23 செப்டம்பர், 2010

நாடாளுமன்ற பேரவைக்கான பெயர்கள் சபாநாயகரினால் இன்று அறிவிப்பு

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றப் பேரவைக்கான பெயர் விபரங்களைச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

18 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதையடுத்து தங்களுடைய பிரதிநிதிகளின் பெயர்களை சிபாரிசு செய்யுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதமர் தி.மு. ஜயரட்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு 13 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தார். பேரவைக்கான பிரதிநிதிகளின் பெயர்களைக் கடிதம் கிடைக்கப் பெற்ற ஒருவார காலத்திற்குள் சிபாரிசு செய்ய வேண்டும் என்றே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருத்தத்தின் பிரகாரம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தங்களின் பிரதிநிதிகளை தமது இனத்தை சாராத ஒருவரின் பெயரையே சிபாரிசு செய்யவேண்டும்.

நாடாளுமன்ற பேரவைக்கென எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டதரணி எம்.ஏ. சுமந்திரனின் பெயரை சிபாரிசு செய்த போதிலும் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.

இந்நிலையில் வழங்கப்பட்டிருந்த ஒருவார காலம் நேற்று புதன்கிழமையுடன் நிறைவடைந்து விட்டது. தான் சிபாரிசு செய்ய வேண்டியவரின் பெயரை பிரதமர் தி.மு ஜயரட்ன சபாநாயகருக்கு நேற்று புதன்கிழமை அறிவித்ததாக அவரது காரியாலய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. பிரதமரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெயர் விபரத்தையே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார். நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குக் கூடுவதுடன் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும்.

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் தங்களுடைய பிரதிநிதிகளின் பெயர்களைச் சிபாரிசு செய்யாவிடின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவைக்கு இரண்டு பிரதிநிதிகளின் பெயரை சிபாரிசு செய்து நாடாளுமன்ற பேரவையை நிறுவமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர் நாடாளுமன்ற பேரவையை நிறுவுவதற்கான அனுமதியை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு தமிழ்த் தலைவர்களே காரணம் : ஈரோஸ் தலைவர்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வடக்கு, கிழக்கிலிருந்து 18 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகினர்."

இவ்வாறு ஈரோஸ் கட்சித் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன்(ஈரோஸ் பிரபா) குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஈரோஸ் தலைமையகத்தில் நேற்று (22.09.2010) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இக்கருத்தை முன்வைத்தார். இச்சந்திப்பில் தொடந்து பேசிய அவர்,

"எமது தலைவர்கள் காட்டிய பிழையான வழிகாட்டல்களினால் 30 வருடகால எமது கலை, கலாசாரம், கல்வி உட்பட வாழ்வாதாரமும் பின்னோக்கியுள்ளது.

அத்தகைய பிழைகளை ஒருபோதும் ஈரோஸ் அமைப்பு விடப்போவதில்லை. வெறுமனே அரசுக்கெதிராக கூச்சல் போடுவதால் தமிழ்ப் பேசும் மக்கள் எதனையும் அடைந்து விடமுடியாது. அதனால் தான் எமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறது.அதற்காக நாங்கள் அரசின் கைக்கூலிகள் அல்லர். எமக்கு அரசியல் இரண்டாம் கட்டம்தான்.

தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பட வேண்டுமென்பதுதான் எமது இலக்கு. கௌரவமான, காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல்களில் இறங்குகிறோம். எதிர்காலத்திலும் தேர்தல்களைச் சந்திக்க தயாராகவுள்ளோம்.

நாம் ஒருபோதும் தமிழ் மக்கள் என்று மாத்திரம் சிந்திப்பதில்லை வடக்கு கிழக்கில் எந்தத் தீர்வாக இருந்தாலும்,அது தமிழ்ப் பேசும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும்"என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்புத் தரப்பினர் மீதான இடம்பெயர்ந்தோரின் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் விசாரணை

இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் திங்கட்கிழமை (20.09.2010) விசாரணைகளை மேற்கொண்டது.

புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தபோது தம்மை இராணுவத்தினர் தாக்கியதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவத்தினரின் விளக்கத்தை அறிந்துகொள்ளும் முகமாக முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகளிடம் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான குழுவினர் விசாரதீ ணகளை மேற்கொண்டனர்.

தாம் தப்பி வர முயன்ற போது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதேநேரம், இராணுவத்தினர் புலிகள் மீது நடத்திய பதில் தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி, கணடாவளை, பூநகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவத்தினரின் நிலைப்பாட்டை கேட்டுத் தெரிந்துகொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, தற்போது இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், நேரில் வந்ததால் உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் தலைவரது கேள்விகளுக்குப் பதில் அளித்த கேணல் ஆரியசிங்க, ‘பொதுமக்களின் நிலைகளைத் தெரிந்துகொள்வதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் இலக்குகளைத் தெரிவுசெய்தோம். ஆனால், யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்வது கடினமானது.

