28 மே, 2010

இலங்கையில் அமெரிக்க பிரஜைகளுக்கான பயண எச்சரிக்கை உடனடி ரத்து

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதையடுத்து அமெரிக்கா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ரத்துச் செய்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த புதன்கிழமை விடுத்துள்ளது.

‘2009 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைக்காக விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கையை 2010 மே 26 ஆம் திகதி அமுலாகும் வகையில் ரத்துச் செய்யப்பட் டுள்ளது’ என்று ராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 மே 18 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் தமிஸழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பிரகடனம் செய்தது. யுத்தம் முடிவுற்றதாக பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து புலிகள் இயக்கம் கொழும்பிலோ அல்லது இலங்கையின் வேறு எந்த இடத்திலோ எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று ராஜாங்க திணைக்களத்தின் அறிக்கைகளில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மோதல் முடிவுற்ற சில தினங்களில் இலங்கையில் சுற்றுலாப் பயணத்துறை முன்னேற்றம் காணத் தொடங்கியது. அது முதல் சுற்றுலாத்துறை தொடர்ந்து அபிவிருத்தியடைந்து வரும் நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நடந்து முடிந்த சில மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் தலைவனின் நாற்பதாண்டு அரசியல் நினைவுத் தடங்கள் மர்லின் மரிக்கார்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் வாழ்வில் பிரவேசித்து நேற்று (27ம் திகதியுடன்) நாற்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1970ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி பாராளுமன்ற உறுப்பினரானதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்வு ஆரம்பமானது. தனது 24வது வயதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி வேட்பாளராக பெலியத்த தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் வாழ்வில் கட்டம் கட்டமாக வளர்ச்சிப் படிகளில் காலடி பதித்தார்.

ஸ்ரீல.சு. கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி 1994ம் ஆண்டில் ஆட்சி பீடமேறிய போது அந்த ஆட்சியில் தொழிலமைச்சராகவும் அதன் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்தார். இக்காலப் பகுதியில் தொழிலாளர்களதும் மீனவ சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக அளப்பரிய பல வேலைத் திட்டங்களை அவர் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2002-2004ம் ஆண்டு காலப் பகுதியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் விமோசனத்திற்காகத் தொடராகக் குரல் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பிரதமராக நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கமநெகும, மகநெகும திட்டங்களை அவர் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். வீதிகளை கொங்கிஹட் போட்டு செப்பனிடும் முறை நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதன் பின்னர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அளித்த சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றியமை, சார்க் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றமை, முப்பது வருட பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமை, ஜீ.15 அமைப்பின் தலைமை என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தில் குறிப்பிடக் கூடிய சிறப்பம்சமாக உள்ளன.



மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பு மாற்றத்திற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அங்கீகாரம் அலரி மாளிகையில் ஜூன் 7இல் வருடாந்த மாநாடு



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரு டாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜூன் மாதம் 7 ஆம் திகதி அலரி மாளி கையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் கூடிய போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சி யின் சிரேஷ்ட உபதலைவர்களில் ஒருவரும், மேல் மாகாண ஆளுநரு மான அலவி மெளலானா நேற்றுத் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இம்முறை நடைபெறவுள்ள வரு டாந்த பொதுக் கூட்டத்திற்கான நிக ழ்ச்சி நிரல் தயாரிப்பது தொடர்பாக ஆராய்வதற்கென கூட்டப்பட்ட இந்த மத்திய குழுக் கூட்டத்தின் போது பல்வேறு அரசியல், முக்கிய விடய ங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங் கம் அடுத்தடுத்து அமோக வெற்றி யீட்டியதையடுத்து அலரி மாளிகை யில் முதற்தடவையாக இந்த மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளதால் இம்முறை பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் நாட்டினதும், மக்களி னதும் நலனை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு உட்பட பல்வேறு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வுள்ளது.

அரசியலமைப்பு மாற்றங்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள், பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன் வைக்கவுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்ட த்தின் போது விரிவாக ஆராயப்பட் டதுடன் அதற்கான அங்கீகாரத்தை யும் மத்திய குழு வழங்கியதாக ஆளுநர் அலவி மெளலானா குறிப் பிட்டார்.

அரசியலமைப்பு மாற்றங்கள், மறு சீரமைப்புக்கள், ஆணைக்குழுக்களின் நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக 7 ஆம் திகதி நடை பெறவுள்ள வருடாந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அரசாங்க ஊழிய ர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பாகப் பேசப்பட்டதாக தெரி வித்த அவர் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அடுத்து முன் வைக்கப்படவுள்ள வரவு - செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வத ற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த அதிமுக ஆட்சி, பழைய செயலகத்தில்'





ஜெயலலிதா
அதிமுக ஆட்சி புனித ஜார்ஜ் கோட்டையில்தான் -- ஜெயலலிதா
அதிமுக மீண்டும் அடுத்து வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தால், அரசு, பழைய தலைமைச் செயலகத்தில்தான் இயங்கும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்து அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்போது, புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் அதன் அரசு அமையாது என்றும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த புனித ஜார்ஜ் கோட்டையில்தான் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை
'பழைய கோட்டையில்தான் ஆட்சி'

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா, இதைத் தெரிவித்தார்.

இதன் மூலம், அதிமுக ஆட்சிக்கு வந்தால், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பயன்படுத்தாது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தமிழக அரசியலில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கட்சியிலிருந்து மூத்த பிரமுகர்கள் சிலர் திமுகவில் சேர்வது பற்றி அவர் பேசும்போது, கட்சியை விட்டுப் போன தலைவர்ளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தொண்டர்களை மையமாகக் கொண்ட கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்

கிளிநொச்சிக்கு மின்சார வழங்கல் திட்டம்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.

