18 மே, 2010

அடை மழை காரணமாக இராணுவ வெற்றி நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளது

அடை மழை காரணமாக இராணுவ வெற்றி நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளது
பெய்து வரும் அடை மழையால் கொழும்பில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ ஒத்திகை நிகழ்ச்சிகள் பிற்போடப்பட்டுள்ளது .

கடந்த காலத்தில் காணப்பட்ட பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இராணுவ வெற்றியை கோலாகலமாகக் கொண்டாட இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் பெய்து வரும் அடை மழை காரணமாக பிற்போடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்கு ​காஷ்மீரைப் போல சுயாட்சி தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்



தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு,​​ காஷ்மீர் மாநிலத்தைப் போல சுயாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.​ ​

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் பா.ம.க.​ சார்பில் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.​ ​

​ சென்னை,​​ சின்னமலைப் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.​ கட்சி நிறுவனர் ராமதாஸ்,​​ தலைவர் ஜி.கே.​ மணி,​​ முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.​ மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.வினர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று,​​ மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி செலுத்தினர்.​ ​

​ அந்நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:​ ​

​ இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.​ ஆனால்,​​ தமிழினம் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை.​ தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற எழுச்சி உலகெங்கும் உள்ள பல கோடி தமிழர்களிடம் இப்போது காணப்படுகிறது.​ எனவே,​​ தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகியே தீரும்.​ ​

​ இப்போது உடனடித் தேவையாக இலங்கையின் வடக்கு,​​ கிழக்குப் பகுதிகளை ஒன்றிணைத்து,​​ சுயாட்சி அதிகாரம் பெற்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும்.​ அந்த சுயாட்சி என்பது இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும்.​ இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.​ ​

​ சுயாட்சி பெற்ற மாநிலம் என்பது தாற்காலிக ஏற்பாடாகவே இருக்க வேண்டும்.​ இனி இலங்கையில் சிங்களர்களும்,​​ தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை.​ எனவே,​​ தனித் தமிழ் ஈழமே இறுதித் தீர்வாக அமையும்.​​ இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக,​​ பா.ம.க.​ தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தன் கடமையைச் செய்து வந்துள்ளது.​ அந்தக் கடமை இனியும் தொடரும் என்றார் ராமதாஸ்.
மேலும் இங்கே தொடர்க...

கடந்த காலங்களில்

கடந்த காலங்களில் இனப்பிரச்சினையின் தீர்வுக்காகச் சாத்வீக வழியிலும் ஆயுதப் போராட்டமாகவும் மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், பிரச் சினையின் தீர்வுக்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழலாம். இரண்டு முயற்சிகளினதும் தோல்விக்கான காரண த்தை விளங்கிக்கொண்டால் தீர்வுக்கான வழி தெரியும்.

நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கையை வலியுறுத்தியதும் யதார்த்தத்துக்கு முரணான அணுகுமுறையைப் பின்பற்றியதும் தோல்விக்கான பிரதான காரணங்கள்.

இனப்பிரச்சினை ஆறு தசாப்தங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்காலப்பகுதியில் இடம்பெற்ற பல நிகழ்வுகள் இனங்களுக் கிடையிலான உறவை வெகுவாகச் சீரழித்துவிட்டன. இதனால் பரஸ்பர சந்தேகம் வளர்ந்திருக்கின்றது.

நிலையில், முழு மையான தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு யதார்த்தத்துக்கு முரணானது. இந்த நிலைப்பாடு பயனளிக்காதென்பது மாத்திரமன்றி, தீர்வு முயற்சியை வெகுவாகப் பின்தள்ளக்கூடியது என்பதையும் அனுபவத்தில் பார்த்துவிட்டோம்.

தனிநாடு நடைமுறைச் சாத்தியறமற்றது. சாத்வீக வழியிலோ ஆயு தப் போராட்டத்தின் மூலமோ அடைய முடியாதது. தனிநாட் டுக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் எவ்வளவு அழிவு கரமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இந்த ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததற்குப் பின்னரே தமிழ் மக்கள் தங்கள் வாழ்புலங்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களை இப்போராட் டம் அநியாயமாகப் பலிகொடுத்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களின் மரணத்துக்கு இதுவே காரணம். பெருவாரியான தமிழ் மக்கள் அகதி முகாம்களில் தஞ்சமடையும் நிலையைத் தோற்றுவித்ததும் இப்போராட்டமே.