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியதால் இராணுவத்தினருக்குப் பலத்தசேதம் ஏற்பட்டது. நாம் ஜனவரி மாதம் முல்லைத்தீவைக் கைப்பற்றினோம். அப்போது 72407 பொதுமக்கள் வந்தார்கள். 4 பேர் உயிரிழந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் இருந்த புலிகள் நடமாடும் குண்டுத் தொழிற்சாலையை வைத்திருந்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் சொத்துக்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளித்த 59ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, எந்தவொரு தனியார் சொத்தையும் இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

முன்பு முகாமில் இருந்து மீளக்குடியமர வந்தவர்கள் மற்றுமொரு முகாமில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதிலும், தற்போது அவர்கள் நேரடியாகத் தமது சொந்த வாழ்விடத்திற்கு வருகை தருவதாகத் தெரிவித்தார்.

மீனவர்களை ஓர் அமைப்பாக செயற்படுத்த வழியேற்படுத்தும் வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் உள்ளூர் மீனவர்களுக்கு மட்டுமே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம், காலப்போக்கில் சந்தை வாய்ப்பு சீரானதும், ஏனையவர்களும் போட்டிபோட மீனவர்களின் உழைப்புக்கேற்ற ஊழியத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய அரசின் உதவியில் வீட்டுத் திட்டம் காணிகளை பார்வையிட இந்திய உயர் மட்டக்குழு வன்னி விஜயம்


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள வீடமைப்புத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட இந்திய உயர் மட்டக்குழு நேற்று வன்னி சென்றுள்ளது.

நேற்றுக் காலை கிளிநொச்சி பொன்னகர் பிரதேசத்தில் அறிவியல் நகர் வீட்டுத் திட்டத்திற்கான காணிகளை பார்வையிட்டு ள்ள மேற்படி குழுவினர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு பகுதிகளுக்குச் சென்று வீட்டுத் திட்டத்துக்கான காணிகளை பார்வையிடவுள்ளனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதம செயலாளர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட உயர் மட்டக் குழுவே கிளிநொச்சிக்கும் முல்லைத்தீவிற்கும் விஜயம் செய்து மேற்படி காணிகளை பார்வையிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50,000 வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப் படவுள்ளதுடன், முதற் கட்டமாக 2,000 வீடுகளை அமைப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்தில் அறிவியல் நகர் வீடமைப்புக் கிராமம் 125 வீடுகளுடன் அமையவுள்ளதுடன், கண்டாவளை, பளை, பூநகரி பிரதேசங்களை உள்ளடக்கியதாக 325 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கான காணிகளும் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளதுடன் விரைவில் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் முதற் கட்டமாக 200 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இவ்வீட்டுத் திட்டம் அமையவுள்ளதுடன், துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு கரைதுறைப்பற்று பிரதேசங்களில் இதற்கான காணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தேவநாயகம் நேற்றுத் தெரிவித்தார்.

இதற்கான காணிகளையே நேற்றும் இன்றும் கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் இந்திய உயர் மட்டக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். இவ்வீட்டுத் திட்டங்களுக்கான நிர்மாணப் பணிகள் இரண்டொரு வாரங்களில் ஆரம்பமாக வுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மதவாச்சி, நாச்சியாதீவில் கடும் காற்றால் 33 வீடுகள் சேதம்






அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள மதவாச்சி மற்றும் நாச்சியாதீவு பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 33 வீடுகள் பகுதியாகச் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்கடும் காற்று காரணமாக மதவாச்சி பிரதேசத்தில் 21 வீடுகளும், நாச்சியாதீவு பிரதேசத்தில் 12 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்காற்றினால் சேதமடைந்துள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களுக்குத் தேவையான நிவாரண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு தொடரும்






தற்போதைய சீரற்ற காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்குத் தொடரும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் பிரிதிக்கா ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள மீகொட பிரதேசத்தில் 177.3 மி. மீ. என்றபடி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இடி, மின்னலுடன் கூடிய மழைக் காலநிலை நிலவுவதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சீரற்ற காலநிலைக்கு தாழமுக்க நிலைமையே காரணம். இந்த நிலைமை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்க முடியும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவில் மீகொடவில் 177.3 மி. மீ., கொழும்பில் 124.3 மி. மீ. ஹங்வெல்லவில் 91.4 மி. மீ. கட்டுநாயக்கவில் 55.6 மி. மீ. என்றபடி அதிக மழை பெய்துள்ளது. என்றாலும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்துள்ளது.