இந்த இரு நகரங்களுக்கும், தேசிய மின்வழங்கல் வலைப்பின்னல் ஊடாக அதிசக்தி வாய்ந்த 132 கிலோ வோட்ஸ் மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் இன்று கிளிநொச்சி நகரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 132 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள மின்சாரம் கிளிநொச்சியில் அமையவுள்ள மின் விநியோக நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள மின்விநியோக நிலையத்திற்கும் கிடைக்கும் என்றும், அந்த நிலையங்களில் இருந்து 33 கிலோ வோட்ஸ் மின்சாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும், யாழ் குடாநாட்டிற்கும் வழங்கப்படும் என்றும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு வருடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது வவுனியாவில் உள்ள மின்வழங்கல் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு நகரத்திற்கு மின்விநியோகம் வழங்குவதற்கான இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மின்பிறப்பாக்கிகள் ஜெனரேற்றக்கள் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கிளிநொச்சி வைபவத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள், இந்த மின்விநியோகத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியுதவி வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்ற அதேவேளை, வடக்கிற்கு முழுமையான மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. இதேபோன்று வீதிகளை அமைத்தல், சுகாதார வசதிகள், பாடசாலைகளை ஆரம்பித்தல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

27 மே, 2010

சரத் பொன்சேகாவிற்கெதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் ஆரம்பம்



இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பதவிக் காலத்தில் சட்டவிரோதமான ஆயுதக் கொள்வனவுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்காகவே இந்த மூன்றாவது நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணை இம் மாதம் 24 ஆம் திகதியன்று இடம்பெற்ற போது இரண்டாவது நீதிமன்ற விசாரணைகளை ரத்துச்செய்யமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா மனுதாக்கல் செய்திருந்தார். எனவே இந்த விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி; வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொன்சேகாவுக்கு எதிராக மூன்றாவது இராணுவ நீதிமன்றமும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழீழம் தொடர்பாக பிரசாரம் செய்த இருவர் கைது

நாடு கடந்த தமிழீழம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் பிரசாரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டிருப்பு மற்றும் எருவில் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கல்முனை மற்றும் களுவாஞ்சிக்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இருவரும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்படி மக்களிடம் பிரசாரம் செய்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்

வவுனியாவுக்குச் சென்ற தனியார் பஸ் விபத்து: 50 பேர் காயம்
கொழும்பிலிருந்து வவுனியாவிற்குச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று அநுராதபுரம் பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் 50 பேர் காயமடைந்ததோடு இவர்களில் 28 பேர் படுகாயங்களுக்குள்ளானதாகவும் இவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குழந்தை கடத்தல் வழக்கில் பாதிரியார் கைது




கிருஷ்ணகிரி : குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, மேலும் ஒரு பாதிரியார் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியில், மூன்று மாத ஆண் குழந்தை மற்றும் மூன்று வயது சிறுவன் ஆகியோரை கடத்திய, தனலட்சுமி (35) மற்றும் சென்னை கிரிஜா, கணவர் சிவா, ராணி மற்றும் பாதிரியார் அல்போன்ஸ் சேவியர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட இரு சிறுவர்களை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையை சேர்ந்த, பாதிரியார் செல்வம் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவலின்படி, கிரிஜாவை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் மன்றத்தில், மனுதாக்கல் செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க, இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்கள் அபிவிருத்தி

கட்டுநாயக்க, இரத்மலானை விமான நிலையங்கள் உட்பட மேலும் 13 உள்ளூர் விமான நிலையங்களை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றதுடன் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விமானப் பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயற்திட்ட மீளாய்வு நிகழ்வு அலரி மாளிகையில் நடை பெற்ற போது மேற்படி விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப் பட்டன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 23 விமான சேவை நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்கள் வந்து போகின்றன. 46 மார்க்கங்கள் ஊடாக இச்சேவைகள் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் அமைதிச் சூழலில் உல்லாசப் பிரயாணிகளின் வருகை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் தொகையும் ஐம்பது வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் வருடத்திற்கு 4.2 மில்லியன் என்ற வீதத்திலேயே மக்கள் விமான நிலையத்தை உபயோகப்படுத் தியுள்ளனர். எதிர்வரும் 2012ம் ஆண்டில் இதனை 6 மில்லியனாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தியின் கீழ் விமான நிலைய போக்குவரத்துக்கான விசேட சொகுசு ரயில் சேவை, தீர்வையற்ற வர்த்தக நிலையங்கள் விமானங்களுக்கிடையில் மாறும் பயணிகளுக்கான ஹோட்டல் வசதிகளை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் அம்பாந்தோட்டை மத்தள புதிய விமான நிலையம் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. வருடத்திற்கு ஒரு மில்லியன் பிரயாணிகள் உபயோகப்படுத்தும் வகையில் சகல வசதிகளையும் அங்கு ஏற்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

3500 மீற்றர் நீள ஓடு பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற் கட்டமாக 10 விமானங்கள் தரித்து நிற்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. சர்வதேச எட்டு விமான மார்க்கங்களை உபயோகிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதி பெறப்பட்டுள்ளன. அத்துடன் இத்திட்டத்தின் சமகாலத்தில் இரத்மலானை உட்பட 13 உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...