தெரிவித்த ஆளுநர் இதற்குத் தேவையான சகல ஒத்து ழைப்புக்களையும் வட மாகாண சபை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் இவர்களுக்குத் தேவையான புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிகளின் பாரியார் மாநாடு கோலாலம்பூரில் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பயணம்


மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஜனாதிபதிகளின் பாரியார் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று மலேசியா பயணமானார்.

நேற்றுக்காலை 7.00 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ பயணமானதுடன் முற்பகல் 11 மணியளவில் அவர் மலேசியாவின் கோலாலம்பூர்

விமான நிலையத்தைச் சென்றடைந்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித் தது.

மலேசியாவில் நடைபெறும் ஜனாதி பதிகளின் பாரியார்கள் மாநாட்டுக்கு மலேசியப் பிரதமர் மொகமட் நஜீட் நுன் அப்துல் ரஸாக் தலைமை தாங்கவுள்ளார்.

இம்மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த ஜனாதிபதிகளின் பாரியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையிலிருந்து முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுடன் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பாராளுமன்ற உறுப்பினர் கமலா ரணதுங்க ஆகியோரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வுள்ளனர்.

‘இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் மேற்படி மாநாடு மலேசியாவில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் இடங்களில் ஒரே நாளில் டெங்கு நுளம்பு சோதனை




4,464 பேர் மீது வழக்கு: 11,002 எச்சரிக்கைகள்

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (09) டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய அனைத்து இடங்கள், வீடுகள், மற்றும் மக்கள் வசிக்கும் இடங்கள் என 2 இலட்சத்து 85 ஆயிரத்து 918 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 67 ஆயிரத்து 798 இடங்கள் நுளம்புகள் பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டன.

இதில் 11 ஆயிரத்து 02 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில் 4464 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகமான இடங்கள் வட மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 ஆயிரத்து 525 இடங்களில் 15 ஆயிரத்து 588 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன. 2947 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 872 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 17 ஆயிரத்து 655 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 4748 இடங்கள் டெங்கு பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன. 1138 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் 725 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

வட மாகாணத்தில் 17 ஆயிரத்து 365 இடங்கள் பரிசோதனைக்குள்ளாகின. இதில் 2391 இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டன.

988 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட அதேவேளை அவ்வாறான இடங்களின் உரிமையாளர் களான 102 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காவது தினமான நேற்று (10) நாட்டின் அனைத்து சுடுகாடுகள் உள்ளிட்ட பொது இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...