இந்த அவலங்களைத்தான் ஆயுதப் போராட்டம் தமிழ் மக்க ளுக்குத் தந்தது. எந்தவொரு நன்மையையும் தரவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தையும் அச்சுறுத்தல் மூலம் திசை திருப்பினார்கள்.

இன்று அவர்கள் உள்ளூர் அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ஆக்கபூர்வ மான முறையில் அரசியல் தீர்வு முயற்சியை முன்னெடுப் பதற்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகின்ற நேரத்தில் பிரிவினைவாதிகளிடமிருந்து நாடுகடந்த அரசாங்கம் என்ற குரல் ஒலிக்கின்றது. இது முப்பது வருடங்கள் முயன்று தோற்றுப் போன தனிநாட்டு முயற்சியின் இன்னொரு வடிவம்.

முப்பது வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் அவலங்களுக்கும் இன்று நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்களும் பொறுப்பாளிகள். புலிக ளுக்கு இவர்கள் வழங்கிய நிதி இலங்கையில் தமிழ் மக்க ளுக்குப் பாதகமான முறையில் பயன்பட்டிருக்கின்றது.

ஒரு நாட்டில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அப் போராட்டத்தை அந்நாட்டில் தொடர முடியாத நிலையில் வேறொரு நாட்டுக்குச் சென்று கரந்துறை அரசொன்றை அமைத்துத் தங்கள் போராட்டத்தைத் தொடர்வதே இதுவரை உலகம் அறிந்த நாடுகடந்த அரசாங்கம்.

இலங்கையில் ஆயு தப் போராட்டம் நடத்திய பிரிவினைவாதிகள் யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். இன்று நாடுகடந்த அரசாங்கம் பற்றிப் பேசுபவர்கள் வெகு காலத்துக்கு முன் இலங்கை யிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு உலக நாடுகளில் தங்கள் வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக்கொண்டவர்கள். இவர் கள் எந்தக் காலத்திலும் இலங்கைக்குத் திரும்பி வரப் போவதில்லை.

நாடுகடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சி இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் பலன் தரப்போவதில்லை. இது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைத் திசை திருப்புவதற்கான ஒரு ஏற்பாடு.

தீர்வு முயற்சிகளைப் புலிகள் திசை திருப்பியதால் ஏற்பட்ட அவலங்களிலும் பின்னடைவு களிலுமிருந்து விடுபட்டுத் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்ற நேரத்தில், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தும் புலி ஆதரவாளர்கள் மீண்டும் திசை திருப்பல் முயற்சியில் இறங்கியிருக்கின்றார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி


16 பேர் காயம்; 65 வீடுகள் சேதம்
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரி ழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

எட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளா கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்மழையினால் மேல் மாகாணத் திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா - மினுவாங்கொட, கம்பஹா - ஜாஎல, கம்பஹா - உருதொட்ட, பெலும்மகஹா - வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.

இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன.

குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார்.

களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆயிரம் இளைஞர் யாழ். நகரில் இன்று பெற்றோரிடம் ஒப்படைப்பு






புனர்வாழ்வு நிலையங்களில் வசிக்கும் ஆயிரம் இளைஞர் யுவதிகள் இன்று 18ம் திகதி செவ்வாய்க்கிழமை பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த ஓராண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளு மாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் அனேகர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ-15 நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ




ஜீ-15 நாடுகளின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறும் ஜீ-15 நாடுகளின் 14வது உச்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க ஜீ-15 நாடுகளின் 15வது மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

தலைமைப் பொறுப்பைக் கையேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ; ஜீ- 15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்குத் தாம் வழிவகை செய்வதாக உறுதியளித்துள்ளார். இச்செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்புக் கிட்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜீ-15 மாநாட்டின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உயர் சம்பிரதாயங்களை கட்டிக்காத்த முன்னாள் தலைவரான ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நெஜாத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு






நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் கடந்த சில தினங்களான பெய்து வரும் கடும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜி-15 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு இப் பணிப்புரையை வழங்கி யுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக அம் மாவட்டங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. அதேநேரம் தாழ் நிலங்களிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் இம்மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பத்து இலட்சம் ரூபா படி நிதியொதுக்கீடு மேற்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய எடுக்கப்பட்டிருக்கும் துரித நடவடிக்கைகளின் ஓரங்கமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்நிதி அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் மாத்திரமல்லாமல் தேவைப்படும் பட்சத் தில் தற்காலிகமான தங்குமிட வசதிகளை செய்து கொடுக்குமாறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இந்த அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நிதி யொதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் துரித மாக நிவாரணம் பெற்றுக் கொடுப்பதுடன் வெள்ளப் பெருக்கு அச்சுறுத்தலை குறைப்பதற்காக தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழை நீர் வழிந்தோடவென கால்வாய் வசதியை ஏற்படுத்தவென மூன்று மாவட்ட செயலாளர்களுக்கு மேலும் ஒன்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சீரற்ற கால நிலையை கருத்தில் கொண்டு மக்களுக்கு துரித நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் அவசர ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

17 மே, 2010

இழப்புக்கான பதிவுத் திகதி கால எல்லை மேலும் நீடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளில் பாதிப்புக்குள்ளான வணிக, கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர், தமது இழப்புக்களுக்கான பதிவினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட வணிக-கைத்தொழில் வேளாலர் ஒன்றியத்தில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றிய செயலாளர் வே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் தமது இழப்புக்களைப் பதிவு செய்து பிரதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் முழுமை பெறாத மீள்குடியேற்றம் போன்ற காரணங்களையடுத்தே பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வணிக கைத்தொழில் வேளாண்மை சம்மேளனத்தின் வடக்கு கிழக்குக்கான ஆலோசகர் டபிள்யூ. ஜே, சூசைரெட்னம் விடுத்த பணிப்புரைக்கமைய இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இறந்தோரின் நினவுதினத்தைச் சீர்குலைக்கும் துண்டுப் பிரசுரம் : வவுனியாவில் வெளியீடு

வன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவு தின நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..

அந்தக் துண்டுப் பிரசுரத்தில், .

"எதிர்வரும் 17 ஆம் திகதி புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுத் தமிழ் மக்கள் விடுதலை பெற்ற நாள். எனவே இந்தத் தினத்தை, தமிழ் மக்கள் இறந்த தினமாகக் கூறி ஒரு சில தீயசக்திகள் துக்கம் அனுஷ்டிப்பு வாரம் எனப் பிரகடனப்படுத்தி, வியாபார நிலையங்களை மூடி ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. .

தமிழ் மக்கள் மரணித்ததை நினைவுகூருவதென்றால் வேறு தினத்தில் அதனை அனுஷ்டிக்க முடியும். ஆனால் தமிழ் மக்களை பல வருடங்களாகத் துன்புறுத்திய புலிகள் கொல்லப்பட்ட தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்விடுதலையின் பின், எமது மக்கள் தற்போது மீள் குடியமர்த்தப்பட்டு வருவதோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர்..

எனவே, இந்தச் சதி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது தமிழ் மக்களை மேலும் கஷ்டப்படுத்த முயற்சித்தால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் எனக் கவலையுடன் அறியத் தருகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்கக் குழுவில் எண்மருக்கு நியமனம்



யுத்த சூழலின் போது, நேரடியாக அல்லது மறைமுகமாக, மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தொடர்பாக ஆராய்வதற்கென 08 பேர் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த சூழலின்போது, மனித உரிமை மீறல் சம்பவங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்ட நபர்கள், குழுவினர் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட எவரும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீத்தா ரஞ்சன் டி சில்வா, டாக்டர் அம்ரித் ரொகான் பெரேரா, பேராசிரியர் மொகமட் தாஹிர் மொகமட் ஜிப்ரி, பேராசிரியர் கருணாரட்ன ஹங்வத்த, சந்திரபால் சண்முகம், ஹேவா மாத்தர கமகே சிறிபால பளிஹக்கார, (திருமதி) மனோகரி ராமநாதன், மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஆகியோரே மேற்படிக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தையடுத்து இவர்களுக்கான நியமனம் ஜனாதிபதியூடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...