தற்போது இடி, மின்னலுடன் மழை பெய்கின்றது. இச்சந்தர்ப்பங்களில் திறந்த வெளிகளில் இருப்பதையும், நடமாடுவதையும், குளங்களிலும், ஆறுகளிலும், நீராடுவதையும், உயரமான மரங்களுக்கு கீழே இருப்பதையும், மினிசாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்று வீச முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தின் பாதிப்பு காரணமாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை நோர்வே பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு




வடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தற்போது சமாதான சூழல் நிலவுவதாகவும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் துரிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ள நோர்வே அமைச்சர் எரிக்சோல்ஹெய்ம், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை நல்ல நோக்கத்துடன் பார்க்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் தமது நிலைப்பாட்டிலேயே தொங்கிக் கொண்டிருக்காமல் பாராளுமன்றத்திற்கூடாக ஜனநாயக ரீதியில் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின் போது வட கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அதேவேளை நோர்வே அரசாங்கம் நோரூட் நிறுவனத்தினூடாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நோர்வே பிரதமருக்கு ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையில் அமைதிச் சூழல் நிலவுவதுடன், நாட்டின் நெடுஞ்சாலைகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோர்வே வர்த்தக சமூகத்தினர் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா, சஜித் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மொழி மூல பிரிவில் தம்பிலுவில் மாணவி சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்








புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல பிரிவில் முதலிடம் பெற்ற தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா (193 புள்ளிகள்) நேற்று தினகரனுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தான் தினமும் அதிகாலையில் எழுந்து படித்து வருவதாகவும் தனக்கு பெற்றோரும் வகுப்பாசிரியரும் அதிகம் ஊக்கமளித்ததாகவும் சுபதா கூறினார்.

தனது வெற்றி குறித்து தினகரன் வாசகர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட சுபதா மேலும் கூறியதாவது :-

‘அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும், அதிபரும் தந்த ஊக்குவிப்பு காரணமாகவே என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது.

பாடசாலை படிப்புக்கு மேலதிகமாக பகுதி நேர வகுப்புகளுக்கும் சென்றேன். பாடசாலை கல்வியைப் போன்றே பகுதி நேர வகுப்புக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாகத் தெரிவானேன். மருத்துவராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால ஆசையாகும்’ இவ்வாறு சுபதா கூறினார்.

சுபதாவின் தந்தை மகேந்திரன் மாலவன் கூறியதாவது :-

மகள் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தே இந்தப் பெறுபேற்றைப் பெற்றார். அவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் வருவார் என்று எதிர்பார்த்தோம். 195 புள்ளிகளை விட அதிக புள்ளிகளை பெறுவார் என்று நினைத்தோம் ஆனால் 193 புள்ளிகள் கிடைத்தது மகிழ்ச்சியே.

சிறுவயது முதல் மகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். ஏனைய பிள்ளைகளைப் போன்று மாலையில் விளையாடினார். இரவிலும் காலையிலும் படித்தார். சுபதாவின் தாயார் சிவசுப்பிர மணியம் உமையாளும் மகளின் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாலவன், உமையாள் தம்பதியின் ஏகபுதல்வியே சுபதா என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் முழுத்திருப்தி

நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்தவிடம் ராதிகா குமாரசுவாமி பாராட்டு

ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள் ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத் தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தை யொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பில் அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆயுத மோதல்களற்ற சிறுவர் அபிவிருத்திக் கான சூழல் இலங்கையில் கட்டியெழுப்ப ப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் தமது சிறுவர் பராயத்தை இழந்துள்ள சிறுவர்களின் புனர்வாழ்வு மற்றும் கல்விச் செயற்பாடுகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாடுகளுக்கு அரசு முன்னுரிமையளித்து வருவதாக இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இச்செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஐ. நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மேற்குலக ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோதும் இலங்கையில் சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உலகில் மோதல்களில் ஈடுபட்ட நாடுகளை விட திருப்திப்படக் கூடியதாக உள்ளதாகவும் எனினும் அதனை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ. நா. அமைப்பின் இலங்கைக் கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் சர்வதேசகிளைகளின் மகாநாடு









தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு அக்டோர்பர் 30 ,31ம் திகதிகளில் ஜேர்மன் நகர் ஸ்ருட்காட்டில் உத்தியோகப+ர்வ அழைப்பிதல் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

-மகாநாட்டு ஏற்பாட்டு குழு
தொடர்புகட்கு: 0713130722
ploteint@gmail.com
மேலும் இங்கே தொடர்க...